இறையன்பு வலது கண் என்றால் பிறரரன்பு இடது கண்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

6 ஜூன் மே 2024  
பொதுக்காலம் 9ஆம் வாரம் -  வியாழன்
2 திமொத்தேயு 2: 8-15  
மாற்கு 12: 28b-34
 

இறையன்பு வலது கண் என்றால் பிறரரன்பு இடது கண்!


 முதல் வாசகம்.

பவுல் அடிகள் திமொத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் எழுதிய திருமுகங்களை “ஆயர் பணித் திருமுகங்கள்” என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. திமொத்தேயு ஓர் ஆயர். நற்செய்தி அறிவிப்புப்பணியில் பவுலுடைய உடன் உழைப்பாளர்  

பவுல் அடிகள், கடவுளால்  தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள்  மீட்பின் கொடையைப்  பெற வேண்டும் என்பதற்காக தாம்  எதர்கொள்ளும் அனைத்துத் துன்பங்களையும்  பொறுத்துக் கொள்வதாகத்  திமொத்தேயுவுக்கு இம்மடல் வழி நினைவூட்டுகிறார்.  அவர் தொடர்ந்து எழுதுகையில்,  இயேசுவுடனான   உறவைப் பற்றி அறிவிக்கிறார்.  ‘நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார்' என்று திமொத்தேயுவுக்கு எடுத்துரைக்கின்றார்.  

நிறைவாக, திமொத்தேயு தொடர்ந்து நற்செய்திப் பணியில், உண்மையுள்ளவர்களாகவும், நேர்மேயுள்ளவர்களாகவும்  இயேசுவுக்குச் சாட்சியாக வாழும் வாழ்வில் கவனம் செலுத்த வேண்டும் என்று மடலில் அறிவுறுத்தி எழுதுகிறார்.


நற்செய்தி.


நேற்றைய நற்செய்தியின் தொடர்ச்சியாக இன்றைய நற்செய்தி அமைகிறது. இன்று மூன்றாவது கேள்வி அரங்கேறுகிறது. சதுசேயர்களின் கேள்விக்குப் பதில் அளிந்துக்கொண்டிருப்பதைக் கண்ட மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசுவை அணுகி வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார்.

இக்கேள்விக்கு பதிலாக, மோசே வழி அக்காலத்தில் கடவுள் அளித்த கட்டளைகளைச் சுருக்கமாக  இரு கட்டளைகளில்  தருகிறார்.

1.உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை.

2.‘உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டவது கட்டளை.


இவ்விரு கட்டளைகளை விட  மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்று அந்த மறைநூல் அறிஞரைத் தெளிவுப்படுத்துகிறார். 

இயேசுவின் பதிலைக் கேட்ட மறைநூல் அறிஞர்  இயேசுவின் போதனையை ஏற்றுக்கொள்ளவே,   இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்றார் என்று மாற்கு குறிப்பிடுகிறார்.


சிந்தனைக்கு.


ஏறக்குறைய அனைத்து பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்களின்  ஆணவத்தின் காரணமாக இயேசுவால் தொடர்ந்து கண்டிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.  அவ்வாறே சதுசேயர்களும் வெட்கித் தலைகுனிந்தனர்.   ஆனால்  இன்றைய நற்செய்தியில்  ஒரு மறைநூல் அறிஞர் இயேசுவின் படிப்பினைக்குச் செவிசாய்த்து உண்மையை ஏற்கிறார்.

இன்றைய நாளுக்கான வாசகங்களையொட்டி சிந்திக்கும்போது,  உறவுகள் பற்றிய படிப்பினை மேலோங்கி உள்ளது. முதலாவதாக, நமக்கும் கடவுளுக்குமிடையிலான உறவு. அடுத்து நமக்கும், நமக்கு அடுத்திருப்பவருக்கிடையிலான  உறவு. நாம், கடவுளின் பிள்ளைகள் என்பதால், கடவுளோடும் நமக்கு அடுத்திருக்கும் மனிதரோடும் அன்பு செலுத்தி வாழ  அழைக்கப்பட்டுள்ளோம். ஆனாலும், இங்கே முக்கியமானதொரு படிப்பினையை மனதில் கொள்ள வேண்டும். ஆம், நமக்கு அடுத்திருக்கும், கண்ணால் காணக்கூடிய ஒருவரை அன்பு செய்யாமல், நம் கண்களுக்குப் புலப்படாதக் கடவுளை நாம்  அன்பு செய்ய இயலாது.

