நலமளிக்கும் மருத்துவர் நம் ஆண்டவரை அண்டிடுவோம்! | ஆ ர்.கே. சாமி | VeritasTamil
05 ஜூலை 2024
பொதுக்காலம் 13 ஆம் வாரம் -வெள்ளி
ஆமோஸ் 8: 4-6, 9-12
மத்தேயு 9: 9-13
நலமளிக்கும் மருத்துவர் நம் ஆண்டவரை அண்டிடுவோம்!
முதல் வாசகம்.
இறைவாக்கினரான ஆமோசின் எச்சரிக்கை வார்த்தைகளைத தொடர்ந்து இன்றும் கேட்கிறோம். கடவுள் மக்களின் எல்லா தீய செயல்களையும் அறிந்திருக்கிறார் என்பதை அவர் எடுத்துரைக்கிறார். இஸ்ரயேலர் கடவுளின் அறிவுறுத்தலை ஏற்காமல் தங்கள் சொந்த இலாபத்தைத் தேடுவதால், அதே கடவுளின் வார்த்தை அவர்களுக்குக் கிடைக்காத ஒரு நிலை வரும் என்றும், அவர்கள் வாழ்க்கையில் கடவுளின் உடனிருப்பு இல்லாததன் விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள் என்றும் வலியுறுத்தி வட நாட்டில் தொடர்ந்து போதிக்கின்றார் ஆமோஸ்.
நற்செய்தி.
நற்செய்தியில், மத்தேயு அவருக்கான இயேசுவின் சொந்த அழைப்பை விவரிக்கிறார். இயேசுவால் சுங்கச் சாவடியில் அழைக்கப்பட்ட மத்தேயுவின் வீட்டில் இரவு விருந்தின் போது, அதைக் கண்ட பரிசேயர் இயேசுவின் சீடரிடம் “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.
இயேசு பரிசேயர்களுக்குத் தாம் வந்திருப்பதன் அடிப்படை நோக்கத்தை விவரிக்கிறார். “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று தமது வருகையின் நோக்கத்தை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் புரிய வைக்கிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைப் பற்றி நான் சிந்திக்கும்போது, கடவுள் உண்மையில் நம்மையும் நமது நோக்கங்களையும் எவ்வளவு அறிந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது. நாம் தவறே செய்யாதப் பெரிய மனிதர்கள் என்று நினைத்து சிலரை ஏமாற்றக்கூடும், ஆனால் கடவுளை அல்ல. அவரது கண்களுக்கு மறைவாக உள்ளது எதுவுமில்ல. ‘மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார் (நீமொ 5:321-22).
மத்தேயு உண்மையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தார். பின்னர் அவர் தனது வீட்டில் இயேசுவுக்கு இரவு உணவை வழங்கினார். அந்த இரவு விருந்தில், அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் இயேசுவுடனும் அவருடைய சீடர்களுடனும் வந்து அமர்ந்திருந்தனர். இதைக் கண்ட பரிசேயர் பரிகசித்தனர். அப்போது இயேசு கூறிய பதில் மிகவும் முக்கியமானது.
ஆம் அவர் நோயற்றவர்களுக்காகவும் நீதியுள்ளவர்களுக்காகவும் அல்ல, நோய்வாய்ப்பட்டவர்களுக்காகவும் பாவிகளுக்காகவும் வந்தார் என்று கூறுவதன் மூலம், அது இரண்டு முக்கியமான விடயங்களை நமக்குத் தெரிவிக்கிறார்.
1.நாம் அனைவரும் ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டவர்களாகவும் பாவிகளாகவும் இருக்கிறோம்.
2.நமது பாவ நிலையை நாம் தாழ்மையுடன் ஒப்புக் கொள்ளாமல், நாம் நலமாக இருக்கிறோம், நீதிமான்கள் என்று பெருமையுடன் கூறிக்கொண்டால் இயேசுவை நம் வாழ்விலிருந்து நிராகரிக்கிறோம்.
நாம் நமது குற்றங்களை மறைத்து, பாவங்களை மறுதலிக்கும் போது, "ஆண்டவரே, எனக்கு நீர் தேவையில்லை" என்று கூறுதாகப் பொருள்படுகிறது. மத்தேயு இயேசுவின் அழைப்பை ஏற்று புதுவாழ்வுப்பெற்றார். இயேசு அவரோடு பந்தி அமர்ந்ததினால் மத்தேயுவின் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்று பொருள். மத்தேயு நோயுற்றிருந்தார் நலம் பெற்றார்.
அடுத்து, பாவியின் இல்லத்திற்குச் செல்வதற்கோ, அங்கே அவர்களுடன் உணவு உண்பதற்கோ இயேசு வெட்கப்படவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இயேசு ஒரு ஆன்மீக மருத்துவர். தம்மிடம் வரும் நோயாளிகளை (பாவிகளை) அவர் ஒருபோதும் புறக்கணிப்பதில்லை. அவர்களின் குணமடைதலில் அவர் மகிழ்கிறார்.
முதல் வாசகத்தில் கடவுளை முற்றிலுமாக ஏற்க மறுத்த வட நாட்டினரை கடவுள் கைவிட வேண்டிய சூழல் எழுந்தது. அவர்கள் பாவத்தையும் கடவுளுக்கு எதிரான தீயச் செயல்களையும் அறிந்துணர்ந்து கடவுள் பக்கம் திரும்பியிருந்தால் அவர்கள் நலம் பெற்றிருப்பார்கள். கடவுள் அளிக்கவிருந்த சிகிச்சையை ஏற்காமல், பாவத்தில் மடிந்தனர்.
நாம் உண்மையில் கடவுளின் அன்பு பிள்ளைகளாகக் காணப்பட விரும்பினால், கடவுள் நம்மோடு உறவு கொள்ளவும், நம்மோடு பேசவும் நாம் வாய்ப்பளிக்க வேண்டும். மத்தேயு இயேசுவை தம் இல்லத்திற்கு அழைத்து அரோடு பேசி மகிழ்ந்தார். அவ்வாறே, நமக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் வார்த்தைகள், நீதிமொழிகள் ஆகியவற்றுக்கு நாம் செவிசாய்க்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் மத்தேயு செய்தது போல், “என்னைப் பின்பற்றி வா” என்ற இயேசுவின் அழைப்பைக் கேட்டு, அவரது அழைப்பில் நிலைக்க வேண்டும். அதுவே உண்மை சீடத்துவத்திற்கு அழகு.
இறைவேண்டல்.
பாவிகளுக்கு மரமிரங்கும் ஆண்டவரே, எனக்கு நீரே மருத்துவர் என்று வாழ்வதில் மகிழ்கிறேன். என்னில் நீர் காணும் குறைகளிலிருந்து விடுவித்து குணப்படுத்தும் மருத்துவராக என்றும் திகழ்வீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452