சீடத்துவம் சிறக்க ... சீடராக்குவோம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
11 ஜூலை 2024
பொதுக்காலம் 14 ஆம் வாரம் - வியாழன்
ஓசேயா 11: 1-4, 8c-9
மத்தேயு 10: 7-15
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்ரயேலரின் தீய வாழ்வு, அவர்கள் மீதான கடவுளின் அக்கறை மற்றும் அன்பான உறவை ஓசேயா அவர்களுக்கு நினைவூட்டி அவர்களின் நேர்மையற்ற செயலை எடுத்துரைக்கிறார்.
கடவுள் இஸ்ரயேலரை தம் மக்களாகத் தேர்ந்துகொண்டதோடு, , அவர்களை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றி, சாதாரண மனிதப் பெற்றோர் தன் குழந்தைகள் மீது செலுத்தும் அக்கறையைவிட, கடவுள் இஸ்ரயேலர் மீது அக்கறையும் அன்பும் காட்டினார் என்பதை எடுத்துரைத்ததோடு, அவர்கள் கடவுளின் அளவற்ற அன்பைப் பொருட்படுத்தவில்லை என்பதை விவரிக்கிறார். மேலும், பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி அவர்களை வழி நடத்தி வந்தவர் அவரே என்று கடவுள் கூறியதை ஓசேயா எடுத்துரைக்கிறார்.
இஸ்ரயேலர் கடவுளுக்கு எதிராகப் பிரமாணிக்கமற்றவர்களாக இருந்தாலும், கடவுள் தெய்வீகமானவர், அன்பானவர், அவரது இரக்கம் பொங்கி வழிகின்றது, அவர் சினத்தை வெளிப்படுத்தமாடாதவர் என்றும், மனிதர்கள் நடந்துகொள்ளும் விதத்தில் அவர் செயல்படுவதில்லை என்று இஸ்ரயேலர்களுக்கு எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு அவரது சீடர்களைப் பணிக்கு அனுப்புகிறார். இயேசுவுடனான உறவின் மூலம் அவர்கள் கொடைகளால் நிரப்பப்பட்டிருந்தனர். இப்போது தன்னிடமிருந்து பெற்ற கொடைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள இயேசு அவர்களை அனுப்புகிறார். தன்னோடு இருந்து பல்வேறு படிப்பினைகளைக் கற்றுக்கொண்ட சீடர்கள், அதை எல்லா மக்களுக்கும் அறிவிக்கப் பணிக்கிறார்.
இதனால், மக்களும் இதேபோல் கடவுளின் கொடைகளை சீடர்கள் வழியாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என அனுப்புகிறார். சீடர்கள் பிறரிடமிருந்து பணிக்கான ஊதியத்தை எதிர்பார்க்கக்கூடாது. வேறு யாராலும் கொடுக்க முடியாத பெரிய கொடைகளை அவர்கள் ஏற்கனவே பெற்றிருக்கிறார்கள். அவர்கள் பணம், பயண அணிகலன்கள், கூடுதல் ஆடைகள் இல்லாமல் பணிக்குச் செல்ல வேண்டும். அவர்கள் கடவுளின் பாதுகாப்பை நம்பியிருக்க வேண்டும். அவர்கள் இயேசுவின் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும்போது, தேவையானவற்றை கடவுள் அவர்களுக்கு வழங்குவார். அவர்களுக்கு கடவுள் மீதும், கடவுளின் வார்த்தையின் வல்லமையின் மீதும் மட்டுமே நம்பிக்கை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனுப்புகிறார். பன்னிருவரும் எங்குச் சென்றாலும் அங்கே அவர்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறிந்து அவரோடு தங்கியிருக்கலாம். அவர்கள் பகிரும் அமைதி (சமாதானம்) அவர்கள் மேல் தங்கும் என்றும், சீடர்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தால், வெளியேறும் பொழுது அவர்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வெளியேற பணிக்கிறார்.
சிந்தனைக்கு.
நம்முன் இரு சாவால்களை முன் வைக்கிறார் ஆண்டவர்.
1)ஆண்டவராகிய இயேசு நமக்கு அளித்துள்ள கொடைகளை நாம் உணர்ந்திருக்கிறோமா?
