அன்பின் தூதனாய் நம்மை மாற்றுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

19 மே 2025
பாஸ்கா 5-ம் வாரம் – திங்கள்
தி.பணிகள் 14: 5-18
யோவான் 14: 21-26
அன்பின் தூதனாய் நம்மை மாற்றுவோம்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகளும் பர்னபாவும் ஆசியா மைனர் வழியாகப் பயணம் செய்யும்போது அனைத்து வகையான எதிர்ப்புகளையும் எதிர்கொள்கிறார்கள். பவுல் லிக்கவோனியாவிலுள்ள லிஸ்திராவில் போதிக்கத் தொடங்குகின்றார். அவருடைய போதனையைப் பிறவியிலேயே கால் ஊனமுற்ற ஒருவர் கேட்டுக்கொண்டிருப்பதைப் பார்த்த பவுல், அவரிடம் நலம் பெறுவதற்கான ஏக்கமும் நம்பிக்கையும் இருப்பதை உணர்கிறார். அவரை உற்று நோக்கி, “நீர் எழுந்து நேராக நில்லும்” என்கின்றார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க அந்த மனிதர் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்குகின்றார். இதைப் பார்த்துவிட்டு மக்கள், “தெய்வங்கள் மனித உருவில் நம்மிடம் இறங்கி வந்திருக்கின்றன” என்று கூச்சலிட்டார்கள் என்று லூக்கா விவரிக்கிறார்.
நற்செய்தி.
இன்றைய நற்செய்தியிலும் இராவுணவின் போது இயேசு ஆற்றிய உரை தொடரகிறது. சீடர்கள் உண்மையிலேயே தம்மைப் பின்பற்றுபவர்களாக இருக்க விரும்பினால், அவர் சொன்ன அனைத்தையும், குறிப்பாக ஒருவருக்கு ஒருவர் அன்பு சேவை செய்யும் கட்டளையை அவர்கள் மனதில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். மேலும், இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, அவர்மீது அன்புகூர்வோர்மீது கடவுளும் அன்புகூர்வார். இதுதான் ஒருவர் இயேசுவின் கட்டளையைக் கடைப்பிடித்து, அன்புகூர்வதால் பெறுகின்ற கைம்மாறு என்கிறார்.
நிறைவாக, இயேசுவின் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியானவர் சீடர்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார் என்ற உறுதிமொயை அளிக்கிறார்.
சிந்தனைக்கு.
அன்பு என்பது மக்களின் முதன்மைத் தேவையாக உள்ள வேளையில், அதுதான் உலகில் மனுக்குலத்தில் மிகப்பெரிய பற்றாக்குறையாக உள்ளது என்றால் மிகையாகாது. அள்ளி அள்ளி கொடுத்தாலும் குறையாதது அன்பு. ஆனாலும் அத்தகைய அன்புக்கும் உலகில் பற்றாக்குரை உண்டு என்றால், அன்பு முழுமையாகப் பகிரப்படவில்லை என்றே பொருள்.
கடவுள் அன்பாயிருக்கிறார் என்றும், அன்பின் நிமித்தமே இயேசு தம்மை சிலுவை சாவுக்குப் பலியாக்கினார் என்றும் கூறுவதில் நமக்குப் பெருமை இல்லை. இயேசு அறிவித்த செய்தியான ‘நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்” (யோவான் 13:35) எனும் அவரது கனவை நினைவாக்குவதில்தான் நமது பெருமை அடங்கியுள்ளது.
முதல் வாசகத்தில், பர்னபாவும் பவுலும் தங்களுக்கென பெருமையைத் தேடிக் கொள்ளவில்லை. மாறாக, அவர்கள் இருவரும் கடவுளுக்கே மாட்சி உரித்தாகுக என்று அதன்படி செயல்பட்டார்கள் என்று லூக்கா குறிப்பிட்டதை அறிந்தோம். உண்மை அன்பு ஒருபோதும் தன்னலம் நாடாது. எனவேதன், அள்ளிக் கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு என்றார் கவிஞார் கண்ணதாசன்.
உண்மையில் நன்கு சிந்தித்துப் பார்த்தால், ‘அன்பு’ என்று சொல்வது அன்பு அல்ல. அன்பு செய்வதில்தான் அன்பின் வெளிப்பாடு உள்ளது. நாமோ, நாமாக இருப்பதில் திருப்தி கொள்கிறோம். ஆண்டவரோ அவரது அளவற்ற அன்பை வெளிப்படுத்தும் சீடத்துவத்தில் சிறந்தவராக நாம் இருப்பதில் மகிழ்வுறுகிறார்.
மேலும், செயல் இல்லாத அன்பு அர்த்தமற்றது என்பது போல், அன்பு இல்லாத செயலும் பொருத்தமற்றதுதான். தன்னை போல்தான் மற்றவரும் என்ற எண்ணத்தின் தொடக்கமே அன்பிற்கான அடிப்படை தத்துவமாகும். அன்பில்லாமல் செய்கின்ற எந்த ஒரு செயலும் பொருத்தமற்றதாகவும் அர்த்த மற்றதாகவும்தான் இருக்கும்.
உண்மையில் அன்பான உலகத்தை உருவாக்க வேண்டிய சிற்பிகள் நாம். இது நம்மில் தொடங்கி, நம் குடும்பத்திலும் பின்ன்ர் சமூகத்திலும் படரட்டும். வாழ்வின் உண்மையான பொருள் அன்பு செலுத்துவதிலும் அன்பு செலுத்தப்படுவதிலும்தான் உள்ளது.
இறைவேண்டல்.
ஆண்டவரே, என்னை மற்றவர்களுக்கு நற்செய்தியின் தூதராக மாற்றியதற்காக நான் உமக்கு நன்றி கூறுகினேன். ஆமென்,
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
