அன்பு மற்றும் ஒற்றுமையின் புளிக்காரமாக வாழ்வோம் திருத்தந்தை பதினான்காம் லியோவின் மறையுரை

என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைத் தொடங்கும் இந்நாளில்​​நன்றியுணர்வு நிறைந்த இதயத்துடன் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். புனித அகுஸ்தீனார் ”ஆண்டவரே, நீர் எங்களை உமக்காகவே படைத்தீர், எங்கள் இதயம் உம்மில் இளைப்பாறுதல் அடையும் வரை ஓய்வெடுக்காது” என்று தனது நூலில் எழுதியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, நாம் மிகவும் துயரமான நாள்களை உணர்ந்தோம். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறப்பு நம் இதயங்களை சோகத்தால் நிரப்பியது. அந்தக் கடினமான நேரங்களில், "ஆயர் இல்லாத ஆடுகளைப் போல" (மத். 9:36) என்று நற்செய்தியில் எடுத்துரைக்கப்படுபவர்கள் போல நாம் இருந்ததை உணர்ந்தோம். உயிர்ப்புப் பெருவிழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதி ஆசீரை நாம் பெற்றோம், உயிர்ப்பின் ஒளியில், கடவுள் தம் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டார், சிதறடிக்கப்பட்ட அவர்களைக் கூட்டிச் சேர்ப்பார், "ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்’ (எரே. 31:10) என்ற உறுதியுடன் அந்த தருணத்தை நாம் எதிர்கொண்டோம்.

இதே நம்பிக்கை உணர்வில், கர்தினால்கள் அவை கான்கிளேவ் அவைக்காக ஒன்றுகூடியது. வெவ்வேறு வரலாறுகள் மற்றும் வாழ்க்கைப் பாதைகளைக் கொண்ட பகுதியிலிருந்து வந்த நாங்கள், திருத்தூதர் பேதுருவின் வழித்தோன்றலாம் உரோமை ஆயரைத் தேர்ந்தெடுக்கும் எங்கள் விருப்பத்தை கடவுளின் கைகளில் ஒப்படைத்தோம். கிறிஸ்தவ நம்பிக்கையின் வளமான பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் திறன் கொண்ட ஒரு மேய்ப்பராகவும், அதே நேரத்தில், தொலைதூரத்தில் தனது பார்வையை செலுத்தி, இன்றைய கேள்விகள், கவலைகள் மற்றும் சவால்களைச் சந்திக்கும் ஒரு மேய்ப்பராகவும் இருக்கக்கூடிய ஒருவரை உரோமை ஆயராகத் தேர்ந்தெடுக்கும் பணியினை மேற்கொண்டோம். உங்கள் அனைவரது செபம், தூய ஆவியின் செயல்பாடு ஆகியவை ஒன்றிணைந்து எங்கள் இதயங்களை தூய ஆவி ஒரே மெல்லிசையில் அதிர்வுறச் செய்ததை நாங்கள் உணர்ந்தோம்.

எந்தத் தகுதியும் இல்லாமல் அச்சம் மற்றும் நடுக்கத்துடன் இருந்த நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். உங்கள் நம்பிக்கைக்கும் மகிழ்ச்சிக்கும் ஒரு பணியாளராகத் தன்னை மாற்றிக்கொள்ள விரும்பும் ஒரு சகோதரனைப்போல நான் உங்களிடம் வருகிறேன், நம் அனைவரையும் ஒரே குடும்பத்தில் ஒன்றுபடுத்த விரும்பும் கடவுளின் அன்பின் பாதையில் உங்களுடன் இணைந்து நடக்கிறேன்.

அன்பு. ஒற்றுமை இவையே இயேசு பேதுருவிடம் ஒப்படைத்த பணியின் இரண்டு பரிமாணங்கள்.

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மை திபேரியக் கடல் பகுதிக்கு அழைத்துச் செல்கிறது, மீன்பிடித்தல் நடைபெறும் இந்த பகுதியில் தான், தீமை மற்றும் மரணத்தின் நீரிலிருந்து மனிதகுலத்தைக் காப்பாற்றுதல் என்னும் பொருள்படும் வகையில்  மனிதர்களைப் பிடிக்க தந்தைக் கடவுளிடமிருந்து பெற்ற பணியைத் தொடங்கினார் இயேசு. இக்கரையைக் கடந்து, பேதுருவையும் மற்ற முதல் சீடர்களையும் தம்மைப் போல "மனிதர்களைப் பிடிப்பவர்களாக வாழ அழைத்தார்; இப்போது, ​​உயிர்த்தெழுந்த பின்பு அவரது அப்பணியை சீடர்கள் தொடரவும், வாழ்க்கைக் கடலில் பயணம் செய்யவும் கடவுளின் அரவணைப்பில் தங்களைக் காணவும் அழைப்பு விடுக்கின்றார்.

பேதுருவால் இப்பணியை எவ்வாறு நிறைவேற்ற முடியும்? தவறிழைத்தல், மறுதலித்தல் போன்றவற்றைக் கொண்ட நேரத்திலும் கூட, கடவுளின் எல்லையற்ற மற்றும் நிபந்தனையற்ற அன்பை அவர் தனது சொந்த வாழ்க்கையில் அனுபவித்ததால் மட்டுமே இது சாத்தியமானது என்று நற்செய்தி நமக்கு எடுத்துரைக்கின்றது. அதனால்தான், இயேசு பேதுருவைப் பார்த்துப் பேசும்போது, ​​நற்செய்தி கிரேக்க வினைச்சொல்லான “அகபாவோவைப் (agapao) பயன்படுத்துகிறது, இது கடவுள் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் குறிக்கிறது, அவர் தன்னையே முன்நிபந்தனையின்றி அளவின்றி கையளித்தலைக் குறிக்கிறது. இது பேதுருவின் பதிலுக்குப் பயன்படுத்தப்பட்ட வார்த்தையிலிருந்து வேறுபட்டது, பேதுருவின் பதில் நாம் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் நட்பின் அன்பை விவரிக்கிறது.

கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும், முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்” (தி.ப.4:11) என்று திருத்தூதர் பேதுரு கூறுகின்றார். அந்தக் கல் கிறிஸ்து என்றால், பேதுரு மந்தையை மேய்க்க வேண்டும், அதாவது தனித்த தலைவராகவோ அல்லது தலைவருக்கு எல்லாம் மேலான தலைவராகவோ இருக்க வேண்டும் என்ற சோதனைக்கு ஒருபோதும் அடிபணியாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரியாய் இருக்கவேண்டும்.  அவர் தனது சகோதர சகோதரிகளின் நம்பிக்கைக்குப் பணியாற்ற வேண்டும், அவர்களுடன் இணைந்து நடக்க வேண்டும்: ஏனென்றால் நாம் அனைவரும் "உயிருள்ள கற்கள்". திருமுழுக்கின் வழியாக, உடன்பிறந்த உணர்வின் ஒற்றுமையில், தூய ஆவியின் இணக்கத்தில், பன்முகத்தன்மையின் சகவாழ்வில் கடவுளின் இல்லத்தைக் கட்ட அழைக்கப்பட்டவர்கள் நாம். புனித அகுஸ்தீனார் கூறுவது போல், "திருஅவை என்பது தங்கள் சகோதரர்களுடன் இணக்கமாக இருப்பவர்களையும், தங்கள் அண்டை வீட்டாரை அன்பு செய்பவர்களையும் உள்ளடக்கியது"

சகோதர சகோதரிகளே, இதுவே நமது முதல் பெரிய விருப்பமாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒற்றுமையான திருஅவை, ஒன்றிப்பு மற்றும் ஒற்றுமையின் அடையாளமாகவும், நல்லிணக்கம் அடையும் உலகிற்கான புளிக்காரமாகவும் இருக்கும்.

நமது இந்தக் காலத்தில், நாம் இன்னும் அதிகப்படியான முரண்பாடுகளைக் காண்கிறோம். வெறுப்பு, வன்முறை, ஏற்றத்தாழ்வு, வேற்றுமைகள் குறித்த பயம் ஆகியவற்றால் ஏற்படும் அதிகப்படியான காயங்கள், பூமியின் வளங்களை சுரண்டி ஏழைகளை ஓரங்கட்டும் ஒரு பொருளாதார நிலை ஆகியவற்றை நாம் காண்கின்றோம். இத்தகைய சூழலில் நாம் ஒன்றிப்பு. ஒற்றுமை, உடன்பிறந்த உணர்வு என்னும் சிறிய புளிக்காரமாக இருக்க விரும்புவோம். தாழ்ச்சி மற்றும் மகிழ்ச்சியுடன் நாம் இந்த உலகிற்கு, “கிறிஸ்துவைப் பாருங்கள், அவரை நெருங்குங்கள்! அறிவூட்டுகின்ற ஆறுதல் அளிக்கின்ற அவரது வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்” ஒரே குடும்பமாக மாறுவதற்கான அவரது அன்பின் முன்மொழிவைக் கேளுங்கள் என்று எடுத்துரைப்போம். ஒரே கிறிஸ்துவில் நாம் அனைவரும் ஒன்றாஅய் இருக்கின்றோம். நமக்குள் மட்டுமல்லாது, பிற கிறிஸ்தவ தலத்திருஅவைகளுடனும், பிற மதப் பாதைகளில் நடப்பவர்களுடனும், அமைதியற்ற நிலையில் கடவுளைத் தேடுபவர்களுடனும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுடனும், அமைதி ஆட்சி செய்யும் ஒரு புதிய உலகத்தைக் கட்டியெழுப்புவோம். .

இத்தகைய மறைப்பணி மனப்பான்மையுடன் நமது சொந்த சிறிய குழுவில் நம்மை அடைத்துக்கொள்ளாமல் அல்லது உலகத்தை விட உயர்ந்தவர்கள் என்று உணராமல் இருப்போம். ஏனெனில் வேறுபாடுகளைக் கடந்து, ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட வரலாற்றையும் ஒவ்வொரு மக்களின் சமூக மற்றும் மத கலாச்சாரத்தையும் மேம்படுத்தும் வகையில் அனைவருக்கும் கடவுளின் அன்பை வழங்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.

அன்பான சகோதர சகோதரிகளே, இது அன்பின் நேரம்! நம்மை நம்மிடையே சகோதரர்களாக மாற்றும் கடவுளின் பிறரன்புப் பணியே நற்செய்தியின் இதயம். தூயஆவியின் ஒளி மற்றும் ஆற்றலுடன், கடவுளன்பின் மீதும் ஒற்றுமையின் அடையாளத்தின் மீதும் நிறுவப்பட்ட ஒரு திருஅவையை, உலகிற்கு அதன் கரங்களைத் திறந்து, இறைவார்த்தையை அறிவித்து, வரலாற்றால் தன்னை அமைதியற்றவர்களாக அனுமதிக்கும் ஒரு மறைப்பணி திருஅவையை உருவாக்குவோம். மனிதகுலத்திற்கான புளிக்காரமாக மாறுவோம். என்று திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் தனது மறையுரையினை மக்களுக்கு வழங்கினார்.