அடக்கம் ஆயிரம் பொன் தரும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 11ஆம் வாரம் -  புதன்
2 அரசர் 2: 1, 6-14
மத்தேயு  6: 1-6, 16-18

அடக்கம் ஆயிரம் பொன் தரும்!


முதல் வாசகம்.


முதல் வாசகத்தில், எலியா சுழற்காற்றில் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிகழ்வை வாசிக்கிறோம். எலியா எலிசாவிடம் “ஆண்டவர் என்னை யோர்தானுக்கு அனுப்பியுள்ளார். எனவே நீ இங்கேயே தங்கியிரு” என்றுரைத்த போது, எலிசா எலியாவிடம்,  “நான் உம்மை விட்டுப் பிரியமாட்டேன்” என்று கூறியதோடு, அவருடன் தொடர்ந்து நடந்தார்.

அவர்கள் யோர்தான் நதியைக் கடக்க வேண்டியிருந்தது. அப்பொழுது, எலியா தம் போர்வையை எடுத்துச் சுருட்டி அதைக் கொண்டு நீரை அடிக்கவே,  தண்ணீர் இருபுறமும் பிரிந்துகொள்ள, இருவரும் உலர்ந்த தரைமீது நடந்து நதியைக் கடந்து சென்றனர்.

வழியில்,  எலிசா எலியாவின் ஆவியின் இருமடங்கைக் கொடையாகக் கேட்கவே, “நீ கேட்பது கடினமான காரியம். உன்னிடமிருந்து நான் எடுத்துக் கொள்ளப்படும் போது, நீ என்னைக் காண்பாயாகில், அது உனக்குக் கிடைக்கும்; இல்லையெனில் கிடைக்காது” என்று பதிலளிக்கிறார். 

வழியில், எலிசாவின் கண் முன்னே, எலியா சுழற்காற்றில் விண்ணகத்துக்குச் சென்றார். எலிசா அதைக் கண்டு, “என் தந்தாய்! என் தந்தாய்! இஸ்ரயேலின் தேரே! அந்தத் தேரின் பாகனே!” என்று கதறினார்.

  
   
நற்செய்தி.


மற்றவர்களால் பார்க்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்பதற்காகப் பகிரங்கமாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் தானதர்மங்கள், நோன்பு, இறைவேண்டல்கள் போன்றவற்றை கடைப்பிடிக்குமாறு இயேசு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.  இத்தகைய செயல்கள், மறைவாகச்  செய்யப்படும்போது, கடவுளால் கவனிக்கப்பட்டு வெகுமதி பெறப்படும் என்று அவர் வலியுறுத்துகிறார்.  

பிறர் கவனத்தை ஈர்ப்பதற்காகத் தர்மச் செயல்களைச் செய்தல். விளம்பரத்துடன்  அன்னதானம்   அறிவித்தல், பிறர் காணும்படி பகிரங்கமாக இறைவேண்டல் செய்தல்
நோன்பு இருக்கும்போது, முகத்தை  விகாரப்படுத்திக்கொள்ளுதல் போன்றவற்றைக் குறிப்பிட்டு இயேசு படிப்பிக்கிறார்.   மறைவாய் இருக்கிற உங்கள் தந்தைக்கு மட்டும் தெரிந்தால் போதும், உள்ளதைக் காணும்  தந்தையாம் கடவுள்   உங்களுக்கு ஏற்ற கைம்மாறு அளிப்பார் என்று சீடர்களுக்கு வலியுறுத்துகிறார்.
 
 
சிந்தனைக்கு.


முதல் வாசகத்தில், எலியா எலிசாவிடம் என்னிடமிருந்து உனக்கு வேண்டியநு என்ன ? என்று கேட்டபோது,   எலிசா எலியாவின் ஆவியின் இரு மடங்கு  கேட்கிறார்.  இதன்வழி, எலியாவைப் போலவே தனக்கும் கடவுளுடன் ஒரு சிறப்பு உறவு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் எலிசா அவ்வாறு கேட்டார். தன்னை எலியாவைவிட உயர்ந்தவராகக் காட்டிக்கொள்ள அல்ல. 

இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடர்களிடம்  மற்றவர்களால் புகழப்படுவதற்காக அல்ல, ஆனால் நல்ல செயல்களைக் கண்டு அவர்களை ஆசீர்வதிக்கும் கடவுளின் மாட்சிக்காக எதையும் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். கிறிஸ்துவின் சீடர்களாக விளங்கும் நமக்கு மற்றவர்களின் அபிமானத்தை விட கடவுளுடனான நெருங்கிய உறவு மிகவும் இன்றியமையாதது. பேர் வாங்க வேண்டும், புகழப்பட வேண்டும் என்று பணியில் இறங்குவது சீடத்துவத்திற்கு இழுக்கு.  நம்மில் சிலர்  மாலை, பொன்னாடை விரும்பிகளாக உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

நாம் வெளியே சென்று தர்மம் செய்யும்போதும்,  கடவுளிடம் இறைவேண்டல்  செய்யும்போதும், நோன்பு இருக்கும் போதும், நமது முழு கவனமும்  கடவுளை மாட்சிபடுத்துவதில் மையமிட்டிருக்க வேண்டும்  என்று இயேசு படிப்பிக்கிறார். மாறாக, பொதுவில், விளம்பரத்தைத் தேடி அலைவோருக்கு தற்காலிக பாராட்டு மட்டுமே சொந்தமாகும்.

லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சொல்லும் ‘பரிசேயர் – வரிதண்டுபவன்’ உவமையில் (லூக் 18: 9-14) பரிசேயன் கடவுளுக்கு முன்பாக தான் செய்ததையெல்லாம் தம்பட்டம் அடித்து இறைவேண்டல் செய்துகொண்டிருந்தான். வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, ‘கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்’ என்று மன்றாடினான். நிறைவாக, வரிதண்டுபவரின் மன்றாட்டை கடவுள் ஏற்றார் என்று அறிகிறோம். தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என்பதுதான் இயேசுவின் மையச் செய்தியாக உள்ளது.

உலகம் சமநிலை பெறவேண்டும்
ஏற்றத் தாழ்விவல்லா நிலை வேண்டும்!
நிறைவே காணும் மனம்  வேண்டும்
இறைவா அதை நீ தரவேண்டும் 
என்பது அகத்தியர் முனிவரின் மன்றாட்டு.

இவ்வாறு தாழ்வு மனம் கொண்ட வாழ்வுக்கு இன்று ஆண்டவர் அழைக்கிறார்  அதாவது என்ன பயன் கிடைக்கும் என்று ஆராயாமல்,  கைம்மாறு கருதாமல், தம்பட்டம் அடிக்காமல் நாம் செய்யும் தர்ம செயல்கள்  அதன் நன்மை கடலைவிடப் பெரிதாகும் என்கிறார் திருவள்ளுவர். பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. (குறள் 103)

இதை ஆண்டவர் இயேசு இரத்தினச் சுருக்கமாக ‘நீங்கள் தர்மம் செய்யும்போது, உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்’ (மத் 6:3) என்றார்.


இறைவேண்டல்.


‘தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்’ என்றுரைத்த ஆண்டவரே, என்னைத் தாழ்த்திக்கொள்ளும் போது நீர் என்னை உயர்த்துகிறீர் என்ற சிந்தனையில் நான் வேரூன்றி இருக்க அருள்புரிவீராக. ஆமென்


.
 ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

SEMON ANTHONY (not verified), Jun 18 2024 - 6:39pm
அருமையான விளக்கம், நன்றி
Amirtham (not verified), Jun 22 2024 - 3:21pm
🙏🙏🙏🙏🙏🙏