எது நேர்ந்தாலும் சாட்சிம் பகர்வேன்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

6 ஏப்ரல்  2024                                                                                         

பாஸ்கா எண்கிழமை - சனி

தி. பணிகள்  4: 13-21                                                         

மாற்கு  16: 9-15

 

முதல் வாசகம்.

நேற்றைய முதல் வாசகத்தில்  பேதுருவின் துணிகரமான  உரைக்கும் செயலுக்கும் அஞ்சிய யூத தலைமைச் சங்கத்தார் பேதுருவையும் யோவானையும் சிறையில் அடைத்ததை அறிந்தோம். ஆனாலும் மக்கள் மத்தியில் பேதுரு  மற்றும் யோவான் போன்ற திருத்தூதர்களின் செல்வாக்குப் பெருகி வந்தது. அதே வேளையில், இயேசுவின் பெயரால் நலம் பெற்ற மனிதர் அவர்களோடு நிற்பதைக் கண்டதால், அவர்களால் பேதுருவின் மீதும் யோவான் மீதும் குற்றம் சாற்ற  முடியவில்லை. உண்மையில், இருதலைக் கொள்ளி எறும்பு போலானார்கள். ஆகவே, பேதுரு மற்றும் யோவான் இருவரையும்  என்ன செய்வது என்று அவர்களுக்குத்  தெரியவில்லை. 

அவர்கள் திருத்தூதர்களைத்  தண்டித்தால், மக்கள் கலக்கமடைவார்கள், ஏனென்றால் திருத்தூதர்களின் நற்பணியால்  பலர் இயேசுவை ஏற்கத் தொடங்கியுள்ளனர். எனவே, மேலும் இயேவின்  பெயரால் ஏதும் செய்ய வேண்டாம் அல்லது “அந்த பெயரை” குறிப்பிட வேண்டாம் என்று திருத்தூதர்களுக்குப்  பலமான எச்சரிக்கை கொடுக்க அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

இம்முறை, பேதுருவும் யோவானும் விழித்துக்கொண்டாடர்கள். தலைமைச் சங்கத்தாரை எதிர்த்து,   “உங்களுக்குச் செவிசாய்ப்பதா? கடவுளுக்குச் செவிசாய்ப்பதா? இதில் கடவுள் பார்வையில் எது முறையானது என நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்; எது நேரிட்டாலும்  நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது”  என்ற ஒரே தீர்மானத்தை முன்வைத்தனர் .


நற்செய்தி.

நற்செய்தி, மகதலா மரியாவுக்கு இயேசு தோன்றியதை விவரிக்கிறது.   வாரத்தின் முதல் நாளில் (ஞாயிற்றுக்கிழமை), அவர் உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு முதலில் மகதலா மரியாவுக்குத்   தோன்றினார். தொடர்ந்து, அவர் இறந்ததை எண்ணி துக்கத்தில் ஆழ்ந்திருந்த மற்ற சீடர்களிடம், தான் இயேசுவை உயிருடன் பார்த்ததாகச் சொல்ல விரைந்தாள், .

1.சீடர்களின் அவநம்பிக்கை:
 
மகதலா மரியா  சாட்சியமளித்த போதிலும், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று சீடர்கள் ஆரம்பத்தில் நம்பவில்லை.  

2.இயேசு மற்ற இருவருக்குத் தோன்றினார்: 

பின்னர் அவர்களுள்  இருவர் வயல்வெளிக்கு நடந்து சென்றபோது இயேசு அவர்களுக்கு வேற்று உருவில் தோன்றினார் என்று மாற்கு குறிப்பிடுகிறார். அவர்களும் ஓடிச் சென்று மரியாவைப் போலவே மற்ற சீடர்களிடம் தெரிவித்த போது அவர்களும் நம்ப மறுத்தனர்.  

3.நம்பிக்கையின்மையைக் கண்டித்தல்.

அடுத்து பதினொருவரும் பந்தியில் அமர்ந்திருந்தபொழுது அவர்களுக்கு இயேசு தோன்றியபோது, உயிருடன் எழுப்பப்பட்ட தம்மைக் கண்டவர்கள் சொன்னதையும் நம்பாமல் அவர்கள் கடின உள்ளத்தோடு இருந்தமையால் அவர் அவர்களுடைய நம்பிக்கையின்மையைக் கண்டித்தார்.

