இறைவேண்டல் கடவுளின் திருவுளத்திற்கு உட்பட்டிருக்கட்டும் ! | ஆர்.கே. சாமி | VeritasTamil

20 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 11ஆம் வாரம் - வியாழன்
சீராக்கின் ஞானம் 48: 1-15
மத்தேயு   6: 7-15
 

இறைவேண்டல் கடவுளின் திருவுளத்திற்கு உட்பட்டிருக்கட்டும் !

  
முதல் வாசகம்.


 கடந்த சில நாள்களாக முதல் மற்றும் இரண்டாம் அரசர் நூல்களில் எலியா மற்றும் எலிசாவைப் பற்றிய வாசகங்களை வாசித்து வந்த நமக்கு, இன்றைய முதல் வாசகதில் சீராக்கின் ஞான நூலிலிருந்து ஒரு பகுதி தரப்பட்டுள்ளது.  ஏனெனில், இப்பகுதியிலும் எலியா  பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  

இஸ்ரயேல் மக்கள் கடவுளை விட்டு விலகி, தங்கள் அண்டை நாடுகளின் தெய்வங்களை வணங்கினர். எலியாவும்  எலிசாவும்   கடவுள்  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாகிய இவர்களின் கடவுளுடனான உறவை மீண்டும மீட்டெடுக்க முயன்றனர்.  மக்களை நல்வழிப்படுத்தி, கடவுளின் கோபத்தைத் தணிப்பது  உள்ளிட்ட பல நற்பணிகளைச் செய்தார்கள்.  

இதனால் சிறிது காலத்திற்குப் பிறகு,  மக்கள் கடவுளின் பக்கம் திரும்பினர்.  ஆயினும்கூட, எலிசா இறைவாக்கினரின் இறுதிக்காலத்தில்  அவர்கள் மீண்டும் பாதைவிலகி அந்நிய  தெய்வம் பக்கம் திரும்பினர். இதனால் கடவுள்  அசீரியர்களை அனுப்பி வட நாடான இஸ்ரயேலை கி.மு. 722-ல் கைப்பற்றச் செய்தார்.

இத்துடன் வடக்கு நாட்டில் குடிபுகுந்த பத்து கோத்திர்ங்களும்  அரசும் அழிக்கப்பட்டன.  தெற்கு நாடான யூதேயா மட்டுமே மிஞ்சியது. இந்த இரு இறைவாக்கினர்களும்  இஸ்ரயேலரை மீண்டும் கடவுளோடான வழிபாட்டுக்குள் மீட்டு வர  தங்களால் இயன்றதைச் செய்தார்கள், ஆனால் மக்கள் அவர்களுக்குச் செவிசாய்க்க மறுத்துவிட்டனர்.  


நற்செய்தி.


நற்செய்தியில், இயேசு தம் சீடர்களை இறைவேண்டல்  செய்யும் மக்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.  மேலும், இறைவேண்டலில் இரு முக்கிய கூறுகளை இயேசு முன்வைக்கிறார். 

1.பிற இனத்தவரைப் போலப் பிதற்றக் கூடாது.
2.மிகுதியான சொற்களை அடுக்கிக் கொண்டே போகுதல் கூடாது.  

பின்னர்,  இறைவேண்டல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு ஒரு மாதிரியையம் தருகிறார். அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். ‘தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பது போல,   எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்’ என்பதாகக் கற்றுத்தருகிறார்.

இந்த இறைவேண்டலில் முக்கிய கூறாக, மற்ற மனிதர் செய்யும் குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களானால் உங்கள் விண்ணகத் தந்தையும் உங்களை மன்னிப்பார். மற்ற மனிதரை நீங்கள் மன்னிக்காவிடில் உங்கள் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிக்க மாட்டார் என்ற நிபந்தனையை வலியுறுத்துகிறார்.
 

சிந்தனைக்கு.


இயேசு தன் சீடர்களுக்கு இறைவேண்டல் செய்வது குறித்துக் கற்றுக் கொடுக்கும் நிகழ்வு மத்தேயு நற்செய்தியில் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக (மத் 6:9-13) உள்ளது.  பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம் எல்லாருக்கும் தந்தை இறைவன் என்ற தத்துதவத்தை இயேசு இன்றைய நற்செய்தியில் கற்பிக்கிறார். நமது இறைவேண்டலின் போது எவ்வாறு இறைவேண்டல் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார். 

