அவரில் நிலைத்திருந்தால் அவரால் வாழ்வடைவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

21 மே 2025                                                                                                                  
பாஸ்கா 5-ம் வாரம் – புதன்
தி.பணிகள்  15: 1-6
யோவான்  15: 1-8
 
 
அவரில் நிலைத்திருந்தால் அவரால் வாழ்வடைவோம்!
  
முதல் வாசகம்.

 திருத்தூதர் பணிகள் நூலில் உள்ளபடி,  அக்காலத்தில், எருசலேம் பகுதியில் இருந்து வந்த யூதக் கிறிஸ்வர்கள் அந்தியோக்கியாவில், கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும், மோசேயின் முறைமைப்படி புறவினத்தாரும் விருத்தசேதனம் செய்தாக வேண்டும் வாதிட்டு வந்தனர்.   பவுல் அடிகளுக்கும் பர்னபாவுக்கும் விருத்தசேதனம் செய்வதில் உடன்பாடில்லை. திருமுழுக்கே போதுமானது என்றார்கள. 

எனவே,  அந்தியோகியாவின் கிறிஸ்தவச் சமூகம் பவுலையும் பர்னபாவையும் மற்றவர்களையும் எருசலேமில் உள்ள திருத்தூதர்களிடம் கலந்தாலோசிக்க அனுப்பினர்.  பவுலும் பர்னபாவும் எருசலேம்  அடைந்தபோது  அங்கிருந்த இதர கிறிஸ்தவர்களும்  திருத்தூதர்களும், மூப்பர்களும் அவர்களை வரவேற்றார்கள். அப்போது கடவுள் தங்கள் வழியாக புறவினத்தார் மத்தியில்  செய்த அனைத்தையும் அவர்கள் அறிவித்தார்கள். நிறைவாக,  யூதரல்லாத புறவினத்தார் விருத்தசேதனம் செய்வது பற்றி  ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.

நற்செய்தி.

நற்செய்தியில் இயேசு தன்னுடைய சீடர்களிடம், அவர்களுக்கு நன்கு அறிமுகமான திராட்சைச் செடி, கிளைகள் ஆகியவற்றை உருவங்களாகக் கொண்டு, அவருக்கும் தம் சீடர்களுக்கும் இடையே உள்ள  உறவு எப்படி இருக்கவேண்டும் என்று விவரிக்கின்றார். 

கிளைகள் தானாகக் கனி தர இயலாது. இயேசுவை விட்டுப் பிரிந்து நாம் எதுவும் செய்ய இயலாது. நமது ஆற்றல்கள், திறமைகள், கொடைகள் ... அனைத்தும் அவரிடமிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம்.  

இயேசுவோடு இணைந்திருப்பவர் மிகுந்த கனி தருவார். நமது ஆற்றல்கள், திறமைகள் நல்ல பலன் தரவேண்டுமென்றால், இயேசுவோடு இணைந்து நாம் செயல்படவேண்டும். ‘என்னிடமுள்ள கனி கொடாத கிளைகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கிளைகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்துவிடுவார்’ என்றும், நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட்சைக் கொடி; நீங்கள் அதன் கிளைகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார் என்றும் அறிவுறுத்துகிறார்.

சிந்தனைக்கு.

புனித யோவான் நற்செய்தியின் பதினைந்தாம் அதிகாரத்தில், கிளைகளுக்கு உயிர் கொடுக்கும் உண்மையான திராட்சைக் கொடியாக இயேசு இருப்பதைப் பற்றிப் பேசுகிறார். இயேசு கூறும் இந்தத் திராட்சைச்செடி உவமை யோவான் நற்செய்தியில் மட்டுமே எடுத்துக்காட்டப்படுகிறது. திராட்சைக் கொடி என்ற இந்த உவமையில் இயேசு நாம் அவரோடு கொண்டிருக்க வேண்டிய ஒன்றிப்பை வலியுறுத்துகிறார். மற்றும் இணைந்திருத்தல், நிலைத்தருத்தல் ஆகியவையும் இவ்வாசகத்தில் முக்கிய அறிவுறுத்தலாக உள்ளன. 

கொடி செடியிலிருந்து துண்டிக்கப்பட்டாலோ, வெட்டப்பட்டாலோ உயிர் வாழ முடியாது. திராட்சைக் கொடியைப் போலவே,  என்னைத் தின்பவனும்  என்னால் வாழ்வான் (6:57) என்கிறார் இயேசு. செடி (இயேசு) கொடி (நாம்) இந்த இரு தரப்புக்கும் இடையே நிலவும் உறவு இணைபிரியா அன்பின் உறவு ஆகும். 

வழக்கம1க, தோட்டக்காரர்கள் இந்தக் காய்க்காத அதாவது, பலன்தராத கொடிகளைத் தரித்துவிட்டுக்கொண்டே இருப்பர். அதுமட்டுமன்றி, இவைகளை வளரவிட்டோமென்றால், மொத்த திராட்சைச் செடியும் காய்க்காமல்போய்விடும். ஆதலால், சீடத்துவத்தில் நாம் பலன் தர வேண்டும் என்ற படிப்பினை இங்கே மேலோங்கி நிற்கறது. தாயோடு இணைந்திருக்கும் பிள்ளைதான் நிறைந்த வளர்ச்சிக் காண முடியும் எனபது போல, இயேசுவுடன் இணைந்திருந்தால்தான் நாம் கனிதரமுடியும் என்பதை நினைவில் கொள்வோம்.

யேசுவுடன் இணைந்த நிலையில் கனிதர வேண்டுமெனில் நாம் இயேசுவின் கட்டளைகளைக் கடைபிடிக்க வேண்டும். "நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்" என்கின்றார் இயேசு. ஆகவே, இயேசுவின் கட்டளைகளைக் கருத்துடன் கடைபிடித்து அவருடன் இணைந்த நிலையில் மிகுந்த கனிதரும் செயல்பாடுள்ள சீடர்களாக வாழ்வோம்.
நிறைவாக, முதல் வாசகத்தின் இறுதியில், யூதரல்லாத புறவினத்தார் விருத்தசேதனம் செய்வது பற்றி  ஆய்ந்து பார்க்கத் திருத்தூதரும் மூப்பரும் ஒன்று கூடினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார். ஆம், நமது கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் இன்றளவும் இதே மரபுமுறை கையாளப்படுவதை நினைவில் கொள்வோம்.


இறைவேண்டல்.

என் அன்பில் நிலைத்திருங்கள் என்றருளிய ஆண்டவரே, உம்மில் எந்நாளும், எச்சூழலிலும் பற்றுறுதிக்கொண்டு நிலைத்திருக்க என்னை காத்தருள்வீராக ஆமென்.

ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452