ஏழைகள் பேறுபெற்றோர், அவர்களுடையது இறையாட்சி! | ஆர்கே. சாமி | Veritas Tamil

10 செப்டம்பர் 2025
பொதுக்காலம் 23ஆம் வாரம் – புதன்
கொலோசையர் 2: 6-15
லூக்கா 6: 12-19
ஏழைகள் பேறுபெற்றோர், அவர்களுடையது இறையாட்சி!
முதல் வாசகம்.
கொலோசையருக்கு எழுதும் போது, புனித பவுல், திருமுழுக்கின் மேன்மையைக் குறிப்பிடுகிறார் திருமுழுக்கு சடங்கில் நீரிலிருந்து அவர்கள் வெளியே வரும்போது, உயிர்த்தெழுந்த ஆண்டவரின் வாழ்க்கையில் அவர்கள் பங்கெடுப்பதைக் குறிக்கும் புதிய, வெள்ளை ஆடையை அவர்கள் அணிவதையொட்டி விளக்கமளிக்கிறார்.
பவுல் பழைய, அழுக்கடைந்த ஆடைகளைக் களைவதானது, அவர்கள் விட்டுச் சென்றிருக்க வேண்டிய தீய வாழ்வின் அடையாளம் என்றும், அவர்கள் மீண்டும் அந்த பழைய வாழ்வுக்குத் திரும்பக்கூடாது என்றம். திருமுழுக்கின்போது அவர்கள் பெற்ற புது வாழ்வை எப்போதும் உணர வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.
புதிய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கக் கூடாத பூமிக்குரிய தீமைகளை சுட்டிக்காட்டுகிறார்: பரத்தைமை, ஒழுக்கக் கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவை பழைய உலக வாழ்க்கையின் பண்புகள். அவர்கள் இப்போது கிறிஸ்துவில் வெண்ணற ஆடை அணிந்திருக்கிறார்கள், இயேசுவுடன் ஒன்றித்த அனைவருடனும் ஒன்றித்திருக்கிறார்கள் என்று எடுத்துரைக்கிறார்.
நற்செய்தி.
மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் உள்ள ‘பேறுபெற்றோர்’ போல,, ஆனால் சற்று வேறுபாடுகளுடன், இயேசு தொடர்ச்சியான ஆசீர்வாதங்களையும் எச்சரிக்கைகளையும் வழங்குகிறார்.
சுருக்கமாக:
ஏழைகள் பேறுபெற்றோர், ஏனென்றால் அவர்களுடையது இறையாட்சி.
இப்போது பசியுள்ளவர்கள் பேறுபெற்றோர் , ஏனென்றால் அவர்கள் நிறைவு பெறுவார்கள்.
இப்போது அழுகிறவர்கள் பேறுபெற்றோர், ஏனென்றால் அவர்கள் சிரித்து மகிழ்வார்கள் என்றுரைத்தார்..
தொடர்ந்து, மானிடமகன் பொருட்டு வெறுக்கப்படுகிறவர்கள், ஒதுக்கப்படுகிறவர்கள், அவமதிக்கப்படுகிறவர்கள், அவதூறாகப் பேசப்படுபவர்களும் பேறுபெற்றோர் ஏனெனில் விண்ணுலகில் அவர்களுக்கான கைம்மாறு மிகுதியாகும் என்று வாக்குறுதியளிக்கிறார்.
தொடர்ந்தாற்போல், இயேசு உலக எதிர்பார்ப்புகளை தலைகீழாக மாற்றுகிறார். பணக்காரர்களாக, திருப்தியாக அல்லது பிரபலமாக இருப்பவர்கள் தங்கள் இதயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று இயேசு எச்சரிக்கிறார். அவர்களுக்கு ‘ஐயோ! உங்களுக்குக் கேடு!’ என்று போதிக்கிறார்.
சிந்தனைக்கு.
தம்மைச் சார்ந்து இருப்பவர்களைக் கண்டு கடவுள் மகிழ்வுறுவதோடு, எதிர்கால மகிழ்ச்சியையும், அவர்களை இறையரசுக்குச் சொந்தமாக்கும் வாக்குறுதியையும் இன்று இயேசு உறுதிப்படுத்துவதை அறிகிறோம். மண்ணுலகில் அனுபவிக்கும் வசதிகள், இன்பங்கள் இறப்பிற்குப் பின் கூட வருவதில்லை. கடவுள் மனித விழுமியங்களை தலைகீழாக மாற்றுகிறார்.
இது மண்ணக செல்வச் செழிப்புமிகு வெற்றியால் அல்ல, மாறாக கடவுளின் ஆட்சியில் கொண்ட நம்பிக்கை மற்றும் நீதியால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ இயேசு அழைப்புவிடுக்கிறார். ஏனெனில், இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும், அதாவது உலக நாட்டத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது (உரோ 14:17).
வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம் (உரோ 14:8), என்று வாழ்வோரே பேறபெற்றோர்.
உலகம் மதிக்கும், போற்றும் செல்வம், வசதி, புகழ் ஆகியவை மனிதர்கள்க் கடவுளிடமிருந்து தனிமைப்படுத்தக்கூடும், அதே நேரத்தில் துன்பமும் பணிவும் இதயத்தை உண்மையான ஆசீர்வாதத்திற்குத் திறக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டால், விண்ணுலகில் நமக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் என்பதை மறுக்க இயலாது. நற்செய்தி உலகப் புரட்சியால் அல்ல, கிறிஸ்துவின் இரக்கத்தால் நமக்கு விடுதலையை வழங்குகிறது.
ஆன்மீக ரீதியாகப் பார்த்தால், ஒருவர் செல்வச் செருக்கோடு இருக்கும்போது கடவளில் இணைந்திருப்பதைவிட, ஏழையாக இருக்கும்போதுதான் கடவுளோடான இணைப்பும் பிணைப்பும் எளிதாகிறது.
‘ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்
அவன் அன்பு மனங்களில் சிரிக்கின்றான்
சத்தியத்தின் எல்லையிலே
உயர் சமரச நெறிகளிலே
அன்பின் சக்தியிலே தேச பக்தியிலே
உண்மை சமத்துவம் காட்டும் சன்மார்கத்திலே
ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்’ என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.
முதல் வாசகத்தில் பவுல் அடிகள் கோடிட்டுக்காட்டிய, புதிய வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கக் கூடாத பூமிக்குரிய தீமைகளை விட்டு விலகி, ஆண்டவராகிய இயேசு எடுத்துரைத்தப் பெறுபெற்றோருக்கான அறிவுரைகளை மனதில் கொண்டு வாழ முற்படுதல் அறிவுடமை.
இறைவேண்டல்.
ஆண்டவரே, இந்த உலகத்தின் ஏமாற்று வேலைகளுக்கு நான் அடிமையாகாமல், உம்முடன் உண்மையான தூய வாழ்க்கையை வாழ்ந்து, இறையரசின் பேறுகளைப் பெற்றிட அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
