இயேசுவில் அச்சம் தவிர்ப்போம்! | ஆர்.கே. சாமி | Veritas Tamil
இன்றைய இறை உணவு
27 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 25ஆம் வாரம் – சனி
செக்கரியா 2: 1-5, 10-11a
லூக்கா 9: 43b-45
இயேசுவில் அச்சம் தவிர்ப்போம்!
முன்னுரை.
கடந்த சில தினங்களாக, ஆகாய் இறைவாக்கினரின் நூலிலிருந்து வாசித்தோம். இன்று செக்கரியா நூலில் வாசகம் எடுக்கப்படுள்ளது. ஆகாய் மற்றும் செக்கரியா இருவரும் சம காலத்தில் யூதேயாவில் (எருசலேம் பகுதியில்) இறைவாக்குரைத்தவர்கள். செக்கரியா குருவாகவும் இறைவாக்கினராகவும் பணியாற்றியவர். இந்நூலில்தான் முதன்முறையாக வானத்தூதர்கள் காட்சிகள் விவிலியத்தில் இடம்பெறத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் வாசகம்.
இவ்வாசகத்தில், எருசலேம் அளவிடப்பட்டு, கடவுள் தம்முடைய மக்களிடையே வசிப்பதாகவும், அவர்களை "அக்கினி மதிலால்" பாதுகாப்பதாகவும் வாக்குறுதி அளிக்கும் ஒரு காட்சியைச் செக்கரியா கண்டார். இது செக்ரியா கண்ட காட்சிகளில் முதலாவது காட்சியாகும்.
இக்காட்சியில், எருசலேமுக்கு ஆண்டவர், ‘தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களான யூதர்கள் மத்தியல் மட்டுமல்ல’ பிற இனத்தவரையும் நாட்டவரையும் ஈர்க்கவும் ஆண்டவர் (மெசியா) எருசலேமுக்கு வரவிருப்பதைப் பற்றி செக்கரியா முன்னறிவிக்கிறார். இக்காலக்கட்டதில்தான் யூதர்கள், பாபிலோனிலிருந்து விடுதலைப் பெற்று திரும்பி வந்து ஆலயத்தைக் கட்டியெழுப்பும் பணியைத் தொடங்கினர்.
ஏறக்குறைய ஒரு மாதம் கழித்து, அவர்கள் ஆலயத்தை மீண்டும் கட்டுவதில் நம்பிக்கை இழந்தனர். செக்கரியா அவர்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டினர். தங்கள் நகரமும் ஆலயமும் அழிந்து போனதைக் காண்பவர்களுக்கு மகிழ்ச்சியின் காலம் மீண்டும் மலரும் என்று திடப்படுத்துகிறார்.
மேலும், அக்காலத்தில் ஆண்டவரே, எருசலேமுக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பார் என்றும், இதனிமித்தம், ஆண்டவர், ‘மகளே, சீயோன்! அகமகிழ்ந்து ஆர்ப்பரி; இதோ நான் வருகிறேன்; வந்து உன் நடுவில் குடிகொள்வேன்’ என்றும் கடவுளின் செய்தியை முன்வைத்து, ஆலயக் கட்டுமானப் பணியில் ஊக்குவிக்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், ‘அனைவரும் வியப்படைந்தனர்’ என்பது இயேசு செய்வதைப் பார்த்து வியந்து கொண்டிருக்கும் சீடர்களைக் குறித்த சொற்றொடராக உள்ளது. இயேசு அவரைப் பற்றிய துன்பத்தை, பாடுகளை முன்வைக்கிறார். "மானிடமகன்" மக்கள் கையில் ஒப்படைக்கப்படவுள்ளார் என்று கூறுகிறார்.
இருப்பினும், அவர் என்ன சொல்கிறார் என்பதை சீடர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை; இயேசு சுட்டிக்காட்டும் செய்தியின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் இயேசுவின் அறிவிப்புக் குறித்து விளக்கம் கேட்கவும் தயங்கினார்கள் என்று லூக்கா கூறுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய வாசகங்களைக் கூர்ந்து கவனித்தால், கடவுள் தம் மக்களிடையே வசிப்பதும் (முதல் வாசகம்), அவர்களை ‘ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் ஆண்டவர் காத்திடுவார்’ எனும் பதிலுரைப் பாடலும் இறைமக்களுக்கான கடவுளின் நம்பிக்கை, உடனிருப்பு மற்றும் தெய்வீக பராமரிப்பினை உறுதிப்படுத்துகின்றன.
