சந்தேகம் களைந்தால் நம்பிக்கை உறுதிபெறும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

03 ஜூலை 2024 
பொதுக்காலம் 13 ஆம் வாரம் -புதன்
புனித தோமா - இந்தியாவின் திருத்தூதர்-விழா
எபே 2: 19-22                                                                                      
யோவான் 20: 24-29
 
சந்தேகம் களைந்தால் நம்பிக்கை உறுதிபெறும்!


 முன்னுரை

இன்று திருஅவை புனித தோமாவின் விழாவைக் கொண்டாடுகிறது. இவர் இந்தியாவின் திருத்தாதர் என்பதால் இந்தியாவில் இன்றைய நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.  எனவே முதல் வாசகம் இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்தும் (52: 7-10) கொடுக்கப்பட்டிருக்கும். 
 
முதல் வாசகம். (எபே 2: 19-22) 

எபேசியர்களுக்கு எழுதிய கடிதத்தில், புனித பவுல் திருஅவையைக் குறிக்க ஒரு கட்டிடத்தின் உருவகத்தைப் பயன்படுத்துகிறார்.  இந்த கட்டிடத்தின் அடித்தளம் திருத்தூதர்களையும் இறைவாக்கினர்களையும்  கொண்டுள்ளது - கடவுளால் "அனுப்பப்பட்டவர்கள்" (திருத்தூதர்கள்) மற்றும் கடவுளுக்காக "பேசுபவர்கள்" (இறைவாக்கினர்கள்) இவர்கள் ஆவர்.

திருத்தூதர்கள் மற்றும்  இறைவாக்கினர்கள்   பாரம்பரியத்தின் அடிப்படையில் தான் கடவுளின் திருஅவை அமைக்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டிடத்தின் கிரீடமாக உள்ளவர்  வேறு யாருமல்ல, இயேசு கிறிஸ்துவே. ல அவர் இந்த கட்டமைப்பின் மூலக்கல்ல்லாகவும் உள்ளார் என்கிறார் பவுல்,  

நற்செய்தி.

நற்செய்தியில், புனித தோமா பற்றிய விபரம் தெளிவுப்படுத்தப்படுகிறது. திதிம் என அழைக்கப்படும் தோமா கலிலேயாவைச் சார்ந்தவர். இவரும்  பேதுரு, அந்திரேயா, யோவான் யாக்கோபு போன்று மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தார். ஆண்டவர் இயேசு அழைத்த உடன், இவர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தார். விவிலியத்தில் யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற நற்செய்தி நூல்களில் இவரைக் குறித்த செய்திகள் காணப்படவில்லை. 


இயேசுவின் நெருங்கிய நண்பரான இலாசர் இறந்தபோது, இயேசு பெத்தானியாவிற்கு செல்லவேண்டும் என்று முடிவெடித்தார். அப்போது சீடர்கள் எல்லாம் இயேசுவிடம், “ரபி, இப்போதுதானே யூதர்கள் உம்மேல் கல்லெறிய முயன்றார்கள்; மீண்டும் அங்குப் போகிறீரா?” என்று சொல்லி அவரைத் தடுத்தார்கள் (யோவா 11:8). ஆனால் தோமாவோ, “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்” என்று சொல்லி தான் இயேசுவுக்காக எதையும் செய்யத் துணிந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறார்.


இன்றைய நற்செய்தியின் அடிப்படையில்  ஆண்டவராகிய இயேசுவை முதன் முதலில் இவ்வுலகில் ,“நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!” என்று பறைசாற்றியவர் இவர்தான். (யோவா 20: 28).

தமிழகத்தில் புனித தோமா.

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு, தோமா தற்போதைய ஈரான், பெர்சியா போன்ற பகுதிகளுக்குச் சென்று நற்செய்தி அறிவித்ததாகவும், இறுதியில் இந்தியாவின் தென்பகுதியில் வந்து நற்செய்தி அறிவித்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் கிபி. 52 ஆம் ஆண்டு தோமா கேரளாவில் உள்ள கிராங்கநூர் பகுதியில் தரை இறங்கினார் என்பது திருஅவை கொண்டிருக்கும் வரலாறு. 

தோமா கிராங்கநூரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு அதன்பிறகு, சென்னையிலுள்ள மயிலாப்பூர் பகுதியில் நற்செய்தி அறிவித்தார். அவருடைய போதனையைக் கேட்டு நிறைய மக்கள் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றினார்கள். இதனால் அவருக்கு இந்து குருக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. ஆனால் தோமா தனக்கு  வந்த எதிர்ப்புகளை எல்லாம் முறியடித்துவிட்டு, தொடர்ந்து நற்செய்தியை அறிவித்து வந்தார். 


ஒருசமயம் அவர் சென்னியில் ஒரு குன்றில்   இறைவேண்டல் செய்து கொண்டிருந்தபோது பகைவர்கள் வந்து, அவர்மீது ஈட்டியால் குத்தி  அவரைக் கொலை செய்தார்கள். இவ்வாறு தோமா, முன்பு சொன்ன,  “வாருங்கள் நாமும் போவோம், அவரோடு இறப்போம்” என்ற வார்த்தையை உண்மையாக்கிக் காட்டினார். ஒரு மறைசாட்சியாக அவர் உயிர்த்துறந்தார்.

15 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த போர்த்துகீசியர்கள் தோமாவின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் ஆலயம் கட்டினார்கள். இந்த ஆலயத்தை இன்று நாம் காணலாம். 1972 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த, திருத்தந்தை ஆறாம் பவுல் தோமாவை இந்திய நாட்டின் திருத்தூதராக அறிவித்தார்.

உலகத்தில் மூன்று திருத்தூதர்களின் கல்லறைகள்  மீதுதான் ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அவை, புனித பேதுரு (வத்தக்கான் மாநகர், இத்தாலி), புனித யாக்கோபு (கலிசியா, ஸ்பெயின்) புனித தோமா சென்னை இந்தியா)

 
 சிந்தனைக்கு.


நற்செய்தியில் இயேசு தோமாவைப் பார்த்து, “நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்” என்பார் (யோவா 20: 29). இதையே நமது சிந்தனைக்காக எடுத்துக்கொள்வோம். இயேசு வாழ்ந்து, மரித்து, உயிர்த்து 2000 ஆண்டுகள் ஆகின. நாம் திருமரபின் வாயிலாகவும் விவிலியத்தின் வாயிலாகவும்தான் இயேசுவை பற்றி அறிந்து வருகிறாம். 

இயேசுவை நாம் நேரில் கண்டதில்லை.  இயேசுவை நேரில் காணாததால் அவரில்  நம்பிக்கைகொள்ளாத பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியிலும் பல சமயத்தார் மத்தியிலும்,  ‘இயேசுவே என் ஆண்டவர், இயேசுவே என் கடவுள் ’ என்று சொல்லாலும் வாழ்வாலும் பறைசாற்றி வாழும் நாம் பேறுபெற்றவர்கள். 

இறைவேண்டல்

அன்பு இயேசுவே, உமது ஆர்வமிக்க திருத்தூதர் புனித தோமையாருக்காக நன்றி கூறுகிறேன்.  அவரைப் போல துணிவு, பற்றுறுதி, நம்பிக்கை என்னும் கொடைகளை எமக்கும் அருள மன்றாடுகிறேன். உம்மையே நான் என் வாழ்நாள் முழுவதும் எனது ஆண்டவராகவும், இறைவனாகவும் அறிக்கையிட்டு, வாழ்ந்துகாட்ட அருள்தருவீராக. ஆமென்
 


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452