கிறிஸ்துவில் பணி வாழ்வே நம் வாழ்வு! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

13 ஜூலை 2024 
பொதுக்காலம் 14 ஆம் வாரம் - சனி

எசாயா  6: 1-8                                                       
மத்தேயு  10: 24-33

கிறிஸ்துவில் பணி வாழ்வே நம் வாழ்வு!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில்  எசாயா இறைவாக்கினரைப் பற்றிய சில முக்கிய குறிப்புகளைக் கண்டறிகிறோம். ஏசாயா கடவுளின் உடனிருப்பை அனுபவிக்கும் போது தான் யார் என்பதைப் புரிந்துகொள்கிறார். கடவுள் வலிமையானவர் மற்றும் அற்புதமானவர் என்பதை அறிந்துணர்கிறார். அதே சமயம் ஏசாயா தன்னை கடவுளுடன் ஒப்பிடுகையில் அவர்  ஒன்றுமில்லை என்பதையும் ஆழ்ந்துணர்கிறார்.

எசாயா அவரது தூய காட்சியில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை காண்கிறார். அவருக்கு மேல் ஆறு இறக்கைகள் கொண்ட சேராபீன்கள் சூழ்ந்து நிற்பதையும், அவற்றுள் ஒன்று ‘படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது என்று கடவுளைப் போற்றிப்பாடிக்கொண்டிருப்பதையும் கேட்டதோடு,  பூமி முழுவதும் கடவுளின் மாட்சியால் நிரப்பப்பட்டிருந்ததாக அறிகிறார். 

அக்காட்சியில், ஏசாயா கடவுளின் வசிப்பிடத்தில் இருப்பதன் அற்புதத்தை உணரும்போது, அவர் “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தான் ஒரு பாவி என்று அறிக்கையிடுகிறார். மேலும்,  அவர் தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் என்றும்,  கடவுளை என் கண்கள் கண்டனவே” என்று, தனது தகுதியற்ற நிலையையும் மக்களிள் பாவ வாழ்வையும் உணர்ந்து கடவுளுடன் பேசுகிறார். 

அப்போது, சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றை எடுத்து வந்து, எசாயாவின் வாயில் வைத்து, எசாயாவைத் தூய்மைப்படுத்தியதும்  “யாரை நான் அனுப்புவேன்? எனதுப் பணிக்காக யார் போவார்?” என்று எசாயாவிடம் கடவுள் கேட்கவே, மறுமொழியாக,  “இதோ இருக்கிறேன், என்னை அனுப்பும்!” என்று உற்சாகத்துடன் பதிலளிக்கிறார் எசாயா. 

நற்செய்தி.


இயேசு தம் 12 சீடர்களை நோக்கி பின்வருமாறு அறிவுறுத்துகிறார்.

குருவை விட எந்த சீடரும் பெரியவரல்ல. அவ்வாறே, வீட்டுத் தலைவரைவிட  வேலைக்காரன்  பெரியவனல்ல. ஒரு சீடன்  குருவைப் போலவும், ஒரு வேலைக்காரன் தன் தலைவரைப் போலவும் மாறுவது சிறப்பு என்கிறார்.  மக்கள் வீட்டுத் தலைவரை பெயல்செபூல் அல்லது பேய்களின் தலைவன்  என்று அழைத்தால், வீட்டில் வசிப்பவர்களைப் பற்றி இன்னும் மோசமாக விவரிப்பார்கள் என்கிறார்.

எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம் என்றும், இயேசு சீடர்களுக்குத்  தனிப்பட்ட முறையில் போதிப்பதை, அவர்கள் மக்கள் மத்தியில்  அச்சமின்றி பகிர வேண்டும் என்கிறார். அவர்,  “உங்கள் உடலைக் கொல்லக் கூடியவர்களுக்கு அஞ்சாதீர்கள், அவர்களால் உங்கள் ஆன்மாவுக்கு தீங்கு செய்ய முடியாது; மாறாக, ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்கக்கூடிய ஆண்டவருக்கு   அஞ்சுங்கள்” என்று சீடர்களைத் திடப்படுத்துகிறார்.

நிறைவாக, பிறர் முன்னிலையில் இயேசுவை  ஏற்றுக்கொள்பவரை அவர் விண்ணகத்தில் உள்ள தந்தைக்கு  முன்பாக ஏற்றுக்கொள்வார் என்றும், பலரின் முன்பாக  இயேசுவை  மறுதலிப்பவர் எவராயினும்  தந்தையாம் கடவுளின்  முன்பாக மறுதலிக்கப்படுவர் என்று உறுதியாகக் கூறுகிறார்.   


சிந்தனைக்கு.

