ஆண்டவரை நம்புவோருக்கு அவரே அடைக்கலப் பாறை! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

19 ஜூலை 2024 
பொதுக்காலம் 15 ஆம் வாரம் - வெள்ளி
எசாயா 38: 1-6, 21-22, 7-8                                               
மத்தேயு  12: 1-8


ஆண்டவரை நம்புவோருக்கு அவரே அடைக்கலப் பாறை! 


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், ஆகாசுக்கு அடுத்த அரசனான  எசேக்கியாவின் தோல் நோயைக்  கடவுள்    குணப்படுத்தி, அவருக்கு மேலும் பதினைந்து ஆண்டுகள் ஆயுளைக் கொடுத்த நிகழ்வை  அறியவருகிறோம். 

எசேக்கியா அரசன்  தனது உடலில் தோன்றிய ஒருவித கொப்புளங்களால் நோய்வாய்ப்பட்டார்.  இது யூதர்களுக்குத் தீட்டு என்பதால்,  அவர் ஆலயத்திற்குப் போக முடியாமல் வீட்டில் அடைப்பட்டர். அவர் குணமடைய கடவுளிடம் மன்றாடினார்.  கடவுள் அவருடைய வேண்டுகோளைக் கேட்டு, எசாயா இறைவாக்கினரை அனுப்பி எசேக்கியா  குணமடைந்ததை அறிவிக்கச் செய்தார்.  கடவுள் எசேக்கியாவின் நல்ல செயல்களை நினைவுகூர்ந்ததோடு, ‘உன் கண்ணீரைக் கண்டேன்’ என,  மேலும் அவருக்கு பதினைந்து வருட ஆயுளையும் வாக்களித்தார். 

அப்போது வட நாட்டின் மீது அசீரிய மன்னன் படையெடுக்கும் காலம். எனவே, கடவுள்  தெற்கு நாடான யூதேயாவையும்  அதன் தலைநகர் எருசலேமையும்  அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன் என்றும் கடவுள் எசேக்கியாவுக்கு வாக்களிக்கிறார்.

கடவுள் தனது ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் வரை எசேக்கியா தனது மரணத்தை நோக்கி இருந்தார்.   அவர் தாம் பெற்ற  உடல் நலம் மற்றும் நீடித்த வாழ்க்கைக்காக கடவுளுக்கு நன்றி கூறுகிறார்.


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசுவும் அவரது சீடர்களும்,   ஒரு வயல் வழி பயணம் செய்கிறார்கள். அன்று ஓய்வுநாள்.   வயல் வழியே நடந்து செல்லும்போது, சீடர்கள் பசியின் நிமித்தம்  வயலில் இருந்து கதிர்களைக் கொய்து உண்டனர். கதிர்களைப் பறிப்பது ஒரு வேலை என்பதால் ஓய்வுநாளிளல் சீடர்கள்  கதிர்களைக் கொய்தது பரிசேயர்களால் குற்றமாகப் பார்க்கப்பட்டது. 

எனவே, இது குறித்து இயேசசுவிடம் ஓய்வுநாள்  சட்டங்களை மீறுவதாக பரிசேயர்கள்  புகார் செய்கின்றனர். அப்போது இயேசு அவர்களிடம், தாவிது அரசரின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியை எடுத்துச் சொல்லி, ஓய்வுநாளை விடவும் மனிதர்கள், அவர்களுடைய தேவை மிக முக்கியமானவை என்று விளக்குகின்றார்.

இங்கே, இயேசு பரிசேயர்களின் வாயை அடைக்க  இரு கேள்விகளை முன்வைக்கிறார்.

1.தாவீது அரசர் தமது பணியாளர்கள் பசியுடன் இருப்பதை அறிந்து, குரு அகிமெலக் வைத்திருந்த, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய   தூய அப்பங்களை  உண்டார்களே, முறையா ? (1 சாமு 21:1-6)

2.ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாதா?
 
நிறைவாக, இயேசு அவர்களிடம்  “கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார் முடிக்கிறார்.

சிந்தனைக்கு.