இறைமக்களுக்குக் கடவுளின் நம்பிக்கை, உடனிருப்பு இருப்பினும், நற்செய்தி ஒரு ஆழ்ந்த உண்மையைப் பதிய வைக்கிறது. ஆம், நமது மீட்புக்கான பாதையில் துன்பமும் துயரமும், மகிழ்ச்சியும் கலந்திருக்கும் என்று நினைவூட்டுகிறது.
இயேசுவின் நெருங்கிய சீடர்கள் கூட அவரைப் புரிந்து கொள்ளவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து அவர்களுக்குக் கற்பித்து வந்தார். அவர் அவர்களின அறியாமைக் கண்டு பின்வாங்கவில்லை. அவர்களுக்குத் தலைமைதாங்கி வழிநடத்தினார். ஏனெனில், அவர் தம் சீடர்களாக அழைத்தது படித்த மேதைகளை அல்ல.
நாம் துன்பம், குழப்பம் அல்லது பதில் தெரியாதக் கேள்விகளை எதிர்கொள்ளும்போது, சீடர்களின் அனுபவத்தை நினைவில் கொள்ள வேண்டும். ‘அறியாமை’ என்பது ஒரு பெரும் குறை அல்ல. இயேசுவின் படிப்பினைகள் முழுமையாகப் புரியாத நிலையிலும் சீடர்கள் அவரோடு தொடந்து பயணித்தனர். சமயம் பார்த்து இயேசுவும் அவ்வப்போது சிலவற்றை விளக்கிக் கூறினர்.
கற்றது கைம்மண் அளவு என்பார்கள். சில வினாக்களளுக்கும் குழப்பங்களுக்கும் விடை வேண்டுமானால், நாம் மனத்தாழ்மையுடன், "ஆண்டவரே, எனக்குப் புரிய உதவும்" என்று கேட்கலாம். காலவோட்டத்தில், நிச்சயமாகத் தெளிவு கிடைக்கும்.
நாம் அவருடைய வழிகளை முழுமையாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும் கூட, கடவுள் நம்முடன் இருக்கவும், செக்கரியா குறுப்பிட்டத்தைப்போல "அக்கினிச் சுவராக" நம்மை அவர் பாதுகாக்கவும் விரும்புகிறார் என்பதை நம்ப வேண்டும்.
சீடர்கள் ஆண்டவரிடம் ஆன்மீக ரீதியிலும், நேர்முக வாழ்விலும் ஆழமாகப் பற்றுக் கொண்டிருந்தனர். ஆனாலும் ஆண்டவரைப் புரிந்துகொள்ள இயலவில்லை. மாறாக, நாம் அன்னை மரியாவைக் கவனிக்க வேண்டும். இயேசு தன்னைக் கையளிக்க வேண்டும், துன்பப்பட வேண்டும், இறக்க வேண்டும் என்று சொன்னதற்கு அவர் தயக்கம் காட்டவில்லை. மாறாக, அவற்றையெல்லாம் மனதில் நிறுத்தி சிந்தித்து வந்தார்.
முதல் வாசகத்தில் செக்கரியா வெளிப்படுத்தியதுபோல ஆண்டவர் அவரது ஆலயமாகிய நம்மில் வாழ விரும்புகிறார். அவரில் நமக்குப்பாதுகாப்பு உண்டு. கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல அவர் நம்மை அரவணைத்துக்கொள்வார் என்பதை எதிர்நோக்கி இருப்போம். எதிர்நோக்கு எமாற்றம் தராது (உரோ 5:5).
இறைவேண்டல்.
அன்புள்ள ஆண்டவரே, ஒவ்வொரு ஆன்மீக உண்மையையும் தெளிவாக ஏற்றுக்கொள்ளவும், அந்த உண்மை என்னை அனைத்து அச்சத்திலிருந்து விடுவித்து, புரிதலின் கொடையால் என்னை நிரப்பவும் எனக்குத் தேவையான அருளை அருள்வீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் விவிலியக் கல்வி மையம்
+6 0122285452