எளிய வாழ்வே இயேசுவில் வாழ்வு! | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 10ஆம் வாரம் - வியாழன்
பதுவா நகர் புனித அந்தோனியார்-நினைவு
1 அரசர் 18: 41-46
மத்தேயு 5: 20-26

 
எளிய வாழ்வே இயேசுவில் வாழ்வு!
  
முதல் வாசகம்.


‘நீ என் தயவையல்ல, கடவுளின் தயவைப் புறக்கணிக்கிறாய். இனிமேல் நான் சொல்லும் வரை இந்த நாட்டில் மழையே பெய்யாது. பஞ்சத்தில் நீயும் உன் நாட்டு மக்களும் அழியப்போகிறீர்கள். அப்போது உன் கடவுள் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்’ என்று  எலியா பாகால் தெய்வத்தை வழிபட்ட  இஸ்ரயேல்  மன்னன் ஆகாபுவுடன் சவால் விட்டிருந்தார்.  இஸ்ரயேல் என்பது வடநாடு. 

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேலில் எஞ்சியிருக்கும் ஒரே உண்மையான இறைவாக்கினர் எலியா என்று அறிகிறோம்.    ஆகாபு அரசனோ யாவே கடவுளுக்குப் பதிலாக பாகாலின் வழிபாட்டை ஆதரித்தார். எனவே கடவள் வடநாட்டில் மழை பெய்யாமல எங்கும் வறட்சி உண்டாகச் செந்தார்.  பின்பு,  எலியாவின் மன்றாட்டால், மழை மேகம் தோன்றும்போது, ஆகாபு, அது கடவுள் அனுப்பும் மழையின் அறிகுறி என்று எண்ணாமல், அவருக்கு அதைவிடச் சக்திவாய்ந்த பாகால் என்னும் கடவுள் இருக்கிறார் என்று அசட்டை செய்ததோடு, ‘உன் தயவு எனக்குத் தேவையில்லை’ என்று எலியாவை விரட்டிவிடுகிறார். 
நாடெங்கிலும் பஞ்சம் ஏற்பட்டது.  தண்ணீர் இல்லாமல்  மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் மடியும் நிலை ஏற்பட்டது. இறைவாக்கினர் எலியா,  அரசன் ஆகாபு முன் நின்று, யாவேதான்  உண்மையான இறைவன் என்பதையும், பாகால் தெய்வம் பொய்யானவர் என்பதையும் நிரூபிக்கிறார். மக்கள் அனைவரும் கடவுளை உண்மையான இறைவனாக ஏற்றுக்கொள்கிறார்கள். அதன் விளைவாக அவர்கள்  பஞ்சம் நீங்கி வாழ்வுபெற்றனர்.  


நற்செய்தி.

    
நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்கு புதிய கட்டளையைத் தருகின்றார். “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்க வேண்டும் என்றும, இல்லையெனில், அவர்கள் விண்ணரசுக்குள் புக முடியாது” என்றும் போதிக்கின்றார். “தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ முட்டாளே என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; அறிவிலேயே என்பவர் எரிநரகத்திற்கு ஆளாவார்” என்று உறுதிபட தம்  சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார்.  
மேலும், மிக முக்கியமாக  ‘நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலி பீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்’ என்ற கண்டிப்பான போதனையைப் பகிர்வதோடு,  ”உங்கள் எதிரி உங்களை நீதி மன்றத்துக்குக் கூட்டிச் செல்லும்போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார்” என்றும் சீடர்கள்  எச்சரிக்கிறார். 

சிந்தனைக்கு.

இன்றைய நற்செய்தியில், இயேசு தம் சீடரை நோக்கி, “மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது” என்று கூறுகிறார். ஆம், மறைநூல் அறிஞர், பரிசேயர், தலைமை குருக்கள் ஆகியோர் நற்செய்தியை அறியாதவர்கள். அவர்களின் தவறுகள் மன்னிக்கப்பட வாய்ப்புண்டு. நற்செய்தியை அறிந்த  நமது நிலை வேறு. 

