அன்னையின் வழியில் ஏழைகளை தேடி செல்லும் இளைஞர்கள் || வேரித்தாஸ் செய்திகள்

சென்னை -மயிலை உயர் மறைமாவட்டத்தில் உள்ள பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு மாதா பங்கு ஆலய இளைஞர் இளம்பெண்கள் நம் அன்னையின் அன்பை ஏழைகள், அனாதைகள், கைவிடப்பட்டோர் உடன் பகிர்ந்து எடுத்துக்காட்டாய் திகழ்கின்றனர்.

அருள்பணி ஜோ ஆண்ட்ரு மங்களராஜ், தூய இருதய குருத்துவ கல்லூரியின் அதிபராகவும், பருத்திப்பட்டு தூய விண்ணேற்பு அன்னை ஆலயத்தின் பங்கு தந்தையாகவும், அருள்பணி ரீகன் மனுவேல்ராஜ் தூய இருதய குருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், பருத்திப்பட்டு பங்கின் இணை பங்கு தந்தையாகவும் பணியாற்றி வருகின்றனர். 

அருள்பணி ஜோ ஆண்ட்ரு மற்றும் அருள்பணி ரீகன் இருவரும் இளைஞர்களை ஊக்கப்படுத்தி நம்பிக்கையிலும் ,மனித நேயத்திலும் வளர அன்னையின் கரங்களில் 100   நாட்கள் ஜெபமாலை என்று அன்னையின் மகிமையை இன்றைய இளம் தலைமுறைக்கு வெளிப்படுத்த முடிவு எடுத்து தினமும் மாலையில் இளைஞர்கள் ஜெபமாலை ஜெபிக்க ஊக்கம் ஊட்டினர். முதலில் தொடர்ந்து நூறு நாட்கள் என்று முடிவு எடுத்து அதனை செயல்படுத்த பங்கின் இளைஞர்களை ஒன்று கூட்டி அன்னையின் கரங்களில் தொடங்கினர்.

கடந்த ஞாயிறு அன்று 50 வது நாளில் அன்னைக்கு ஜெபமாலை புகழ் மாலை சூடும் நாளில் அன்னைக்கு சிறப்பு சேர்க்க விரும்பிய பங்கு இளைஞர்கள் மோரை பங்கில் உள்ள பரிசுத்த  நற்கருணை இல்லத்தை தேர்வு செய்து அங்கு இருக்கும் ஏழைகள் ,மற்றும் ஆதரவற்ற மக்களோடு நேரத்தை செலவு செய்ய விரும்பினர். அன்றைய ஞாயிறு வழிபாட்டினை மிக சிறப்பாக செய்து முடித்த இளைஞர், இளம்பெண்கள் பங்கு தந்தையர்கள் அனுமதியுடன் தங்களுக்குள் பணம் சேமித்து அதனைக்கொண்டு அந்த இல்லத்தில் வாழும் இல்லவாசிகள் 110  பேருக்கு உடைகள் எடுத்து அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி, அவர்களோடு நேரம் செலவழித்து அவர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தயார் செய்து, அன்றைய நாளில் தங்களது 50 வது நாளின் ஜெபமாலையை அங்கு இருந்த மக்களோடு ஜெபித்து அன்னைக்கு அன்பின் மாலையாக அழகு சேர்த்தனர்.

அங்கு இருந்த ஆதரவற்ற உள்ளங்களின் கதைகளை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறிய இளைஞர்கள் தங்களின் தொடர் இருப்பை உறுதி செய்தனர். மேலும் அவர்களின் சார்பாக ஒரு தொகையினையும் அந்த இல்லத்தின் பராமரிப்பு செலவிற்கு கொடுத்துவிட்டு மாலை சிற்றுண்டி வழங்கிவிட்டு தங்கள் இளம் சென்றனர்.

பங்கு பணியாளர்கள் அருள்பணி ஜோ ஆண்ட்ரு மற்றும் அருள்பணி ரீகன் இருவரும் கூறும்போது எம் பங்கு இளைஞர்களின் இந்த மகத்தான பணி நம் அன்னையின் அன்பிற்கு மணிமகுடமாகவே திகழ்கிறது. குருக்களை உருவாக்கும் பணியில் இருக்கும் எங்களுக்கு இந்த இளைஞர்களின் தன்னலமற்ற சேவை, ஆழ்ந்த இறை நம்பிக்கை, அன்னையின் மேல் கொண்ட பற்று இவற்றை பார்க்கும்போது இவர்கள்  திருஅவைக்கும் இந்த சமுதாயத்திற்கும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக திகழ்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று கூறினார்கள்.

இந்த இயக்கத்தின் தலைவர் ரொசாரியோ கூறும்போது இளைஞர்களுக்கு இறை நம்பிக்கை இல்லை என்ற கருத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனெனில் அன்னையின் துணை கொண்டு பல பணிகள் ஆற்ற முடியும் என்று கூறினார்.

இந்த இளைஞர்களின் சிறப்பான இந்த பணி சென்னை -மயிலை உயர்மறைமாவட்டத்தில் சிறந்த எடுத்துக்காட்டு எனபது குறிப்பிடத்தக்கது.


_அருள்பணி.வி.ஜான்சன் SdC