தாழ்ந்து போவோர் வீழந்து போவதில்லை! | ஆர்.கே. சாமி | VeritasTamil

15 மே 2025
பாஸ்கா4-ம் வாரம் – வியாழன்
தி.பணிகள் 13: 13-25
யோவான் 13: 16-20
தாழ்ந்து போவோர் வீழந்து போவதில்லை!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், பவுல் அடிகள் தனது மறைப்பணி பயணத்தில் இருக்கிறார். இப்போது அந்தியோக்கியாவில் உள்ளார். அவர் யூதர்கள் மற்றும் கடவுளுக்கு அஞ்சிய யூதரல்லாதவர்கள் ஆகியோருடன் தொழுகைக்கூடத்தில் உரையாற்றுகிறார். விடுதலைப்பயணம் தொடங்கி , கானா நாடு கைப்பற்றப்படுதல், அங்கு குடியேறுதல், முதல் அரசர் சவுல் தொடங்கி இரண்டாம் அரசர் தாவீது வரையிலான கடவுளின் மகத்தான செயல்களை நினைவூட்டி, தாவீதின் வழிமரபில் இயேசு மெசியாவா வந்ததை எடுத்துரைக்கிறார் பவுல் அடிகள்.
நற்செய்தி.
இயேசு இறப்பதற்கு முந்தைய இரவில், அவர் தம் சீடர்களுக்கு, தாம் சேவை செய்யும் பணியாளராக வந்திருப்பதை நினைவூட்டுகிறார். இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களின் பாதங்களைக் கழுவியது போல, அவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்ய விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களுக்கும் தமக்கும் இடையே ஒரு இணைப்பை உருவாக்குகிறார், இது இயேசுவுக்கும் தந்தை கடவுளுக்கும் உள்ள உறவை ஒத்திருக்கிறது.
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், தாவீது கடவுளின் அழைப்புக்கு ஏற்ப அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்தார் என்றும் ஆனால், அவரது வழிமரபில் வந்தவர்களோ அவ்வாறு கீழ்ப்படிந்து வாழவில்லை என்றும் வாசிக்கக் கேட்டோம். ஆனாலும், கடவுள் மனமிரங்கி தாவீதின் வழிமரபில் மெசியாவைத் தோன்றச் செய்து, அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். நம் கடவுல் வாக்குறுதி மாறாதவர். எனவேதான், “ஆண்டவரின் பேரன்பைப் பற்றி நான் என்றும் பாடுவேன்” என்று பதிலுரைத்தோம்.
இன்றைய முதல் வாசகத்தில் வாழ்வது நானல்ல, கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார் என்று தாழ்ச்சியோடு பவுல், யூதர்கள் நடுவில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிப் பறைசாற்றுகின்றார். 'நாங்கதான் நற்செய்தி அறிவிப்பாளர்கள். எங்களுக்கு எல்லாம் தெரியும். நாங்க கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட திருத்தூதர்கள்' என்று சொல்லிக்கொண்டு தங்களைப் பற்றி பவுல் தப்பட்டம் அடிக்கவில்லை.
இயேசுவின் சீடர்களாக உலகில் நடமாடும் நாம் பவுலைப் போன்று தாழ்ச்சியில் சிறந்து விளங்கவேண்டுமே ஒழிய, நம்மை பிறரைவிட உயர்ந்தவர் போல் காட்டிக் கொள்ளக் கூடாது என்பது இன்றைய நற்செய்தியின் முதன்மை செய்தியாகவும் உள்ளது. தாழ்ச்சியும் சேவையுமின்றி சீடத்துவம் இல்லை.
சுருங்கச் சொன்னால், சேவை என்பது கடவுளின் திருவுளப்படி வாழ்வதாகும். நாம் கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து எக்காரியத்தையும் செய்தால், மனித வெகுமதியையோ அல்லது அங்கீகாரத்தையோ நாம் பொருட்படுத்த மாட்டோம். சுயநல சேவை என்பது கிடைக்கக்கூடிய அல்லது எதிர்ப்பார்க்கும் ஆதாயங்களைப் பற்றியது. மாறாக, கிறிஸ்துவை மையமாகக் கொண்ட சேவை சிறியது மற்றும் பெரியது என்று வேறுபடுத்திப் பார்ப்பதில் அடங்காது. இங்கே கைமாறுக்கும் இடமில்லை.
தொழுகைக்கூடத் தலைவன், 'சகோதரரே, உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்!' எனக் கேட்டபோது, பவுல் அடிகள் உடனடியாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறார். நாம் கடவுள் அருளும் எத்தனையோ வாய்ப்புக்களை அச்சத்தின காரணமாக நழுவவிடுகிறோம். காலமும் கடலலையும் யாருக்கும் காத்திருப்பதில்லை. காற்றுள்ளபோதே தூற்றுக்கொள் என்பதற்கேற்ப வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் இயேசுவையும் அவரது நற்செய்தியையும் சொல்லாலோ செயலாலோ பகிர வேண்டும்.
நாம் திருத்தூதர்கள் மீது கட்டப்பட்ட திருஅவையினர். எனவே, நம் வாழ்க்கை முறையில் அனுப்பப்பட்ட திருத்தூதர்களாக ஒளிர வேண்டும். நாமும் உலகில் அனுப்பப்பட்ட திருத்தூதர்கள் எனும் உணர்வு நம்மில் ஊற்றெடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டு இவ்வாரம் நற்கருணைக் கொண்டாட்டத்திற்குச் செல்வோம்.
இறைவேண்டல்.
மனுவுரு எடுத்த ஆண்டவரே, உமது அன்பை அறிவிக்கும் செயல்பாட்டில் உமது சக பணியாளராக இருக்க என்னை அழைத்ததற்கு நன்றி கூறுகிறேன். ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