ஒரு காலத்தில் ’மந்நிரம்',  ‘செபம்' என்று நாம் கூறியவை புதிய மொழிபெயர்ப்பில் இறைவேண்டல் என்று மாற்றப்பட்டுள்ளது. மண்ணகத்தில் இருக்கும் நாம் விண்ணகத்தில் இருக்கும் ஒருவரை நோக்கி எழுப்பும் வேண்டல்.  உலகில் எல்லா சமயத்தவரும்  இறைவேண்டலில் ஈடுபட்டாலும் நமது இறைவேண்டல் மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்கிறார் ஆண்டவர்.  

இன்றைய நற்செய்தியில்  இயேசு புறவினத்தாரின் இறைவேண்டல் போல உங்கள் இறைவேண்டல் இருக்கக் கூடாது என்று தன் சீடர்களுக்கு வலியுறுத்துகின்றார்.  அவர்கள் பிதற்றுவார்கள். இறைவனுக்கு இறைவேண்டலில் ‘ஐஸ்’வைப்பார்கள். நமக்கு இறைவேண்டல்  என்பது ஓர்  உறவாகப் பார்க்கப்பட வேண்டும். அதற்கு வார்த்தைகள் தேவையில்லை. மௌனம் கூட இறந்த இறைவேண்டல்தான். நம் உள்ளத்தின் உள்ளறையில் இருக்கின்ற இறைவனோடு நாம் ஏற்படுத்தும் உறவே இறைவேண்டல். எனவே, அதிக சொற்களைக் கொண்டு இறைவேண்டல் செய்தால்,  நமது இறைவேண்டல் இறைவனுக்கு ஏற்புடையதாகிவிடும்  என்று  அறுதியிட்டுச் சொல்ல முடியாது. சொற்களின் பின்னேயுள்ள மனநிலையும், இறைவேண்டலைத்  தொடர்ந்து வரும் வாழ்வும் நேர்மையானதாக இருக்க வேண்டும்.

அடுத்து, இறைவேண்டலில் ‘தாழ்ச்சியும், உண்மையும்' இருக்க வேண்டும். இறைவனை மயக்க நினைப்பது அல்ல. இங்கே தற்புகழ்ச்சிக்கு இடம் கிடையாது.  நம் குற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டு நமக்கு எதிராகக் குற்றம் புரிந்தோரை மன்னிப்பதில்தான் நமது இறைவேண்டலின் வெற்றி அடங்கியுள்ளது என்கிறார் ஆண்டவர்.  

தொடர்ந்து, ஒவ்வொரு மனிதரையும் நாம் சகோதர சகோதரிகளாக ஏற்கும் புரட்சியை இயேசு தமது மாதிரி இறைவேண்டலில் புகுத்தியுள்ளார். கடவுளை ‘எங்கள் தந்தையே' என்று அழைக்கப் பணிக்கிறார். இங்கே 'என் தந்தையே' என்றல்ல, ‘எங்கள் தந்தையே' என்று பன்மையில் கடவுளை உலக மக்கள் அழைக்கக் கற்பிக்கிறார்.

அடுத்து, அன்றாட உணவை இறைவனிடம் கேட்ட வேண்டும் என்கிறார். மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளில் ஒன்று உணவு. கிறி!ஸ்தவர்கள் 'எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று தாரும்" என்று விண்ணகத்  தந்தையிடம் வேண்டும் போது,  அனைத்து உயிர்களுக்குமான குறைந்தது  ஒருவேளை உணவுக்கு மன்றாடுகிறோம். இதனால்,  இயசேவின் சீடர்களாகிய நாம்,  பதுக்கலுக்கு அல்ல பகிர்தலுக்கு உரியவர்கள் என்பதை உணர்த்துகிறார். 

நிறைவாக, இறைவேண்டலில்  அதிக நேரம் செலவிடுவது மட்டுமே அதனை ஏற்புடையதாக மாற்றிவிடாது என்பதையும் மனதில் கொள்வோம். எலியா மற்றும் எலிசாவைப் போன்று நேர்மையான இறைப்பணியாளர்களாக நாம் இருப்போமானால், எலியாவைப்போன்று, நமது இறைவேண்டலுக்கும் இறைவன் செவிசாய்ப்பார். இறைவேண்டல் நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிகாட்டுதலையும் தருகிறது என்றால் மிகையாகாது.  

 
இறைவேண்டல்.

எப்படி இறைவேண்டல் செய்ய வேண்டும் என்று கற்றுத்தந்த இயேசுவே,  நல்ல மனநிலையை என்னில் உருவாக்கி, உண்மையாகவும் நேர்மையாகவும் இறைவேண்டலில் நான் நிலைத்திருக்க அருள்புரிவீராக.  ஆமென்.


 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452