ஏசாயா தனது காட்சியில் கடவுளோடு பேசுவதை உணரும்போது,   தான் ஒரு பாவி, குறையுள்ளவன்  என்பதைப் புரிந்துகொள்ளும் வேளையில்,  கடவுள் வலிமையானவர் மற்றும் அற்புதமானவர் என்பதையும் ஆழ்ந்துணர்கிறார். நற்செய்தயிலோ,  இயேசு  அவருடைய சீடர்களாக மாறிய திருத்தூதர்கள் அனைவரும்  கடவுளின் வல்ல செயல்களில்  பங்கேற்பவர்கள் என்பதை  நினைவூட்டுகிறார். 

கடவுள் பராமரிக்கும்  வானத்துப் பறவைகளைவிட அவரது பணியாளர்களின் முக்கியத்துவம் மிக உயர்ந்தது எனச் சுட்டிக்காட்டும் இயேசு,  கடவுள் தம் பணியாளர்களுக்கு கேடயமும் கவசமுமாமக உள்ளார் என்பதை  வலியறுத்தி, அஞ்ச வேண்டாம் என்று திடப்படுத்துகிறார். எனவே, நேற்று நான் கூறியதைப்போன்று, கோழைகள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது. அவ்வாறே, கிறிஸ்தவர்கள் கோழைகளாக  இருக்க முடியாது. 

பொதுவாகவே, ‘நான்’ மற்றும் ‘எனது' என்ற சுயநலத்தால்  நிரப்பப்பட்ட பணியாளர்கள்  கடவுளுக்குச் சிறந்தப் பணியாளர்களாக விளங்க முடியாது. இவர்கள் கடவுளுக்குப் வேண்டியப்  பணியாளர்களாகத்  தங்களைத் தாங்களே நினைத்துக்கொள்வதுண்டு. 

நற்செய்தியில், ஒரு சீடன்  குருவைப் போலவும், ஒரு வேலைக்காரன் தன் தலைவரைப் போலவும் மாறுவது சிறப்பு என்கிறார் ஆண்டவர். கிறிஸ்துவின் பணியாளர் எவரும் ஒரு குருவைப்போல பணிவும், நேர்மையும், உழைப்பும் கொண்டவராகவும்,  ஒரு வீட்டுத் தலைவர் போல்  உண்மைக்கும் நம்பிக்கைக்கும்  உரியவராகவும் திகழ வேண்டும். 

நேர்மையான இறைப் பணியாளர்களைக் கடவுள் எசாயாவைப்போல்  நெறிப்படுத்தி  பணியில் உறுதிப்படுத்துவார். எனவேதான் இன்று இயேசு  “உங்கள் உடலைக் கொல்லக் கூடியவர்களுக்கு அஞ்சாதீர்கள், அவர்களால் உங்கள் ஆன்மாவுக்கு தீங்கு செய்ய முடியாத’ என்று வலியுறுத்திக் கூறுகிறார். 

நற்செய்தியைக் கூர்ந்து வாசித்தால், இயேசு மூன்றுமுறை தம் சீடர்களை  ‘அஞ்சாதீர்கள்’ என்று வலியுறத்தி திடப்படுத்துகிறார்.   முதலாவதாக, நல்ல பணியாளர்கள் அர்த்தமற்ற குறைகூரல்களுக்கு அஞ்சக்கூடாது.  ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் எழுக்கூடும். நாளடைவில் அவை பனிபோல் மறைந்துவிடும். 

அடுத்ததாக, சீடர்கள் பணிக்காலத்தில்  உயிருக்கு அஞ்சுபவர்களாக வெளிப்படக்கூடாது. ஏனெனில் மேலே கூறியதைப்போல், நல்ல பணியாளர்குளக்கு கடவுளே பாதுகாவலராக, காக்கும் கேடயமாக  இருப்பார் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
 
மூன்றாவதாக, இறைப்பணியாளர்களுக்கு  இறைநம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இன்றியமையாதவை.  சிட்டுக்குருவிகள் சாதாரணமானவை,  அவற்றையே கடவுள் தன்னுடைய கண்ணின் மணிபோல பராமரிக்கின்றபோது தமது சாயலாக உள்ளவரை எப்படி கடவுள் கைவிடுவார்?  ஆகவேதான், எதற்கும் அஞ்சாதீர்கள் என்கின்றார் இயேசு.

 

இறைவேண்டல்.  


ஆண்டவராகிய இயேசுவே, ‘உம் பக்கம் ஆயிரம் பேர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது’ என்ற இறைவார்த்தையில் நம்பிக்கைகொண்டு வாழும் வாழ்வு என்னில் நாளும் வலுவடையச் செய்வீராக. ஆமென்.
  
 

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452