பற்றற்ற இறைவனை பற்றுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil
7 மார்ச் 2024
தவக்காலம் 3ஆம் வாரம் - வியாழன்
எரேமியா 7: 23-28
லூக்கா 11: 14-23
முதல் வாசகம்
இஸ்ரயேல் மக்களுக்கு கடவுளுடைய வார்த்தைகளை எரேமியா இறைவாக்கினர் எடுத்துரைக்கிறார். இதில் அவர்களின் கீழ்ப்படியாமை, பிடிவாத குணம் மற்றும், அவர்களின் தீய உள்ளத்தின் படி கடவுளின் அழைப்புக்கு எதிரான வாழக்கைமுறையை எரேமியா இறைவாக்கினர் வாயிலாக கடவுள் வெளிப்படுத்துகிறார். இது இஸ்ரயேல் மக்கள் பற்றிய கடவுளின் புலம்பல் போன்றும் தோன்றுகிறது.
சுருங்கக் கூறினால், இப்பகுதியின் மையக் கருப்பொருள் கீழ்ப்படிதல் மற்றும் மனந்திரும்புதலுக்கான அழைப்பு ஆகும். இறைவன் தனது குரலைக் கேட்கவும், அவருடைய கட்டளைகளைப் பின்பற்றவும், அவருடைய வழிகளில் நடக்கவும் தாம் அழைத்துக்கொண்ட மக்களுக்கு அறிவுறுத்துகிறார்,
பல்வேறு இறைவாக்கினர் மூலம் அவர்களை வழிநடத்த இறைவன் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், மக்கள் அவருக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து, அவரோடு அன்புறவில் இணைந்திருக்கவில்லை.
நிறைவாக, தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத அவர்களை, ‘தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே’ என்று கடவுள் முத்திரை குத்துகிறார்.
நற்செய்தி:
இந்த பத்தியில், இயேசு ஒரு பேச்சிழந்த மனிதனிடமிருந்து பேயை விரட்டிய பிறகு பேச்சற்ற அவர் பேசினார். இந்த நிகழ்வை நேரில் கண்ட கூட்டத்தினர் வியந்துபோய், இயேசுவின் வல்லமையை அவர்களுள் சிலர் சந்தேகித்தனர்.
பேய்களின் தலைவன் என்று அவர்கள் நம்பிய பெயல்செபூலின் துணையால்தான் இயேசு அவ்வாறு செயல்படுகிறார் என்று கூறிக்கொண்டனர். பதிலுக்கு, இயேசு அவர்களின் சந்தேகத்தைத் தீர்க்கும் வகையில் தம் வாதத்தை முன் வைக்கிறார். அவர் பெயல்செபூலின் வல்லமையால் பேய்களைத் துரத்தினால், அது ஒரு முரண்பாடான செயல். ஏனென்றால் பேய் எப்படி இன்னொரு பேயிக்கு எதிராகச் செயல்படும். அப்படி நடந்தால் அந்த பேயின் அரசு உலகில் அழிந்தவிடும் அல்லவா? ஆம், அலகையின் அரசு தனக்குத்தானே பிளவுபட்டு, அதன் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமே என்றார். வாயடைத்துப் போனார்கள்.
மேற்கண்ட சிந்தனையை மேலும் விளக்க இயேசு மற்றுமொரு உவமையைப் பயன்படுத்துகிறார். வலிமையான வீரர் அரண்மனையைக் காவல் காக்கும்போது, அதன் பாதுகாப்பு உறுதியாக இருக்கும். ஆனால், அந்த வீரனைவிட மிகுந்த வலிமையுடையவர் ஒருவர் வந்து அவரை வென்றால் அனைத்தும் பாழாகும் என்று விவரித்தார்.
அவ்வாறே, வலிமைமிகு இயேசுவோடு இருக்கும் வரை நல்லதே நடக்கும். அவரைத் துறந்து, வேறோர் அந்நிய சக்தியை நம்பினால் அழிவு என்பது உறுதி என்பதைத் தெளிவுப்படுத்துகிறார். தீய சக்திகளை வெல்லும் வலிமையானவர் என்று இயேசுவே தன்னை விவரிக்கிறார்.
சிந்தனைக்கு :
இன்றைய இரு வாகங்களையும் பற்றி சிந்திக்கும்போது நான் யாரைச் சார்ந்து வாழ்கிறேன் என்று சிந்தித்து, அறிவு தெளிந்து, ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற முடிவுக்குத் தூண்டப்படுகிறேன்.
உலகத்தோடும் கடவுளோடும் வாழ்வதென்பது சவாலுக்குரிது. இங்கே ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என, நடுநிலைமைக்கு வழி இல்லை. ‘நான் உலகைச் சார்ந்தவனாய் இல்லாதது போல், அவர்களும் உலகைச் சார்ந்தவர்கள் அல்ல’ (யோவான் 17:13) என்றுதான் இயேசு மன்றாடுகிறார். திருமுழுக்கினால், நாம் உலகைச் சார்ந்த மக்கள் அல்ல என்பதால், நாம் பற்றற்ற கடவுளைச் சார்ந்து வாழ வேண்டியவர்கள்.
உலகம் அலகையின் பிடியில் சிக்கித் தவிக்கின்ற நிலையில், நாம் அலகையை எதிர்த்துப்போராடி வாழ தூய ஆவியார் துணை நிற்கிறார். நாம் நற்செய்திக்கு எதிராக, உலகம் காட்டும் வழியில் வாழும்போது, தபம், இறைவேண்டல், நோன்பு அனைத்தும் வெளிவேடம்தான்.
முதல் வாசகத்தில், கடவுள் ‘தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத, தண்டித்தும் திருந்தாத இனம் இதுவே’ என கடவுள் புலம்புவதைக் கேட்டோம். மகிழ்ச்சி, உள்ளக்களிப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, உலக சுகபோகங்களை நாடும் போது, நாம் அலகையின் கையாள்களாகச் செயல்படுகிறோம். அலகை வென்றுகொண்டுதான் இருப்பான்.
ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இயேசுவின் சீடராக இருப்பது ஒரு பகுதி நேர அழைப்பு அல்ல. புனிதர்கள் போன்று, ஒரு முடிவை நாம் எடுக்க வேண்டும். இயேசுவின் பக்கமா? அலகையின் பக்கமா? உலக வாழ்வா? நிலைவாழ்வா? இது தவக்காலம் நமக்கு விடுக்கும் சவால்.
இறைவேண்டல் :
ஆண்டவராகிய இயேசுவே, உமது பக்கமாக இருந்து, உமது வழியில் உலகை வெல்ல என்னை அழைக்கிறீர். உம்மை பற்றிக்கொண்டு, நிலைவாழ்வுக்காக உலகின் மாயைகளுக்கு அடிமையாகாமல் வாழும் வரத்தைத் தந்தருள்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
- Reply
Permalink