இன்றைய இரு வாசகங்களைநும் வாசித்துணரும்போது,  பொதுவாக நாம் கடவுள்ஐப் பற்றிய தவறான எண்ணதில் வாழ்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. முதல் வாசகத்தில்,   எசேக்கியா அரசன் செய்தது போல், நாம் நலம் பெற வேண்டும், பலர் போற்ற வாழ வேண்டும், கடவுள் நமக்கு அரணாக இருந்து காக்க வேண்டும்  போன்றவற்றுக்காக    கடவுளை வழிபட விழைகிறோம்.  அதில் சுயநலம் கலந்திருப்பதை நாம் அறியாவிட்டாலும், கடவுள் அறிவார். ஆனால், கடவுளி எதிர்ப்பார்ப்பு அதுவல்ல.  நம் வாழ்வின் ஒவ்வொரு நொடிக்கும் கடவுளுக்கு நன்றி சொல்வதோடு அவருக்கு உண்மை உள்ளவர்களாக வாழ வேண்டும் என்பதாகும். 

என்றாவது ஒரு நாள், நம் வாழ்க்கை முடிந்துவிடும்,  ஆவியில் உள்ள நம் வாழ்க்கை மட்டுமே நிலைத்திருக்கும். தாயின் கருவறைக்குள் பொருள் இல்லை, அடக்கப்படும் கல்லறைக்குள்ளும் பொருள் இல்லை. இதற்கிடையில் தான் பொருளுக்கு நாம் போராடி மடிகிறோம். பெரும்பாலும், எசேக்கியாவைப் போல, மண்ணில் இங்கு வாழ்வதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் உள்ளது என்று நமக்கு யாராலும்  அறுதியிறுதியாகச் சொல்லவும் இயலாது.  

பரிசேயர்கள் சட்டத்தைப் பிடித்துக்கொண்டார்கள் மனிதநேயத்தைக் காற்றில் பறக்கவிட்டார்கள். சட்டத்தால் வாழ்வு வந்துவிடாது என்பதுதான் புனித பவுல் அடிகளின் கூற்றுமாகும். இயேசு மனிதநேயத்தை வலியுறுத்துகிறார். மனிதரின் பசியைப்போக்க கடவுள் அளித்த உணவை அவரது ஓய்வுநாளில் உண்ணக்கூடாது என்பது நியாமலில்லை. உணவு உண்பதும் ஒரு வேலைதானே, அப்படியென்றால் பரிசேயர்கள் ஓய்வுநாளில் உண்வு உண்பதில்லையா? இது ஏழைகளை வதைப்பதாகும். கடவுளுக்கு என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரது எதிர்ப்பார்ப்பு.  

இயேசுவின் சீடர்கள் இயேசுவைப் பின்பற்ற அனைத்தையும் விட்டுக்கொடுத்து நற்செய்திக்காக ஓட்டாண்டியானவர்கள்.  அடுத்த வேளை உணவுக்கு ஆண்டவரின் தயவை எதிர்ப்பார்த்து இருந்தவர்கள். பசிக்கு இயற்கை உணவளித்தது. அதுவும் குற்றமாகப்பட்டது. ஆனாலும், இயேசு தம் சீடர்களை விட்டுக்கொடுக்காமல் தற்காக்கிறார். நாம் ஆண்டவர் பக்கம் இருக்கும்போது, அவர் நம் பக்கம் இருப்பார்.  நமது  ஆலயப் பாடல் ஒரு நினைவுக்கு வருகிறது. 

நீ இறைவனைத் தேடிக் கொண்டிருக்க
இறைவன் உன்னை தேடுகிறார்.
நீ அவர் புகழ் பாடிக்கொண்டிருக்க
அவரோ உன் புகழ் பாடுகிறார்’

நம்மை வாட்டி வதைப்பவர் கடவுள் அல்ல மாறாக, அவர் நம்மை வாழ வைப்பவர். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்று கடவுளைப் பற்றி இயேசு சாட்சியம் பகர்ந்தார்.  எனவே, அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களுக்கு அடிமையாகாமல், கடவுளுக்கு நன்றி உள்ளவர்களாக வாழ்வோம். நமது மண்ணில் நமது வாழ்நாளும் நீடிக்க கடவுளின் தயவை கிட்டும்.


இறைவேண்டல்.


‘நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்’ என்றுரைத்த ஆண்டவரே, உமது கட்டளைப்படி அடுத்திருப்பவரின் பசியைப்போக்கி வாழும வரத்தை எனக்கு அருள்வீராக. ஆமென்.
 

.      
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்  
+6 0122285452

Comments