கற்போம், கற்றதைக் கற்பிப்போம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil

10 ஜூலை 2024 
பொதுக்காலம் 14 ஆம் வாரம் - புதன்

ஓசேயா 10: 1-3, 7-8, 12                                                          
மத்தேயு  10: 1-7


கற்போம், கற்றதைக் கற்பிப்போம்!
   

முதல் வாசகம்.

 "ஆண்டவரைத் தேடுங்கள்" மற்றும் " நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்."  இந்த இரு  சொற்றொடர்களும் இன்றைய வாசகங்களின் மையச் செய்தியாகின்றன.   இவை ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்றும் கூறலாம்.  

இஸ்ரயேலரை கடவுள் பாலும் தேனும்  பொழியும் கானான் நாட்டில் குடிவைத்தார் (வி.ப. 3:8) என்பது,  அந்நாட்டின் வளத்தை உணர்த்துகிறது. எனவே அந்நாட்டில் திராட்சைக் கொடிகள் மிகுதியாகக் கனிகள் தந்தன. மக்கள் வறுமையின்றி வாழ்ந்தனர். 

ஆனால்,  திராட்சைக் கொடிகள் எவ்வளவாகக் கனிகள்  கொடுத்ததோ,  நாட்டின் வளம் பெறுகியதோ இஸ்ரயேலர்  அவ்வளவுக்கு மிகுதியாய் அந்நிய தெய்வங்களை வழிபடலாயினர்.  அத்தெய்வங்களுக்கு ஆலயங்கள்  எழுப்பினர். எனவே, அங்கு கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் ஓசேயா,  கடவுளுக்கு  எதிரான அனைத்துப் பிரமாணிக்கமற்றச் செயல்களுக்கும் மன்னிப்புக்கேட்டு, மனமாறி, கடவுள் பக்கம்  திரும்ப  போதித்ததை, முதல் வாசகம் எடுத்துரைக்கிறது.    


நற்செய்தி.


நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தனது இறையாட்சிப் பணிக்கு பன்னிரு தலைமைச் சீடர்களைத்  தேர்ந்தெடுக்கின்றார். அவர்களின் பெயர்களை மத்தேயு பட்டியலிட்டுத் தெளிவுப்படுத்துகிறார்.

1.பேதுரு என்னும் சீமோன், 
2.அந்திரேயா (பேதுருவின் சகோதரர்)
3.யாக்கோபு (செபதேயுவின் மகன்)  
4.யோவான் (செபதேயுவின் மகன்)
5.பிலிப்பு, 
6.பர்த்தலமேயு, 
7.தோமா, 
8.மத்தேயு (வரி வசூலிப்பவர்),
9.யாக்கோபு ( அல்பேயுவின் மகன்)
10.ததேயு,
11.சீமோன் (தீவிரவாதியாய் இருந்தவர்)
12.யூதாசு இஸ்காரியோத்து( இயேசுவைக் காட்டிக் கொடுத்தவர்).

பின்னர், அவர்களுக்குக் கீழ்க்கண்ட அறிவுரைகளைக் கூறினார்.

பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள் என்பதாகும் .


சிந்தனைக்கு.


ஒவ்வொரு குருவுக்கும் சீடர்கள் இருப்பது இயல்பு. அவ்வாறே, தம்மிடம் இருந்து கற்றுக்கொண்டு, தமக்குப் பின் அதே பணிகளைத் தொடர இயேசு தம் சீடர்களைத் தேர்வுச் செய்கிறார். அவர் தேர்ந்தெடுத்த சீடர்கள்  அணியில் வேறுபட்ட மனிதர்கள் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக்கொண்டுதான் ஒரே சீடத்துவ அணியை  இயேசு உருவாக்குகின்றார்.

இயேசுவின் சீடராக இருத்தல் என்பது  இரு  அம்சங்களை உள்ளடக்கியது: 

1.ஆண்டவராகிய இயேசுவிடம் கற்றல்.
2.அவருடைய நற்செய்தியைப் பறைசாற்ற  அனுப்பப்படுவதை ஏற்றல்.   

