பொறாமை அகற்றி விவேக சீடத்துவம் ஏற்போம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

20 ஜூலை 2024 
பொதுக்காலம் 15 ஆம் வாரம் - சனி
மீக்கா 2: 1-5                                            
மத்தேயு  12: 14-21

 
பொறாமையகற்றி விவேக சீடத்துவம் ஏற்போம்!


முதல் வாசகம்.


இன்றைய இரு வாசகங்களும்   நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்துகின்றன.

முதல் வாசகத்தில் ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் மீது தீமை செய்பவர்களை எச்சரிக்க கடவுள் மீக்கா இறைவக்கினரைப் பயன்படுத்துகிறார். தீயவர்கள் தங்கள் தீமைக்கு பதில் சொல்ல வேண்டும் என்பது மீக்காவின் அறிவுரை செய்தியாக வெளிப்படுகிறது.  

தெற்கு நாடான யூதேயாவைச் சேர்ந்தவர்தான்  இறைவாக்கினர் மீக்கா. இவர் இறைவாக்குரைக்கக் கடவுளின் நேரடி அழைப்பைப் பெற்றவர். இவரும் எசாயாவின் சம  காலத்தில்  இறைவாக்குரைத்தார்.  அடுத்திருபவருக்கு  நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்வோரைக் குறித்து,  கடவுள் மிகவும் வருந்துவதாக எடுத்துரைக்கிறார்.  ஏழை எளியவர்களை ஒடுக்குதல்,  அவர்களது உடைமைகளை ஏமாற்றி  அபகரித்தல் போன்ற அநீதிய, தீயச்  செயல்களைக் கடவுள் சகித்துக்கொள்வதில்லை என்றும், அவர்களுக்கான தண்டனைத் தீர்ப்பைக் குறித்தும் எச்சரிக்கிறார்.  குறிப்பாக எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஏழை எளியோர்க்கு எதிராகத் தீமை  செய்பவர்களுக்குக் கடவுள் தண்டனை வழங்குவார் என்பது இவரது முக்கிய செய்தியாகும்.


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு தமக்கு எதிராகத் தீட்டப்படும்  தீயோரின் சதித்திட்டங்களைப் பற்றி அறிந்தவராகச் செயல்படுகிறார். இது அவரது விவேகத்தை வெளிப்படுத்துகிறது. அவரைப் பின்பற்றி சென்ற  எல்லாரையும் அவர் குணமாக்கினார். அதே வேளையில் தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார் என்று மத்தேயு குறிப்பிடுகிறார். அவரது கவனம் தம்மை நாடி வருவோருக்கு நலமளிப்பது என்பதில் இருந்தது. 

ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும்,  தாழ்த்தப்பட்டவர்களின் தேவைகள் அதிகம். இதை வெளிப்படுத்த   ஏசாயா 42: 1-4 இல் மெசியாவைப் பற்றி முன்னறிவிக்கப்பட்ட இறைவார்த்தைப் பகுதியை மேற்கொள்காட்டி பேசுகிறார்.  “இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்” என்றெல்லாம் எசாயா முன்னுரைத்தது தன்னைப் பற்றியே என்பதை இயேசு வெளிப்படுத்துகிறார். 

 சிந்தனைக்கு.


கடவுளைப் பற்றியோ அல்லது பிறரைப் பற்றியோ கவலைப்படாமல், மற்றவர்களைத் துன்புறுத்துவோர் தாங்களே வல்லவர்கள்,  தங்கள் சுயநல வழிகளிலிருந்து எதுவும் தங்களைத் தடுக்கப் போவதில்லை என்ற உணர்வைக் கொண்டுள்ளனர்.

தாங்கள் பதவியில் நீடிக்க வேண்டும், பெரும் பேரும் புகழும் பெற்று உயர வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில்  செயல்படும் தீயவர்களின் மனப்பான்மையால் ஆண்டவராகிய இயேசு அதிருப்தி கொள்கிறார். இத்தகையோர்,  தங்கள் பணி வாழ்வானது பொது நல வாழ்வு என்று பறைசாற்றினாலும்,  அங்கே சுயநலம் இருப்பின் ஒருநாள் அம்பலமாகும். முதல் வாசகத்தில், அடுத்திருபவருக்கு  நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்வோரைக் குறித்து,  கடவுள் மிகவும் வருந்துவதாக எசாயா எடுத்துரைக்கிறார். 

யூதர்களில் பெரும்பாலோர்  எதிர்பார்த்த ஆடம்பர, அரச  மெசியாவாக இயேசு தோன்றவில்லை.  அவர் மனத்தாழ்மையும் அன்புள்ளமும்  கொண்டவராக வெளிப்பட்டார்.  அவர் சிலுவையில் பலியாகி சிந்திய இரத்தத்தால் மக்களை மீட்டவர்.  கடவுளின் துன்புறும் ஊழியனாக,   இஸ்ரயேல் மக்களுக்கு மட்டுமல்ல, எல்லா மக்களுக்கும் மீட்பைக் கொணர்ந்தவர். இப்படி பழைய உடன்படிக்கை நூலில் சொல்லப்பட்டுள்ளவை இயேசுவில்   நிறைவு பெற்றது. ஆனால், பரிசேயர்களால் அதனை உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களின் ஆணவமும், பிடிவாதமும், கர்வமும்   அவர்களது அகக் கண்களை மறைத்தன. 

இன்று, நாம் பரிசேயர்களைப் போலன்றி, மெசியாவின் மீட்புப்பணி  நம் வழியாகத் தொடர்ந்து நிறைவுப்பெறுவதை  உறுதிசெய்ய வேண்டும். எனவே, ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று வாழும் கிறிஸ்தவ வாழ்வைக் கைவிட்டு, மீட்பராகிய இயேசுவின் மீட்புப் பணிக்குத் தோள் கொடுப்பதோடு,  இப்பணியில் கண்மூடித்தனமாக சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமல், விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்பது இயேசுவின் நினைவூட்டலாக உள்ளது.  

பரிசேயக் கூட்டம், எங்கே இயேசு மக்களை எல்லாம் தம் ஈர்த்துக்கொண்டு பெரிய ஆளாகிவிடுவாரோ என்ற பயத்தில் அவரைக் கொல்வதற்கு சூழ்ச்சி செய்ததை மத்தேயு சுட்டிக்காட்டுகிறார். ஆம், நல்லது செய்யும் பொது நமக்கு எதிராக நாலு குள்ளநரிகள் குரல்கொடுக்கத்தான் செய்யும். ஆனால், 'பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது என்பதுபோல, கிறிஸ்துவின் சீடர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். அதற்கு நாம் கையில் ஏந்த வேண்டிய ஆயுதம் விவேகம்.

காலங்களும், காரணங்களும் மின்னல் வேகத்தில் இன்றைய நவீன உலகத்தில் மாற்றங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கும்  வேளையில், நமது சிந்தனைகளும், சித்தாந்தங்களும் இருளில் முடங்கிக் கிடப்பதில் பலன் இல்லை.  

இறைவேண்டல்.


'விவேகம்’ எனும் கருவியை அணிந்து செயல்பட எனை அழைக்கும் ஆண்டவரே, பணி வாழ்வில் அனைத்து சிக்கல்களையும் களைந்து முன்னோக்கிச் செல்ல விவேகம் எனும் கொடையை என்னில் பொழிந்தருள்வீராக. ஆமென்


.      
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments

Allymuthu (not verified), Jul 19 2024 - 5:58pm
Praise the Lord May God bless knowledge and wisdom