நாமே உலக வாழ்வுக்கான இயேசுவின் திருவுடல்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 ஏப்ரல் 2024                                                                                          

பாஸ்கா 3ஆம் வாரம் -  வெள்ளி

தி. பணிகள்   9: 1-20                                    

யோவான்  6: 52-59

முதல் வாசகம்.

முதல் வாசகம், தமஸ்கு  செல்லும் வழியில்  பவுலின் வாழ்க்கையை மாற்றிய அனுபவத்தை நமக்குத் தருகிறது. பவுலுக்கு இந்த சந்திப்பு எவ்வளவு அழுத்தமானது  என்பதைப் புரிந்து கொள்ள, பவுல் என்ற சவுல்  யார் என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். சவுல் (ஒரு யூத பெயர்) ஒரு பரிசேயர், ஒரு தீவிரமான யூதர், அவர் யூதர்கள் கொண்ட திருச்சட்டத்தின் கட்டளைகளைக் கற்றறிந்தவரும் பின்பற்றியவருமாவார்.  

உரோமை அரசுக்கு உட்பட்ட தர்சு நகரில் பிறந்தவர்.  இவரது  தந்தை ஓர் உரோமை குடிமகன்.  தர்சுவில்  பிறந்தாலும், யூதேயாவில், எருசலேமில் வளர்க்கப்பட்டவர். (திப 22:3) தன்னை ஓர் எபிரேயர் (யூதர்) என்கிறார் (2 கொரி 11:22, பிலி 3:5). யூதச் சட்டப்படி விருத்தசேதனம் பெற்றவர். இஸ்ரயேல் இனத்தவன்; பென்யமின் குலத்தவன் (பிலி 3:5). எருசலேமில் கமாலியேலிடம்  சமயக் கல்வி பயின்றவர் (திப 22:3). 
 
இன்றைய முதல் வாசகத்தில், "துளிர்விடும் இளம் திருஅவை கிறிஸ்தவர்களைக் கைது செய்வதற்கான தனது தமஸ்கு நோக்கிய பயணத்தில், சவுல் திடீரென்று வானத்திலிருந்து ஓர் ஒளியை எதிர்கொள்கிறார்.  அவர் தரையில் விழ, “சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?” என்று தம்மோடு பேசும் குரலொன்றைக் கேட்டார். அவர், “ஆண்டவரே நீர் யார்?” எனக் கேட்டபோது,  ஆண்டவரோ, “நீ துன்புறுத்தும் இயேசு நானே. நீ எழுந்து நகருக்குள் செல்; நீ என்ன செய்யவேண்டும் என்பது அங்கே உனக்குச் சொல்லப்படும்” என்றார். அவர் பார்வை இழந்தார்.   

அடுத்து, அத்தருணத்தில் அவரோடு பயணம் செய்தோர் அக்குரலைக் கேட்டனர். ஆனால் ஒருவரையும் காணாமல் வாயடைத்து நின்றனர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

ஆண்டவராகிய இயேசு, தமஸ்குவில் அனனியா என்னும் பெயருடைய சீடர் ஒருவரை அழைத்து, சவுலிடம் சென்று அவரைக் குணமாக்கும்படி  அழைக்கிறார். கிறிஸ்தவர்களைக் கைது செய்ய அதிகாரம் உள்ள நபரிடம் செல்வது குறித்து அனனியா வெளிப்படையாகவே கவலைப்படுகிறார். 

ஆனால்,  ஒரு மிக முக்கியமான பணிக்காக ஆண்டவர்  சவுலைத் தேர்ந்தெடுத்துள்ளார் என்பது வெளிப்படுகிறது. ஆம், யூதரல்லாதப் புறவினத்தாருக்கு   இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிக்க்கும் பணிக்குச் சவுல் (பவுல்) இந்நிகழ்வின் வழியாக இயேசுவின் நேரடி அழைப்பப் பெறுகிறார்.  
 
நற்செய்தி. 

இயேசு அவர் வழங்கும் ஆன்மீக உணவைப் பற்றி இன்றும் தொடர்ந்து அறிவுறுத்துகிறார். ஆவர்  தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அப்பம் மற்றும் திராட்சை இரசம் வடிவில் தம்மைக் கொடுப்பார் என்று கூறுகிறார்.    அவர் தனது உடலாலும் இரத்தத்தாலும் சீடர்களைத் திடப்படுத்துவதாக  வாக்களிக்கிறார்.   அவரைப்  பின்பற்றுபவர்களுக்கு வாழ்வின் உணவாக   தம்மையே கொடுக்கவுள்ளார் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றார்.  நம்மைப் பொறுத்தவரை, புனித யோவான் நற்செய்தியின் இந்த ஆறாவது அதிகாரம் நற்கருணையில் இயேசுவின் உண்மையான உடனிருப்பை எடுத்தியம்பும் வலுவான விவிலிய அடிப்படையாகும். 