2)நற்செய்தியை அறிவிக்க நாம் கடவுளின் ஆற்றலைப் பெற்றுள்ளோம் என்பதை நம்புகிறோமா?
இயேசு தன் தந்தைநிடம் இருந்து எதைக் கற்றுக்கொண்டாரோ அதை தம் சீடர்களுக்குப் பயிற்றுவித்தார். இப்போது அவற்றை உள்ளவாறு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது, சீடர்களின் பணியாக ஒப்படைக்கப்படுகிறது. இந்த ‘ஒப்படைத்தல்’ அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. உலகம் இறுதிவரை இப்பணி தொடரும்.
புனித பவுல், “நான் நற்செய்தியை அறிவிக்கிறேன் என்றாலும் அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. இதைச் செய்யவேண்டிய கட்டாயம் எனக்கு உண்டு. நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு” (1 கொரி. 9: 16) என மிகவும் தெளிவாக நமது அழைத்தலுக்கான நோக்கத்தை விவரித்துள்ளார். இவரது இக்கூற்றில், ‘நற்செய்தியை அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு’ என்பதை நாம் ஆழ்ந்து கிரகிக்க வேண்டும்.
‘கேடு வரும் பின்னே, மதி கெட்டு வரும் முன்னே' என்பதுபோல் மதிகெட்டு, நமது பொறுப்பை ஏற்காமல் புறக்கணித்து, உலகப் போக்கில் வாழ்வோமானால், கேடு வரும். சீடர்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமல் புறக்கணித்தால், வெளியேறும் பொழுது அவர்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிட்டு வெளியேற இயேசு பணித்ததைக் கேட்டுக்கும் போது, இயேசுவின் கூற்றைத் தவறாகப் புரிந்துகொள்வதற்கு வழி உண்டு. இதன்வழி அவர் வழியுறுத்துவது ‘வெறுப்பு' எனப் பொருள்கொள்வது தவறு.
மெசியாவை யூதர்கள் எதிர்ப்பார்த்திருந்தார்கள். எனவே, இயேசுவின் நற்செய்தியைக் கொணரும் சீடர்களை யாரொருவர் நிராகரிக்கிறாரோ, அவர் மெசியாவை நிராகரிக்கிறார் என்பதாக அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது இயேசுவின் நோக்கமாகும். சுருக்கமாகக் கூறினால், சீடர்கள் கொணரும் நற்செய்தியை ஏற்காதவர்கள், இறையாட்சியை ஏற்க மறுக்கிறார்கள் என்பதை இயேசு மறைமுகமாக உணர்த்துகிறார்
சீடர்கள் விதைத்தது இறையாட்சிக்கான போதனை. நாம் தொடர வேண்டியது அதே போதனையைத் தவிர வேறொன்றுமில்லை. ஆகவே, இறையாட்சிக்கான போதனைக்கு நாம் எவ்வாறு செவிசாய்க்கிறோம் என்ற கேள்வி நம்மில் முதலில் எழ வேண்டும். ‘ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே’ என்ற கதையாகிவிடக்கூடாது. அவ்வாறு செய்தால், முதல் வாசகத்தில் ஓசேயா கூறுவதைப்போல் கடவுளின் வழிமுறைகளைத் துறந்து, அந்நிய வழிபாட்டிற்கு ஆளான இஸ்ரயேலரைப் போல் நாமும் தண்டிக்கப்படலாம்.
ஆகவே, வாழும் இடத்தில், பெயர் அளவில் கிறிஸ்தவர்களாக நம்மை வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொள்ளாமல், நமது முன்மாதிரியன வாழ்வால் கிறிஸ்துவை ஒளிர்விக்க முயற்சிப்போம். அதுவே மேலான நற்செய்தி அறிவிப்பாகும்.
இறைவேண்டல்.
“நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன”(உரோ 10:15) என்று எங்களுக்கு எடுத்துரைத்த ஆண்டவரே, உமது நற்செய்தி அறவிப்புப் பணியில் நானும் முழுமையாக ஈடுபட்டு அதன்படி வாழ்ந்திட உமது வரம் கேட்டு மன்றாடுகிறேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452