கோழைகள் கிறிஸ்தவரல்ல.. கிறிஸ்தவர் கோழைகள் அல்ல! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
12 ஜூலை 2024
பொதுக்காலம் 14 ஆம் வாரம் - வெள்ளி
ஓசேயா 14: 1-9
மத்தேயு 10: 16-23
கோழைகள் கிறிஸ்தவரல்ல.. கிறிஸ்தவர் கோழைகள் அல்ல!
முதல் வாசகம்.
ஓசேயா இறைவாக்கு தூலின் இறுதிப்பகுதியை நெருங்கிவரும் இவ்வேளையில், இறைவாக்கினர் ஓசேயா, இஸ்ரயேலருக்கு அருளப்பட்ட செய்தியை சுருக்கமாகக் கூறுகிறார். வட நாடான இஸ்ரயேல் உண்மையற்றதும், வழிதவறியதுமாக மாறியது. ஆனால், அவர்கள் ஆண்டவரிடம் திரும்பினால், தீவினை அனைத்தையும் அகற்றி, நன்மையானதை ஏற்றுக்கொண்டால் கடவுள் அவர்களை மீட்டெடுத்து, அவருடன் தங்கள் உறவை நிலைநாட்டும்போது அவர்களுக்கு புதிய வாழ்வைக் கொடுப்பார் என்று இறைவாக்குரைக்கிறார்.
அத்துடன், இஸ்ரயேலர் கடவுளிடம் திரும்பி வந்தால், அவர்கள் கடவுளின் பாதுகாப்பில் நலம்பெறுவார்கள், கோதுமை போல் தழைத்தோங்குவார்கள, திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள் என்ற வாக்குறுதியும் அளிக்கிறார், .
நற்செய்தி.
நற்செய்தியில், தம்முடைய சீடர்களைப் பணிக்கு அனுப்பும் முன் உலகோர் குறித்து எச்சரிக்கிறார். “இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன் என்றுரைக்கும் இயேசு, ஓநாய்கள், குள்ளநரிகள் மத்தியல் எப்படி பாதுகாப்பாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறார். சீடர்கள் முன்மதியோடும் அதே வேளையில் கபடற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.
அவர்கள் எதிர்ப்பையும், ஏளனத்தையும், ஒருவேளை மரணதண்டனையையும் சந்திக்க நேரிடும். ஆயினும், என்ன பேசுவது அல்லது என்ன செய்வது என்று ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட கற்பிக்கிறார். மேலும், அவர்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது கவனம் செலுத்தும் வரை, அவர்கள் தூய ஆவியாரால் வழிநடத்தப்படுவார்கள், அவர் அவர்களைத் திடப்படுத்து வழிநடத்தவார் என்று அறிவுறுத்துகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களையொட்டி சிந்திக்கும்போது, விண்ணரிசுக்கான பயணம் எப்போதும் நறுமணமுள்ள ரோஜா இதழ்களின் மேல் பயணிப்பது போன்றிருக்காது என்பது தெளிவாகிறது. அது சில சமயங்களில் கொடூரமானதாகவும், துர்நாற்றம் வீசும், முட்களால் நிரப்பப்பட்ட வழியாகவும் இருக்கக்கூடும் என்பதோடு, பலவகை துன்பத்தையும் மரணத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்பதை மடுக்க இயலாது.
உலகில் தீமை (அலகையின் ஆட்சி) உள்ளது என்பதே உண்மை. இறைவனையும் அவரது படைப்பையும் அன்பு செய்யாதவர்கள், சுயநலவாதிகள் மலிந்துவிட்டார்கள். எனவே, இக்காலத்தில் ஆண்டவராகிய இயேசுவின் சீடராக இருப்பது முற்றிலும் ஒரு போராட்ட வாழ்வு என்பதை மறுப்பதற்கில்லை. இயேசு இச்சூழலை நன்கு அறிவார். எனவேதான், முன்மதியோடு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இயேசுவின் இன்றைய போதனைகளை கவனமாகப் பரிசீலித்தால், அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினமானது என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில், இங்கே பிறரால் புண்படுத்தப்படுவது இயல்பான ஒன்று. தொட்டதெற்கெல்லாம் குறைக்காணும் சமூகமாக நாம் மாறிவருகிறோம். இத்தகைய சமூகத்தில் இறைப்பணி செய்வதென்பது எளிதல்ல. ஆனால் இயேசு இச்சூழலை அறிந்தும் அனுப்புகிறார்.
இயேசுவின் அனுப்புதலை ஏற்று வாழ்வதற்கு முக்கியமாக இரண்டு விடயங்கள் தேவை: பணிவு மற்றும் நம்பிக்கை. பணிவு அல்லது மனத்தாழ்மை நம்மில் உள்ள தற்பெருமையை ஒதுக்கி வைக்க உதவும். கடவுளின் குரலுக்கு செவிசாய்க்க வழிவகுக்கும்.
இரண்டாவதாக, இயேசுவின் படிப்பினையில் நம்பிக்கை வைத்துச் செயல்படுவது. எது நடந்தாலும் அவர் பக்கமிருந்துப் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் பணியைத் தொடர்தல்.
‘ஓநாய்களிடையே அனுப்புவது போல, உங்களை நான் அனுப்புகிறேன்’ என்று இயேசு சொல்கிறார். இயேசுவும் ஓநாய்களிடையேதான் தந்தைநால் அனுப்பப்பட்டார். இதை அறிந்தும் இயேசு தமது திருமுழுக்கிற்குப் பின் பணியை ஏற்றார். ஓநாய் எக்காரணம் கொண்டும் தன் குணத்தை மாற்றிக் கொள்ளாது. தன் பசியைத் தீர்க்க எதைச் செய்வதிலும் தவறில்லை என்பதுதான் ஓநாயின் குணம். அவ்வாறே சில மனிதர்களும் உளர். சுயநலனுக்காக பிறர் மீது வீண்பழி சுமத்துவதோடு, கொலையும் செய்ய துணிவார்கள். ஆகவே, நற்செய்தி பணியாளர்கள் இத்தகைய ஓநாய்கள் மத்தியில் சிக்கிக்கொள்ளாமால் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும்.
முரட்டுத்தனமாக இவர்களோடு மோதுவதும், வீண் வாக்குவாதத்தில் ஈடுபடுவதும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஓநாய்களுக்கு மத்தியில் நற்செய்தியை அறிவிக்க நம்மை அனுப்பும் ஆண்டவரின் கரம் பற்றி பணிதொடர்வோம்.
‘குள்ளநரிக் கூட்டம் ஒன்று குறுக்கிடும்
நல்லவர்க்குத் தொல்லை தந்து மடக்கிடும் - நீ
எள்ளளவும் பயங்கொண்டு மயங்காதேடா’ எனும் ஒரு சினிமா பாடல் வரிகள் நமக்கு மிகவும் பொருந்தும்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நற்செய்திப் பணித்தலத்தில் பாம்புகளைப் போல் முன்மதியுடையவர்களாகவும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாகவும் செயல்பட என்னை உருமாற்றுவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452