தம்மைப் பின்பற்றுபவர்கள் தம்முடன் ஒன்றித்திருக்கவும்,  தம்மை உண்பவர்களாகவும் இருக்கவும்  வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். மேலும் அவரது திருவுடலும் திருஇரத்தமும் நம்பிக்கையாளர்களின்  நிலைவாழ்வுக்கான அடிப்படை உணவாகவும் திகழும் என்கிறார் ஆண்டவராகிய இயேசு.  


சிந்தனைக்கு.

இன்றைய இரு வாசகங்களையும் கூர்ந்து கவனித்தால், முதல் வாசகத்தில் புனித பவுல் அடிகளின் மனமாற்றத்தைப்  பற்றியும், நற்செய்தியில் இயேசு தம்மை   வாழ்வின் அப்பமாகவும்  நமக்கு அருளும் செய்தியை அறிகிறோம்.      

பவுல் அடிகளைப் போல்,  சில சமயங்களில்  நாம் செய்வதுதான் சரி என்று குருட்டுத்தனத்தில்  செயல்படுகிறோம். நமது சொந்த தனிப்பட்ட புரிதலில் செயல்படுவது எப்போதும் சரியாக அமையாது. ‘உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவதைப்போல் மண்ணுலகிலும் நிறைவேறுக' என்று இறைவேண்டல் செய்யும்போது, நமது விருப்பத்திற்கு  அல்ல கடவுளின் விருப்பத்திற்கு நம்மை கையளிக்கிறோம். உண்மையிறிந்த பவுல் அடிகள்  தன் பாதையை, குறிக்கோளை மாற்றிக்கொண்டு, தூய ஆவியாரின் வழிகாட்டுதலை முழுமையாக ஏற்றார். பிற இனத்தவருக்கு இயேசுவின் மீட்புச் செயலை  எடுத்துரைக்கும்  கருவியாய் பவுல் மாறினார்.

‘ஏன் என்னை துன்புறுத்துகின்றாய்?’ எனும் இயேசுவின் கேள்வி பவுல் அடிகளைச் சிந்திக்கத் தூண்டியது. இதனிமித்தம் திருஅவைதான் அவர் துன்புறுத்திய ‘இயேசுவின் உடல்’ என்ற ஆழ்ந்த இறையியலை உணரலானார். 

அடுத்து, இதே பவுல் அடியார், 1 கொரி 11:27-ல், ‘எவராவது தகுதியற்ற நிலையில் இந்த அப்பத்தை உண்டால் அல்லது ஆண்டவரின் கிண்ணத்தில் பருகினால், அவர் ஆண்டவரின் உடலுக்கும் இரத்தத்திற்கும் எதிராகக் குற்றம் புரிகிறார்’ என்று படிப்பிக்கிறார். உண்மையில் இயேசுவின் திருவுடலுக்கு எதிராக இவர்தான் ஒரு காலத்தில்  சீறியெழுந்தார். அதே பவுல் இயேசுவின் திருவுடலுக்கு எதிராக செயல்படுபர்கள் குற்றவாளிகள் என்கிறார். இத்தகைய மனமாற்றமும் துணிகர படிப்பினையும் நமது நம்பிக்கை வாழ்வுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

பவுல் அடிகள் இயேசுவை உட்கொண்டதினால் அவரைப்போலவே ஆனார். நாமும் இயேசுவை உட்கொள்கின்றபோது அவரை போன்று ஆகுகின்றோம், அவரோடு என்றும் இணைந்திருக்கின்றோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனிமித்தமே, இயேசு, ‘ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது’ (யோவான் 15:5) என்று உறுதியாக கூறினார்.   

தொடர்ந்து, அப்பம் பிட்குதலில் பங்கெடுத்ததால் பவுல் அடிகள் தொடர்ந்து நற்செய்திக்காகப் பயணித்தார்.  நற்கருணை வாழ்வை வாழ்ந்து காட்டினார். “வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர்”  (6:57) என்று இயேசு கூறியதைப்போன்று, இன்று அவரது திருவுடலாகிய நற்கருணையின் மக்களாக  நாம் வாழ்கிறோம். நாமே உலக வாழ்வுக்கான இயேசுவின் திருவுடல்! என்பதைச் சிந்தித்துச் செயல்படுவோம். 

  
இறைவேண்டல்.

நற்கருணை எனும் எமது ஆன்மீக உணவின் ஊற்றாகிய இயேசுவே, உம்மில் இருந்த  மனநிலையே என்னிலும் நிலைத்திருக்க அருள்புரிவீராக. ஆமென்

 
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452