திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத் திட்டம் அறிவிப்பு | Veritas tamil

உருகுவே, அர்ஜென்டினா மற்றும் பெரு ஆகிய மூன்று நாடுகளுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மேற்கொள்ளவுள்ள 12 நாள் திருத்தூதுப் பயணத்திற்கான திட்டத்தை, நவம்பர் 3ஆம் நாள் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டது. நவம்பர் 6 முதல் 17ஆம் நாள் வரை நடைபெறவுள்ள இப்பயணத்தில், பத்து நகரங்களுக்குச் சென்று, ஏறத்தாழ 40 உரைகளைத் திருத்தந்தை ஸ்பானிய மொழியில் நிகழ்த்தவுள்ளார்.

திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குநர் மத்தேயோ புரூனி அவர்கள், இப்பயணம் ஒன்றிப்பு, சந்திப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை முன்னிறுத்துவதாக இருக்கும் என்றும், புனித வாழ்வுக்கான பொதுவான அழைப்பை வலியுறுத்தும் என்றும் தெரிவித்தார். இப்பயணத்தின்போது திருப்பலி நிறைவேற்றுதல், உள்ளூர் திருஅவைச் சமூகங்களைச் சந்தித்தல், அரசியல் தலைவர்களுடன் உரையாடுதல் மற்றும் பல்வேறு சமூகப் பின்னணிகளைச் சேர்ந்த மக்களைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

பெரு நாட்டில் பல ஆண்டுகள் மறைப்பணியாளராகவும் ஆயராகவும் பணியாற்றிய திருத்தந்தைக்கு, அந்நாட்டிற்கான பயணம் தனிப்பட்ட முறையில் சிறப்புமிக்கதாக அமையும். மேலும், அகுஸ்தீனிய சபை உறுப்பினர்களையும், திருஅவையில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.

நவம்பர் 6 முதல் 8 வரை உருகுவே நாட்டிலும், 8 முதல் 11 வரை அர்ஜென்டினா நாட்டிலும், 11 முதல் 17 வரை பெரு நாட்டிலும் திருத்தந்தை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இப்பயணத்தின் மூலம் அமைதி மற்றும் சந்திப்பு குறித்த செய்தியை உலகிற்குப் பகிர்ந்துகொள்ளத் திருத்தந்தை மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாக, சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர்  மரியா மோன்செராட் அல்வராடோ அவர்கள் தெரிவித்தார்.

இறுதியாக, சிறைக் கைதிகளைச் சந்தித்தல், சுற்றுச்சூழல் சுரண்டலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லுதல், ஏழைகள் மற்றும் நலிவுற்ற மக்களைச் சந்தித்தல் ஆகிய நிகழ்வுகளும் இப்பயணத்தில் இடம்பெறவுள்ளன. இவை சமூக நீதிக்கும் மனித மாண்புக்கும் திருத்தந்தை அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன.

Tamil Survey Popup Image