பன்னிரண்டு சீடர்கள் பின்னர் திருத்தூதர்களாக  மாறியது போல, இயேசுவின் பணிக்கு அனுப்பப்படுவதற்காகவே நாமும் திருமுழுக்கின் வழி தேர்வுச்செய்யப்பட்டு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நற்செய்தி உணர்த்துகிறது.  இதை உணராவிடில், நாம் பயனற்ற அல்லது கனிதரா சீடர்களாகுவோம்.    நற்செய்தி அறிவிப்பு என்றால்,  அது உலகெங்கும் செல்ல வேண்டியதென எண்ணத் தேவையில்லை.   நாம் பைகளை மூட்டை கட்டிக்கொண்டு  கப்பலேறி   அல்லது விமானத்தில் தொலைதூர இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதல்ல.  

நமது  முதல் பணி, நமது சொந்த மக்களுக்கும் - நமது அன்றாட வாழ்வில் நாம் யாருடன் தொடர்பு கொள்கின்றோமோ - நமது குடும்பம், நமது நண்பர்கள், நமது உடன் பணிபுரிபவர்கள் மற்றும் நாம் சந்திக்கும் நபர்கள் தொடங்கினால் போதுமானது. இதற்கு  நாம் இயேசுவின் அதிகாரத்தைப் பெற்றுள்ளோம்  என்ற நம்பிக்கை நம்மில் மிளர வேண்டும். 

முதல் வாசகத்தில் கடவுள் இஸ்ரயேலருக்கு மிகவும் வளமிக்க நாட்டை அளித்தார். அவர்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து வாழும் வாழ்வுக்குத் தேர்வுச் செய்யப்பட்டார்கள். ஆனால், வழிதவறியதால் அழைப்புக்கேற்ற வாழ்வையும் வளத்தையும் இழந்தனர். இன்று நமது நிலையும் எவ்வகையிலும் மாறுபட்டதாக இல்லை.  நம்மில் சீடத்துவும்  உண்டு. ஆனால், சீடத்துவம் வலியுறுத்தும்  பணித்துவம் கேள்விக்குரியாக உள்ளது. சீடத்துவமும் பணித்துவமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை.  

திருமுழுக்குப் பெற்று, உறுதிப்படுத்தப்பட்டு, தொடர்ந்து நற்கருணை விருந்தில் பங்குபெறும் நாம்,   கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்கவும் அதற்கேற்ப செயல்படவும்  அழைப்புப் பெற்றுள்ளோம்.   நாம்   நமது நம்பிக்கை  வாழ்வில் தினமும் முதிர்ச்சியை நோக்கி பயணித்தால், மற்ற இறைமக்களோடு  நற்செய்தியைப்  பகிர்ந்து கொள்ள கடவுள் நம்மை எளிதாகப் பயன்படுத்திடுவார்.   நம்மில் உள்ள குறைபாடுகளை, பலவீனங்களை முன் வைத்து அழைப்பை உதாசினப்படுத்தினால், நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு போலாகிவிடும்.
இயேசு தனது   சாதாரணமான  பன்னிரு சீடர்களைக் கொண்டு அவரால் என்ன செய்து விட முடியும், என்ற எண்ணம் அன்று பலரின் எண்ணத்தில் தோன்றியிருக்கலாம்.   ஆனால், அவர்களே, புதிய இஸ்ரயேலாக,  தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடியாக, ‘திருஅவையாக' உள்ளது. கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதில் நம்பிக்கை கொள்வோம். நம் ஒவ்வொருவரையும் உருமாற்றக்கூடியவர் ஆண்டவர் என்பதை ஏற்று,  ஓர் ஓசேயாவாக மாற உருதிக்கொள்வோம்.


இறைவேண்டல்.


‘என் பின்னே வாருங்கள்’  என்றழைத்த ஆண்டவரே, என்னில் உள்ள குறைகளோடு என்னையும் அழைத்த ஆண்டவரே, உம் பணியில் நான் சிறந்தோங்கிட எனக்கு அருள்புரிவீராக. ஆமென்.  

ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452