நாம் இறைவனை எந்தளவுக்கு முழுமையாக அன்பு செய்கின்றோமோ, அதே அளவுக்கு நமக்கு அடுத்திருப்பவரையும் அன்பு செய்யவேண்டும். அப்போதுதான் நம்முடைய அன்பு முழுமை பெறும். நமக்கு அடுத்திருப்பவர் எவராக இருந்தாலும் அவரைப் புறக்கணித்துக் கடவுள் மீது நாம் செலுத்த விரும்பும் அன்பால் நமக்கு மீட்பு வந்துவிடாது. யோவான் 5:41-42-ல், “மனிதர் தரும் பெருமை எனக்குத் தேவையில்லை. உங்களை எனக்குத் தெரியும். உங்களிடம் இறையன்பு இல்லை’ என்று இயேசு நம்மை ஒதுக்குவார். இறையன்பு என்பது அடுத்திருபவரை அன்பு செய்வதில் வெளிப்படக்கூடியது. 

இறையன்புக்கு,  நமது மனக்கண்கள் திறக்கப்பட வெண்டும். அதற்கு தாழ்ச்சி இன்றியமையாதது. நம்மை முழுமையாகக் கடவுளுக்குக் கொடுப்பதற்கும், அந்த அன்பான உறவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும். 

நற்செய்தியில் கடவுளை அன்பு செய்வதும்  அடுத்திருப்பவரை அன்பு செய்வதும் தலை சிறந்த கட்டளையென்பதை ஏற்றுக்கொண்ட  அந்த மறைநூல் அறிஞரை. “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை” என்று இயேசு பாராட்டுகிறார். இயேசு இறையன்பையும் பிறர் அன்பையும்  இணைத்து, இரண்டையும்  நேர்கோட்டில் வைத்துப்பார்க்கிறார். ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லையென்பதே உண்மை.  ஒன்றை விட்டு மற்றொன்றை ஏற்பதைவிட, இரண்டையும் ஏற்று வாழ்வோரே இயேசுவின் சீடராவர்.

முதல் வாசகத்தில்,பவுல் அடிகள் அடுத்திருபவரை அன்பு செய்தல் பற்றி பேசும்போது, பவுல் அடிகள்  கிறிஸ்தவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன் என்றார். பவுல் அடிகள் பிறரின் நல்வாழ்வுக்காக தன்னை துன்பத்தற்கு ஆளாக்கிக் கொண்டார். 

ஆகவே, இறையாட்சியில் பங்குபெற நமக்கு அடுத்திருக்கும் ஏழை எளியோரை, தேவையில் இருப்போரை முதலில் அன்பு செய்ய விழைவோம். இது நமக்கான நிபந்தனையாகவும் உள்ளது. 
 
‘ஆண்டவரை அடையவேண்டுமா, அடுத்தவரை அன்பு செய்’ என்பதே இயேசுவின் வேண்டுகோள்.  ஆம், அடுத்தவர்மீது நாம் கொள்ளும் அன்பும் ஆண்டவர்மீது நாம் கொள்ளும் அன்புமே நம்மை பேறுபெற்றவர்கள் ஆக்கும்.
 
ஆகவே, நாம்  அடுத்தவரையும் ஆண்டவரையும் அன்பு செய்வோம். அதன்வழியாக பேறுபெற்றவர்களாகி, இறையருள் நிறைவாய் பெறுவோம்.

இறைவேண்டல்.


அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்துவது  எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது என்றுரைத்த ஆண்டவரே, என்னைச் சூழ்ந்திருக்கும் ஏழைகள் மட்டில் நான் இரக்கம் கொண்டு உதவிடும்  உமது சீடராக வாழ அருள்புரிவீராக. ஆமென்


 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452

Comments

ப.ஜோதிலெட்சுமி… (not verified), Jun 07 2024 - 5:48pm
ரேடியோ வேரித்தாஸ் தமிழ்ப்பணி இணையதள குழுவினர்களுக்கும்....இனிய இதயங்களுக்கும் வணக்கங்களும்.வாழ்த்துகளும்....இறையன்பு வலது கண் என்றால்.பிறரன்பு இடது கண் என்னும் பொருளில் முதல் வாசகம்.நற்செய்தி.சிந்தனை .மற்றும் இறைவேண்டல் வழியாக ஆண்டவர் இயேசுவின் மகிமைகளையும்.வாழ்க்கைக்கு தேவையான நன்னெறிகளையும் மிகவும் சிறப்பாக பகிர்ந்து கொண்ட அருட்தந்தை ஆர். கே.சாமி அவர்களுக்கு நன்றிகளும்.வாழ்த்துகளும்...ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்.தமிழ்நாடு

Daily Program

Livesteam thumbnail