திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார் திருத்தந்தை பதினான்காம் லியோ

திருஅவையின் 267-ஆவது திருத்தந்தையாக கர்தினால்கள் அவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு 14-ஆம் லியோ என்ற பெயரை ஏற்றிருக்கும் புதிய திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்களின் பணியேற்பு விழாவானது மே 18, ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஆரம்பமானது.
இறைவார்த்தை வழிபாட்டைத் தொடர்ந்து திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தனது பணியினை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் விதமாக பணியேற்பு சடங்கானது ஆரம்பமானது. கத்தோலிக்க திருஅவையின் தலைவராக தந்தைக்குரிய அன்போடு அதனை வழிநடத்துதல் என்ற பெயரில் "பெட்ரினோ" என்னும் இச்சடங்கானது திருஅவையில் புதிய திருத்தந்தை பணியேற்பு விழாவன்று நடைபெற்று வருகின்றது.
இவ்வழிபாட்டுச் சடங்கின்போது, தலைமைத்துவத்தின் அடையாளமாக புதிய திருத்தந்தைக்கு பால்யம் மற்றும் மீனவர் மோதிரம் எனப்படும் முத்திரை மோதிரம் வழங்கப்பட்டது. என் ஆடுகளைப் பேணி வளர் என்று இயேசுவால் கட்டளையிடப்பட்ட திருத்தூதர் பேதுருவின் வாரிசாக அவர் இருக்க வேண்டும் என்ற கடமையை இப்பால்யமும் மோதிரமும் நினைவூட்டுகின்றன. திருஅவையின் தலைவராக, தியாகமுள்ள வாழ்வு வாழ்ந்த திருத்தூதர் தூய பேதுரு மற்றும் கிறிஸ்துவிற்காகவும் கிறிஸ்தவத்திற்காகவும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்த மக்கள் ஆகியோர் இரத்தம் சிந்திய இடத்தில் புதிய திருத்தந்தை பணியேற்கும் வழிபாட்டுச் சடங்கானது நடைபெற்றது.
இறைவார்த்தை வழிபாட்டைத் தொடர்ந்து கர்தினால் ஆயர், கர்தினால் திருத்தொண்டர், கர்தினால் அருள்பணியாளர் என வெவ்வேறு கண்டங்களைச் சார்ந்த மூவர் திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள் அருகில் சென்றனர். மூவரில் முதலாமவர் திருத்தந்தையின் தலைமைத்துவம் மேய்ப்பராக திருஅவையை வழிநடத்தும் தன்மை ஆகியவற்றை எடுத்துரைத்து பால்யத்தினை வழங்கினார்.
நம்பிக்கையை அடையாளப்படுத்தும் விதமாக புதிய திருத்தந்தைக்கு வழங்கப்பட்ட இந்த மீனவர் மோதிரமானது, மீனவரான பேதுரு இயேசுவின் அழைப்பை ஏற்று வலைகளை வீசி அதிகப்படியான மீன்களைப் பெற்றார் என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவும், தனது சகோதரர்களும் சீடர்களுமான பிறரை நம்பிக்கையில் உறுதிப்படுத்து என்று பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட பணியின் அடையாளமாகவும் வழங்கப்பட்டது. இம்மீனவர் மோதிரத்தின் மேற்பகுதியில் திருத்தூதர் பேதுருவின் உருவமும் பின்புறம் திருத்தந்தையின் இலச்சினையும் மோதிரத்தின் வளைவுப் பகுதியில் 14-ஆம் லியோ என்று இலத்தீன் மொழியிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக கர்தினால் திருத்தொண்டர் திருத்தந்தையிடம் நற்செய்தி புத்தகத்தை வழங்க திருத்தந்தை 14-ஆம் லியோ அவர்கள், புதிய திருத்தந்தை நற்செய்தி புத்தகம் கொண்டு மக்கள் கூட்டத்திற்கு ஆசீர் வழங்க கிரேக்க மொழியில் "Ad multos annos!” பாடலானது பாடப்பட்டது. மக்கள் கரவொலி எழுப்பி தங்களது மகிழ்வினை தெரிவித்தனர். கிறிஸ்துவின் சீடர்களை ஒன்றிப்பிலும், ஒற்றுமையிலும் பாதுகாப்பதில் புதிய திருத்தந்தைக்கு வலிமையும் மென்மையும் கிடைக்கப்பெற தூய ஆவியின் அருளை நாடும் செபத்துடன் இவ்வழிபாட்டு முறை நிறைவிற்கு வந்தது.
Daily Program