இயேசுவின் சீடர்களாக இருக்கிற நமக்கு நற்செய்தி அறிவிக்கப்படுள்ளது. தூய ஆவியார் உண்மையை நமக்கு எடுத்துரைத்துள்ளார்.  நமது அகக் கண்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆகவே, நாம் அறிந்து செய்யும்  பாவங்கள், தவறுகள் மன்னிக்கப்படுமா? என்பது ஒரு கேள்வி குறி. இயேசு ஒருமுறை “நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது. மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்……. ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்” (மத் 12:31-32) என்றார். அறிவுதெளிந்த நிலையில் செய்யும் பாவம் மிகப் பெரியது. 

முதல் வாசகத்தில், ஆகாபு அரசன் பாகால் தெய்வத்திற்கு அடிமைப்படிருந்தாலும் அடுத்து மனமாறி உண்மை கடவுளிடம் திரும்பினான். நாமும் அறியா நிலையில் தவறுகள், பாவங்கள் செய்திருந்தாலும், செய்தது பாவம் என்று அறியும்போது மனம் மாற வேண்டும். இல்லையேல் விண்ணகக் கதவு அடைக்கப்படும். நமக்கானதண்டனை தீர்ப்பு என்பது நிச்சயம். 
 இன்று திருஅவை புனித பதுவா நகர் புனித அந்தோனியார் விழாவைக் கொண்டாடுகிறது. அவரின் திருமுழுக்குப் பெயர் பெர்னாடின் என்பதாகும்.   அந்தோனியார் என்பது புனித வனத்து அந்தோனியார் மீது அவர் கொண்ட பற்றினால் இவர் ஏறுக்கொண்ட பெயர். இவர் 1195 ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்பன் நகரில் பிறந்தார் என்பது வரலாறு. இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து எளிமையுல் நற்செய்தி பணிபுரிந்தார்.
அந்தோனியார் இறைவார்த்தையை விளக்கிக் கூறுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.  அவர் ஆற்றிய புதுமைகள் ஏராளம்.
அவர் இறந்த முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது, 1263 ஆண்டு, அவருடைய உடலை இடமாற்றம் செய்ய ஏற்பாடு  மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருடைய கல்லறையைத் திறந்துபார்த்தபோது அவருடைய நாவு மட்டும் அழியாமல் இருந்தது.
அந்தோனியார் இறந்து எழுநூறு ஆண்டுகளுக்கு மேலாகியும் அவருடைய நாவு இன்றைக்கும் அழியாமல் இருப்பதைப் பார்க்கும்போது அந்தோனியார் தன்னுடைய நாவினால் இறைவனுக்கு எந்தளவுவுக்கு மாட்சி சேர்த்திருப்பார் என்று புரிந்துகொள்ள முடிகிறது. 1946 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த பனிரெண்டாம் பத்திநாதர் அந்தோனியாரை திருஅவையின்  மறைவல்லுனராக உயர்த்தினார் என்று அறிகிறோம்.
அந்தோனியாரின் விழாவைக் கொண்டாடும் நாம் உயிர்களிடத்தில், இயற்கையிடத்தில் தனிப்பட்ட அன்பு கொண்டிருக்கிறோமா? எளிய வாழ்வுக்கு இடமளிக்கிறோமா? இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிறருக்கு எடுத்துரைக்கிறோமா? என்று சிந்திக்க அழைக்கப்படுகிறோம். அதே வேளையில், இயேசு கூறுவதைப்போல், நாம்  யாரையும் பழித்துரையாமல், நற்செயல் செய்ய ஆயத்தமாய் இருப்போம். ‘யாருடைய தயவும் எனக்குத் தேவையில்லை’ என்று யாராலும் சொல்ல முடியாது. இப்படியிருக்கையில் ஒருவரை இன்னொருவர் பழித்துரைப்பதால், அதனால் மனிதர்களுக்கு இடையே இருக்கும் உறவு வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.

இறைவேண்டல். 

“எவரையும் பழித்துரைக்கலாகாது” என்றுரைத்த ஆண்டவரே, பழித்துரைப்பதால் உறவுகள் மத்தியில்  விரிசல்கள் ஏற்படும் என்பதை நான் உணர்ந்து உறவை வளர்க்கும் உம் சீடராக வாழ அருள்புரிவீராக. ஆமென்


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452