அஞ்சாதீர், நம்பிக்கை கைக்கொடுக்கும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 ஏப்ரல் 2024
பாஸ்கா 2ஆம் வாரம் - சனி
தி. பணிகள் 6: 1-7
யோவான் 6: 16-21
முதல் வாசகம்:
தொடக்கக் கால கிறிஸ்தவ சமூகத்தில் கைம்பெண்களுக்கு நியாயமான உணவை விநியோகிப்பதில் சிக்கல்கள் இருந்த சூழலை முதல் வாசகம் விவரிக்கிறது. அன்று எருசலேம் பகுதியில் கிரேக்க மொழி பேசும் யூத கிறிஸ்தவர்கள் ("ஹெலனிஸ்டுகள்") அராமிக் மொழி பேசும் யூத கிறிஸ்தவர்கள் ("ஹீப்ருக்கள்") என இரு பெரும் பிரிவினர் இருந்தனர்.
அச்சூழலில், கிரேக்க மொழி பேசும் யூத கிறிஸ்தவர்கள் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்து வந்தனர். பன்னிரண்டு திருத்தூதர்களும் இயேசுவின் நற்செய்தி பரப்பும் பணியில் கவனம் செலுத்துவதால், கைம்பெண்களுக்கான உதவிகளை அவர்களால் கவனிக்க முடியவில்லை என்பதை உறுதியாக ஒப்புக்கொண்டனர்.
ஆதலால், அவர்கள் சமூகத்தின் முன் இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைத்தனர். தூய ஆவியானவர் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஏழு பேரை தேர்ந்தெடுத்து, கைம்பெண்களுக்கான சமூகப் பணியை மேற்கொள்ளுதல் சிறப்பு என்று கருதினர்.
இறைமக்களுக்கு திருத்தூதர்களின் இந்த முன்மொழிதல் ஏற்கத்தக்கதாக இருந்தது. எனவே, மிகக் கவனமாகச் செயல்பட்டு, அவர்கள் மத்தியில் இருந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, நிக்கொலா எனும் எழுவரை தேர்வுச் செய்தனர்.
பின்னர், திருத்தூதர்கள் அவர்களுக்காக இறைவேண்டல் செய்து, அவர்கள் தலையில் கைகளை வைத்து இறைவனிடம் வேண்டினர். இதன்வழி அந்த எழுவருக்கும் அங்கீகாரத்தையும் ஆதரவையும் நல்கினார். இதன் விளைவாக, பிரச்சினை தீர்க்கப்பட்டதோடு, நம்பிக்கையாளர் சமூகம் எண்ணிக்கையிலும் நம்பிக்கையிலும் தொடர்ந்து வளர்ச்சியடைந்தது.
நற்செய்தி:
ஒரு மாலை பொழுது, இயேசுவின் சீடர்கள் கடலைக் கடந்து கப்பர்நாகூமுக்குச் செல்ல படகில் ஏறி பயணித்தனர். இயேசு தனித்திருந்தார். ஏற்கனவே இருட்டாகிவிட்ட நிலையில், பலத்த காற்று வீசவே, கடல் சீற்றமாக மாறியது. ஏறக்குறைய மூன்று அல்லது நான்கு மைல்கள் கடலுக்குள் படகு சென்ற பிறகு, சீடர்கள் இயேசு தண்ணீரில் நடந்து வருவதைக் கண்டார்கள். இருளில் அவரைக் கண்ட சீடர்கள் அது ‘பேய்’ என்று அஞ்சினர்.
ஆனால், இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்று சொல்லி அவர்களைச் அமைதிப்படுத்தினார். அவர்கள் அவரை படகில் அழைத்துச் செல்ல விரும்பினர், ஆனால் திடீரென்று படகு அவர்கள் செல்ல வேண்டிய கரையை அடைந்தது என்று யோவான் குறிப்பிடுகிறார்.
சிந்தனைக்கு:
இன்றைய நற்செய்தி இயற்கையின் மீது இயேசுவின் ஆற்றலையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகிறது. கடலின் மீது கடவுள் கொண்டுள்ள ஆற்றலைப் பற்றி பழைய ஏற்பாட்டு நூல்களில் வாசிக்கிறோம். அவற்றுள், தொ.நூ, 1:2-6, திபா 74:12, 15:107 போன்றவற்றை கூறலாம். இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து தப்பி வந்துபோதும் கடல்மீது கடவுள் தம் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவர்கள் பாதுகாப்பாகக் கடந்துவர வழிவகுத்தார். ‘கொந்தளிக்கும் கடல்மீது நீர் ஆட்சி செலுத்துகின்றீர்; பொங்கியெழும் அதன் அலைகளை அடக்குகின்றீர்’ (திபா 89:9) என்று கடல் மீது ஆண்டவரின் ஆற்றலை வாசிக்கிறோம்.
