மலை மனிதன்.. | Veritas Tamil

பீகார் மாநிலத்தின் கயா மாவட்டம் கெலோவர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி இந்த தசரத் மான்ஜி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான அவரும் மற்றவர்களும் அந்த கிராமத்து மலையடியில் குடிசை போட்டுத் தங்கிவந்தனர். அவர்கள் வாழ்ந்த கெலோவர் கிராமம் போல அந்த மலையின் கீழே பல கிராமங்கள் உண்டு. தண்ணீரோ, விறகோ அவர்களுக்குத் தேவையானதை மலையிலிருந்து கொண்டு வந்துவிடலாம் என்றாலும், மலைக்கு அந்தப்பக்கம் இருக்கும் சந்தைக்கோ, மருத்துவமனைக்கோ போகவேண்டுமென்றால் சரியான சாலையில்லை. எவ்வளவு அவசரம் என்றாலும் மலையைச் சுற்றி 70 கிமீ வரை பயணிக்க வேண்டும்.

இந்த சூழலில்தான், தண்ணீர் கொண்டுவர மலைக்குச் சென்ற தசரத்தின் மனைவி ஃபால்குனி தேவி பாறை உச்சியிலிருந்து தவறி விழுந்து காயமடைய, மலையைச் சுற்றி மருத்துவமனையை அடைவதற்குள் காப்பாற்ற முடியாமல் உயிரிழக்கிறார்.

அன்று அவர் ஒரு முடிவு எடுக்கிறார், இந்த மலையை உடைத்து ஒரு சாலை அமைத்து, இனி இது போன்ற காரணத்தால் இந்தகிராமத்தில் எந்த உயிரும் போக கூடாது என்று முடிவு செய்கிறார். வெறும் உளி, சுத்தியல் மற்றும் கடப்பாரையை மட்டும் வைத்துக் கொண்டு அந்த மலையை உடைத்து பாதையை அமைக்கும் வேலைகளை தொடங்குகிறார்.

முதலில் மக்கள் எல்லோரும் இவர் சில நாளில் இதை விட்டு விட்டுவேலைய பார்ப்பார் என்றே நினைத்தனர். ஆனால் தொடர்ந்து 22 ஆண்டுகள் தினமும் சில மணி நேரம் மலையை உடைக்கும் பணியை செய்தார். தன் வேலை நேரம் போக மற்ற எல்லா நேரமும் மலையை உடைக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டார்.

தனிமனிதனாக தினமும் காலை முதல் மாலை வரை தொடர்ந்து தனது கைகளால் தகர்த்து கடைசியில் ஒரு எளிய பாதையை உருவாக்கியே விட்டார்.

கிட்டத்தட்ட தொடர்ந்தது. 1960- இல் தொடங்கிய பயணம் அவருடைய பயணம் 1982-இல் முயற்சி செய்து 22 ஆண்டுகள் ஒரு மனிதன் அயராது உழைத்து, 360 அடி நீளமும், 30 அடி அகலமும், 30 அடி உயரமும் கொண்ட அந்தச் சாலையை உருவாக்கி தனது கிராமத்துக்கு பாதையை அமைத்து தந்தார். இவரது கடின உழைப்பும் புகழும் பரவி இவர் "Mountain Man" என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இவரது உழைப்பை பீகார் மாநில அரசு 2016ம் ஆண்டுதான் கவுரவித்தது, அதே ஆண்டில் இவரது புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகளை இந்திய தபால் துறை வெளியிட்டது.

அனைத்தையும் தனிமனிதனாகச் செய்த தசரத் மான்ஜி, 2007-ம் ஆண்டு பித்தப்பை புற்றுநோயால் மரணம் அடைந்தார்.