சிரியாவின் போர்ச் சூழலில் நம்பிக்கை இழந்துவரும் மக்கள்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிரியாவில் கொலைகள், கடத்தல்கள், திருட்டு, துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறை மீண்டும் எழுந்துள்ளது என்று தலத்திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அசாத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் 100 நாள்களில், 4,700 பொதுமக்கள் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், அவரது ஆதரவுப் படைகள் பாதுகாப்புப் பணியில்  ஈடுபட்டிருந்தபோது தாக்குதல் நடத்தியதால் அமைதியின்மை ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள அலெப்போவின்  அருள்பணியாளர் பஹ்ஜத் கரகாச் அவர்கள், தற்போது மக்கள் எதிர்காலத்தைப் பற்றிய அச்சத்திலும் நிச்சயமற்ற தன்மையிலும் வாழ்கிறன்றனர் என்று அதன் தற்போதைய சூழல் குறித்து விவரித்துள்ளார். மேலும் சிரியாவில் நிகழ்ந்து வரும் மோதல்களைக் கண்டித்துள்ள அலெப்போவிற்கான திருத்தந்தையின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் ஹன்னா ஜல்லூஃப், O.F.M, அவர்கள், வரலாறு எப்போதும் பின்னோக்கி நகராது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

சிரியாவின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 2 விழுக்காடு மட்டுமே இருக்கும் கிறிஸ்தவர்கள், தங்கள் பாரபட்சமற்ற தன்மை மற்றும் அமைதியான நிலைப்பாடு காரணமாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் ஆயர் ஜல்லூஃப்.வன்முறையைத் தவிர்ப்பதன் மூலம், கிறிஸ்தவர்கள் சிரியா மக்களிடையே நம்பகத்தன்மையைப் பேணுகிறார்கள் என்றும், இதன்வழியாக அவர்கள் உரையாடலுக்கான பாலங்களாகச் செயல்பட முடியும் என்றும் இருவருமே ஒன்றாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாட்டின் மனிதாபிமான நெருக்கடிக்கு மத்தியில், ஏறத்தாழ 1.5 கோடி மக்களுக்கு உடல்நலப் பராமரிப்பு தேவைப்படுகிறது என்றும், மதவெறி அதிகரித்து மதச்  சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் நிலையில், கிறிஸ்தவச் சமூகம் நம்பிக்கை மற்றும் படைப்பாற்றலின் அடையாளமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் அருள்பணியாளர் Karakach.