தந்தையைப்போல் இயேசுவுக்கும் இயற்கையின் மேல் முழ அதிகாரம் உண்டு என்பதை இயேசு இங்கே மெய்பிக்கிறார். இயேசு கடலில் நடந்து வருவதைப்பார்த்துவிட்டுச் சீடர்கள், “அது பேய்” என்று பயத்தில் உளறியதாக மாற்கு குறிப்பிடுகிறார். ( 6: 49) அப்பொழுது இயேசு அவர்களிடம், “நான்தான், அஞ்சாதீர்கள்” என்கின்றார்.
இன்றைய நற்செய்தியில் நாம் கண்ட சீடர்களுக்கும் நமக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களைப் போன்றுதான் நம்மிலும் பெரும்பாலோர் எல்லாவற்றிற்கு அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம். இத்தகைய தருணங்களில் ஆண்டவர் நமக்குக் கூறும் செய்தித்தான் “அஞ்சாதீர்கள்”.
“அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே.....மிகத் துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்” என்று பாரதியார் பாடினார்.
இவ்வரிகள் நமக்கும் பொருந்தும். உலகெங்கும் உள்ள கிறிஸ்துவின் சீடர்களுக்கு இன்று தேவை துணிவு. தங்களிடம் உள்ள சொத்து, விலை உயர்ந்த உடைமைகள், குடும்பம் போன்றவற்றை முன்வைத்து, அவற்றைத் தற்காப்பதற்குக் கோழைகளாக மாறுகிறோம். ‘துணிவிருந்தால் துக்கமில்லை, துணிவில்லாவனுக்குத் தூக்கமில்லை’ என்பது சான்றோர் வாக்கு.
நாளைய பொழுதின் பாதுகாப்பை எண்ணி, எண்ணி முடங்கிக்கிடக்கும் கிறிஸ்தவர் தம் சீடத்துவத் தகுதியை இழக்கின்றனர். இயேசு யூதச் சமூகத்தில் எவையெல்லாம் தவறு என்று அறிந்தாரோ, அவற்றை துணிவோடு எதிர்த்தார். அவர் முகத்தாட்சனை பார்க்கவில்லை.
அத்தோடு, எது சரி என்று அவர் நினைத்தாரோ, அதனைத் துணிவோடு செய்தார். ஆக, தவறை, தவறு என்று சுட்டிக்காட்டுவதற்கும், சரியானதை சரி என்று செய்வதற்கும், அவருக்கு துணிவு இருந்தது. அந்த துணிவு நம்மில் உண்டா?
முதல் வாசகத்தில், கிறிஸ்தவர்களுக்கு பலத்த எதிர்ப்பு இருந்தபோதும், அவர்க்ள நம்பிக்கையோடு எழுவரை திருத்தொண்டர்களாக நியமித்து கிறிஸ்தவச் சமூகத்தை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். பிறருக்கான அன்பு பணி அவர்களுக்குப் பெரிதெனப்பட்டது. இறைமக்களும் எதிர்காலத்திற்கு வேண்டும் என்று பாராமல், சொந்த உடைமைகளை விற்று பொதுநலனுக்கு அளித்தனர். ஆண்டவரின் ‘அஞ்சாதீர்' எனும் கூக்குரல் அவர்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்தது.
நமக்கு எல்லாம் ‘பயமயம்'. கெட்டது நிகழ்ந்துவிடும் என்ற பயத்தில் எதை செய்தாலும் நாள் நட்சத்திரம் பார்ப்பதிலும், எண் சாஸ்தரிம் பின்பற்றுவதிலும், கிளி சோதிடம் பார்ப்பதிலும் கருத்தாய் இருக்கிறோம். ஆனால், நற்கருணையை நாடி ஓடுகிறோம். ஆண்டவரை திருப்பிப்படுத்த நினைக்கிறோம். ஆண்டவரின் ‘அஞ்சாதீர்' எனும் கூக்குரல் நமது செவிகளில் ஒலித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையேல் கிறிஸ்தவம் இவ்வுலகிற்கு உப்பாகவும் ஒளியாகவும் இருக்க முடியாது.
இறைவேண்டல்:
அஞ்சாதீர் என்று உமது சீடர்களை அடிக்கடி திடப்படுத்திய ஆண்டவரே, எனது வாழ்வில் பலமுறை ‘அஞ்சாதீர்' என்று என்னை திடப்படுத்தி ஊக்கம் ஊட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறேன். ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
