அடக்கம் ஆயிரம் பொன் தரும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

31 மார்ச் 2025
தவக்காலம் 4ஆம் வாரம் - திங்கள்
எசாயா 65: 17-21
யோவான் 4: 43-54
அடக்கம் ஆயிரம் பொன் தரும்!
முதல் வாசகம்.
இன்றைய வாசகப் பகுதியானது ஏசாயா இறைவாக்கு நூலின் மூன்றாம் பகுதிக்கு உட்பட்டது. இப்பகுதியானது, பாபிலோனிலிருந்து விடுதலைப்பெற்று எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த மக்களுக்கு உரைக்கப்பட்டது. கடவுள் இஸ்ரயேலருக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்றும், தொடர்ந்து, ஆண்டவர் புதிய வானம் மற்றும் புதிய பூமி படைக்கவுள்ளார் என்றும் வாக்குறுதி அளிக்கப்படுகிறது. இந்தப் புதிய பூமியானது, மகிழ்ச்சிக்கும் முழுமை வாழ்வுக்குமான இடமாக இருக்கும் என்றும், புதிய எருசலேமில் இனி துக்கமோ துயரமோ இருக்காது என்ற கடவுளின் வாக்குறுதிச் செய்தியை எசாயா விவரிக்கிறார்.
நற்செய்தி.
இயேசு, நற்செய்தியில், மக்களின் நம்பிக்கையின்மை பற்றிப் பேசுகிறார். யோவானின் நற்செய்தியில், இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் செல்கிறார். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட ஓர் அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார்.
நற்செய்தியில் இயேசு, இறக்கும் தருவாயில் இருந்த அரச அலுவலரின் மகனை நலமாக்குகின்றார். இதற்கு அடிப்படைக் காரணம் அரச அலுவலர் இயேசுவிடம் கொண்டிருந்த நம்பிக்கை என யோவான் குறிப்பிடுகிறார். ஏனெனில், “நீர் புறப்பட்டுப்போம். உன் மகன் பிழைத்துக் கொள்வான்” என்ற இயேசுவின் வார்த்தைகளை நம்பி, அவர் புறப்பட்டுப்போனார். அவர் நம்பியதுபோன்றே அவரது மகன் பிழைத்துக் கொள்கின்றான்.
சிந்தனைக்கு.
இன்று தவக்காலத்தின் நான்காவது வாரத்திற்குள் நுழைகிறோம். இந்த மண்ணுலகில் நாம் வாழும் வாழ்வானது கடவுள் வாக்குறுதி அளித்த முழு வாழ்க்கையின் நிறைவு அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த மண்ணுலக வாழ்வு ஒரு எதிர்நோக்கின் பயணம். இப்பயணத்தின் இலக்கு நிலைவாழ்வாகும்.
இன்றைய முதல் வாசகத்தில், யூதேயா மக்கள் பாபிலோனில் அவர்களது அடிமை வாழ்விலிருந்து தாய்நாட்டிற்குத் திரும்பும்போது ஏற்படும் மாற்றத்தைப் பற்றி ஏசாயா இறைவாக்கினர் தெளிவுப்படுத்துகிறார். அவ்வாறே, நமது நாய் நாடான விண்ணகத்திற்கு நாம் திரும்பியதும் நாம் மாறுபட்ட வாழ்வு வாழ்வோம் என்று அறிவுறுத்தப்படுகிறோம்.
இந்த பிற்கால மகிழ்ச்சியை அனுபவிக்க இம்மையில் கிறிஸ்துவின் வார்த்தைகளில் நம்பிக்கை தேவை. இன்றைய நற்செய்தியில் "அந்த அரச அலுவலர் இயேசு சொன்னதை நம்பி இல்லம் திருப்பினார். மகன் உயிருடன் இருக்கக் கண்டார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர் என்று யோவான் குறிப்பிடுகிறார்.
அந்த அதிகாரியின் நம்பிக்கை எவ்வளவு உறுதியானதாக இருந்தது என்பதைப் பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கிறது.
1. முதலாவதாக, இயேசுவால் தன் மகனுக்கு உதவ முடியும் என்று அவர் நம்பினார். எனவே அவர் இயேசுவை தன்னுடன் கப்பர்நாகூமுக்கு வரும்படி கேட்டார்.
2. இரண்டாவதாக, தனது மகன் பிழைப்பான் என்ற இயேசுவின் வார்த்தைகளை அவர் நம்பினார். அவர் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தனது வீட்டிற்குத் திரும்பினார்.
3. மூன்றாவதாக, உயிர் பிழைத்ததைக் கண்டு, அவர் இயேசுவை முழுமையாக நம்பினார், அவரது குடும்பத்தினரும் நம்பினார்.
இயேசு மீதான கொண்ட நம்பிக்கை படிப்படியாக அதிகரித்ததை இங்கே அறிகிறோம். இந்த அரச அதிகாரி கலிலேயாவின் ஆட்சியாளராக இருந்த ஏரோது அந்திப்பாவிடம் வேலை செய்திருக்கலாம். ஏரோது உரோமை அரசாங்கத்தின் சார்பாக ஆட்சி செய்தார். இந்த அரச அலுவலருக்கு மிக முக்கியமான பதவி இருந்திருக்கும். ஆனால் அந்த அரச அலுவலர் இயேசுவிடம், பணிந்து, “ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும்” என்கிறார். இயேசுவிடம் அவரது அதிகாரத்தைக் காட்டி மிரட்டியிருக்கலாம். மாறாக, அவரது பேச்சில் பணிவும், அடக்கமும் இருந்தது. இயேசுவின் உள்ளத்தில் இடம்பிடித்தார்.
இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் குறித்து சிந்திக்க வேண்டும். நமது பட்டம் பதவியால், அதிகாரத்தால் இயேசுவிடமிருந்து பெறக்கூடியது எதுவுமில்லை. ஏமாற்றம் மட்டுமே. நாம் இவ்வுலகில் பற்றிக்கொண்ட எதுவும் நம் ‘பாடையைப்’ பற்றிக்கொள்ளப் போவதில்லை.
இறைவேண்டல்.
ஆண்டவரான இயேசுவே. நீர் ஏற்படுத்தவுள்ள புதிய வானம் புதிய பூமிக்குரியவராக என்னை மாற்றுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
