அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை பதினான்காம் லியோவிற்கு நன்றி தெரிவித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபை தலைவர்.

துன்புறும் உக்ரைன் மக்களுக்கான உண்மையான, நீதியான மற்றும் நீடித்த அமைதி இடம்பெற வேண்டும் என கடந்த ஞாயிறன்று வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை பதினான்காம் லியோ அழைப்பு விடுத்தார். திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களை வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த உக்ரேனிய கிரேக்க கத்தோலிக்கக் கிறிஸ்தவ சபையின் தலைவர், அமைதிக்கு அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தைக்கு தன் நன்றியை வெளியிட்டார்.

திருப்பீடத்தின் நூலகத்தில் திருத்தந்தை 14ஆம் லியோ அவர்களைச் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்ட கீவ் நகரின் உயர் பேராயர் பிதாப்பிதா Sviatoslav Shevchuk அவர்கள், துன்புறும் உக்ரைன் மக்களுக்கான உண்மையான, நீதியான மற்றும் நீடித்த அமைதி இடம்பெற வேண்டும் என கடந்த ஞாயிறன்று அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை அழைப்பு விடுத்ததற்கு தான் நன்றியுள்ளவராக இருப்பதாகத் தெரிவித்தார்.

உக்ரைன் மக்களின் துன்பங்களின் குரலாக இருந்த திருத்தந்தையின் விண்ணப்பம், சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், கடத்தப்பட்ட குழந்தைகள் உக்ரைனுக்குள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதையும் உள்ளடக்கியிருந்ததையும் சுட்டிக்காட்டினார் உக்ரைன் கிரேக்க கத்தோலிக்கத் தலைவர்.இந்த சந்திப்பின் இறுதியில் உக்ரைன் மக்களின் துன்பங்களை வெளிப்படுத்தும் விதமாக ‘இரங்கற்பாட்டு செபம்’ என்ற தலைப்பிட்ட ஓவியம் ஒன்றை திருத்தந்தைக்கு பரிசளித்தார் கிரேக்க கத்தோலிக்கத் தலைவர்