மறதி- ஆசீர்வாதம் ...! || ஞா சிங்கராயர் சாமி.கோவில்பட்டி | 21.11.2024

மறதியாளர்கள்
ஆசிர்வதிக்கப்
பட்டவர்கள்.

இறைவன் நமக்கு
எண்ண முடியாத‌
விலை மதிப்பில்லாத‌
பல கோடி பரிசுகளை தந்திருக்கிறான்

அதில் மறதி எனும் செல்வ‌மும்
நமது மனதுக்கு அவன் தந்த‌
மறக்க முடியாத அன்பளிப்பு

    
 ‘நன்றல்லது
அன்றே மறப்பது நன்று’
என்றார் நமது கவிஞர்

ஆனால் நாம் எதை மறக்கக்கூடாதோ அதை சுலபத்தில் மறந்து விடுகிறோம்
நாம் வாங்கிய கடன்களை,
உறவினரை,
நண்பரை, ந‌ன்றியை இன்னும் எத்தனையே
நினைவுக்குக் கூட வருவதில்லை

ஆனால் மறக்க வேண்டியது,’ ந‌ன்றல்லது’ பட்டியல் மிகமிக‌நீளம்,

அவமானத்தை, துரோகத்தை, நன்றி மறந்தவரை,
துயரத்தை, காயத்தை,வலிகளை,தோல்விகளை இன்னும்
எத்தனை எத்தனை குப்பைகள்,
இவைகள் யாவும் மறக்கப்படாமல் போனால் நம் மனம் பேதலித்து,
பித்தேறி சித்தம் தடுமாறும்,

ஆகவே மறதியாளர்கள் ஆசிர்வதிக்கப்
பட்டவர்கள்.

வாழ்வின் மகிழ்ச்சிக்கு இரகசியங்கள் இரண்டு.

காயம் பட்டதை மறந்து விடுங்கள்
ஆனால் கருணையை மறந்து விடாதீர்கள்.

சொல்வது சுலபம் அய்யா,
காயத்தின் வலி போனாலும்
அதன் தழும்புகளின் வேதனை அதிகமய்யா?

உண்மைதான்,
ஆனால் காயத்தை மறந்து விடுங்கள்
அதன் வலியும் மறந்து விடும்
முடிகிற காரியமா அது?

முடியும்,
மன்னித்தால் முடியும்.
மறப்பதும்,
மன்னிப்பதும்
மனிதனுக்காகவே இறைவன் தந்த இரண்டு வரங்கள்.

நல்லதை , 
நண்பரை, மறக்காமல் மலரவிடுங்கள் நினைவுகளில்

நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்லது அன்றே மறப்பது நன்று.

சாமானியன்
ஞா சிங்கராயர் சாமி
கோவில்பட்டி