வெறும் சட்டத்தால் வாழ்வு வந்துவிடாது! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
20 ஜனவரி 2026
பொதுக்காலம் 2-ஆம் வாரம் – செவ்வாய்
1 சாமுவேல் 16: 1-13
மாற்கு 2: 23-28
வெறும் சட்டத்தால் வாழ்வு வந்துவிடாது!
முதல் வாசகம்.
சாமுவேல் நூலின் இப்பகுதியில், சவுலுக்கு அடுத்து, இஸ்ரயேலுக்கு ஒரு புதிய அரசரை அருள்பொழிவுச் செய்ய கடவுள் சாமுவேலை அனுப்புகிறார். .
சவுலுக்காகத் துக்கப்படாமல், பெத்லகேமுக்குச் சென்று ஈசாயின் (தாவீதின் தந்தை) மகன்களில் ஒருவரைப் புதிய அரசராக் அருள்பொழிவுச் செய்யுமாறு சாமுவேலுக்குக் கடவுள் அறிவுறுத்துகிறார். சாமுவேல் சவுலுக்கு அஞ்சினாலும்,
கடவுளுக்குக் கீழ்ப்படிந்து ஈசாவையும் அவரது மகன்களையும் சந்திக்கிறார்.
முதலில், சாமுவேல் ஈசாயின் மூத்த மகன்களின் வெளி தோற்றத்தால் கவரப்படுகிறார். ஆனால், மனிதர் பார்ப்பது போல் கடவுள் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் என்றுணர்ந்து, இறுதியில் சாமுவேல் ஆடுகளை மேய்க்கும் இளைய மகன் தாவீதை அழைக்கிறார். இந்த இளைய மகன்தான் அரசராக் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்பதை கடவுள் சாமுவேலுக்கு வெளிப்படுத்துகிறார். பின்னர் சாமுவேல் தாவீதை எண்ணெயால் அருள்பொழிவு செய்கிறார், இந்த அருள்பொழிவு கடவுளின் ஆவி இப்போது அவருடன் இருப்பதைக் குறிக்கிறது.
நற்செய்தி.
இந்தப் பகுதியில், இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாளில் ஒரு வயல் வழியாக நடந்து செல்கிறார்கள். பசியால் வாடிய சீடர்கள், கதிர்களைப் பறித்து சாப்பிடுகிறார்கள். ஓய்வுநாள் சட்டத்தைக் கடுமையாகப் பின்பற்றுபவர்களான பரிசேயர்கள் இதைப் பார்த்து, இயேசுவிடம் கேள்வி கேட்டு, அவருடைய சீடர்கள் ஓய்வுநாளில் சட்டத்திற்குப் புறம்பானதைச் செய்கிறார்கள் என்று முறையிடுகிறார்கள்.
இதற்கு இயேசு, இரு அடிப்படை உண்மைகளைக் கொண்டு விளக்குவதை வாசிக்கிறோம்.
1. "ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது, மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை” திருச்சட்டமானது, மக்களைச் சுமைப்படுத்துவதற்காக அல்ல, மனித நல்வாழ்வைச் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்கிறார்.
2. இயேசு ஓய்வுநாளின் மீதான தனது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார். அவர் தாமே சட்டத்தை நிறைவேற்றுகிறார், அதன் உண்மையான அர்த்தத்தை வெளிச்சத்திற்குக் கொண்டுவருகிறார்.
இயேசு, தாவீது ஒருமுறை குருக்களுக்குரிய அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமட்டுமன்றி தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா, அதை எப்படி ஏற்றுக்கொண்டீர்கள் என்று பரிசேயரை இயேசு வினவுகிறார். தாவீது திருச்சட்டதை அன்று மீறியதை ஏற்றக்கொண்ட அவர்கள் இன்று சீடர்கள் ஓய்வுநாளில் பசிக்கு கதிர்களை உண்டதை எப்படி குற்றமாகப் பார்க்கலாம் என்று வினவுகிறார்.
சிந்தனைக்கு.
உணமையில், மனிதர் பார்ப்பது போல் கடவுள் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார் எனும் படிப்பினை இன்று வலியுறுத்துப்படுகிறது. ‘ உருவத்தை பார்ப்பவன் மனிதனடா அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகளை நாம் மறந்திருக்க மாட்டோம்.
நற்செய்தியில், "ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்று இயேசு தம்மை கூறுவதன் மூலம், சட்டத்தின் மீது அதிகாரம் இருப்பதாக அவர் கூறுகிறார். இதைப் புரிந்துக்கொள்ளும் நிலையில பரிசேயர் இல்லை. அன்றாட வாழ்க்கையில், சட்டத்திற்கு அஞ்சி நமது செயல்களைச் சரியாகச் செய்வதிலும் வழிபாட்டில் பங்கெடுப்பதிலும் தான் நாம் அதிக கவனம் செலுத்தகிறோம். நமக்கு அடுத்திருப்போரின் பசி பட்டினி மற்றும் துன்பங்கள் பற்றிய கவலை நமக்கு இருப்பல்லை.
‘கருணை பொங்கும் உள்ளம்
அது கடவுள் வாழும் இல்லம்
கருணை மறந்தே வாழ்கின்றார்
கடவுளைத்தேடி அலைகின்றார்’
என்ற கவிஞர் கண்ணதாசனின் மற்றொரு பாடல் நினைவுக்கு வருகிறது. உள்ளதில் இரக்கமற்றவர்கள்தான் கடவுளைத் தேடி அலைவர். இரக்கமுள்ளோரின் இதயத்தில் கடவுள் என்றும் குடியருப்பார்.
நம்மில் பலரும் வெளிப்புற அனுசரிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி கடவுளை வழிபட்டு வருகிறோம். நாம் கொண்டாடும் திருவிழாக்கள், மேற்கொள்ளும் திருப்பயணங்கள், ஏன் திருப்பலியிலும் வெளிவேடம் இருப்பின் அது பயனற்றது. ‘ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள் (மத் 6:33) என்கிறார் ஆண்டவர்.
இறைவேண்டல்.
ஆண்டவரே உமது திருவுளத்திற்கு இசைவாக வாழ நான் பாடுபடும்போது, என்னை அலட்சியத்திலிருந்தும், கவனக்குறைவிலிருந்தும் விடுவித்தருளும். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452