4. இயேசுவால் பணிக்கப்படுதல்.

நிறைவாக, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்று இறையாட்சிக்கான பணியைத் தொடர திருத்தூதர்களைப் பணித்தார் இயேசு. 


சிந்தனைக்கு.

பேதுரு எந்த தலைமைச் சங்கத்தாருக்கு அஞ்சி இயேசுவை மறுதலித்தாரோ, யோவான் யாருக்கு அஞ்சி யாதொன்றும் செய்ய துணிவின்றி சிலுவை அடியில் நின்றிருந்தரோ அவர்கள் முன்னிலையில், “எது நேரிட்டாலும்  நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது”  என்ற ஒரே தீர்மானத்தை  இருவரும் அறுதியிட்டுக் கூறினர். 

இவர்களைக் கல்லி அறிவு அற்றவர்கள், சிந்திக்க இயலாதவர்கள் என்றுதான் தலைமைச் சங்க்த்தார்  முதலில் நனைத்தனர். ஆனால், இந்த இரு திருத்தூதர்களின் இயேசுவுக்கான உறுதியான சாட்சியத்தைக் கேட்ட போது மருண்டு போயினர். 

நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்தச் செய்தியை மகதலா மரியா சீடர்களிடம்  சொன்னபோது அவர்கள் முதலில் நம்பவில்லை. அதன்பிறகு உயிர்த்த ஆண்டவர் இயேசு வயல்வெளியில் இருந்த சீடர்கள் இருவருக்குத் தோன்றியதை  அந்த சீடர்கள் மற்ற சீடர்களிடத்தில் சென்று சொன்னபோதும் அவர்கள் அதனை நம்பவில்லை.  நிறைவாக,  பதினொருபேர் கூடியிருந்தபோது உயிர்த்த ஆண்டவர் கிறிஸ்து அவர்கள் முன்பாகத் தோன்றி  அவர்களின் அசட்டுத்தனத்திற்காகவும் மந்தபுத்திக்காவும்  கடிந்துகொள்கின்றார்.  

இயேசு உயிர்த்தெழுந்தார் என்று கூறும்போது, அவர் இன்றும் என்றும் நம்மோடு வாழ்கிறார் என்பதுதான் பொருள். எனவேதான் இயேசு உயிர்த்தெழுந்தார் எனும் உண்மையைத் திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் அவர் உண்மையில் நம்மோடு வாழ்கிறார் என்பதை நற்செய்தியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.

புனித பவுல் அடிகள் உரோமையருக்கு எழுதும்போது, ‘இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்’ (14:9)  என்பதை ஓர் இறையியல் வெளிப்பாடாக படிப்பிக்கிறார். ‘கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார்’ என்று கூறும்போது, அவர் இறந்து மக்கள் மனதில் வாழ்கிறார் அல்லது மக்கள் நினைவில் வாழ்கிறார் என்பது பொருள் அல்ல. இயேசுவின் உயிர்ப்பு என்பது எண்ணத்திலும், நினைவிலும் அல்லது கொள்கையிலும் வாழ்கிறார் என்று பொருள் படாது. உயிர்த்த இயேசு காலம், இடம் ஆகியவற்றைக் கடந்து நிற்கிறார். 

‘இதோ உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' (மது 28:20) என்றவர் இன்றும் உயிரோடு இருக்கிறார். அவர் நம்மோடு மட்டுமல்ல, நம்மிலும் வாழ்கிறார். ஆகவே, பேதுருவும் யோவானும் தலைமைச் சங்கத்தார் முன்னிலையில்  கூறிய  “எது நேரிட்டாலும்  நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது” என்ற அதே வீரச் வசனத்தை  எங்கும் எச்சூழலிலும்  நாம் அறிக்கையிட முன்வர வேண்டும். ‘நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே’ எனும் புனித பவுல் அடிகளைப் பின்பற்றி வாழ்வதே உன்னத சீடத்துவம்.   


இறைவேண்டல்.

‘என்னில் நம்பிக்கை கொள்வோர் இறப்பினும் வாழ்வர்' என்றுரைத்த ஆண்டவரே,   எது நேர்ந்தாலும் உமக்கான சாட்சிய  வாழ்வில் நான் தளர்ந்துவிடமால், துணிவுடன் வாழும் நம்பிக்கை வாழ்வில் என்னைத் திடப்படுத்தியருளும். ஆமென்.


ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452