நல்லாயன் இயேசு நம்மோடு இருந்தால் அதுவே நமக்கு ‘விண்ணகம் | ஆர்.கே. சாமி | VeritasTamil

13 மே 2025
பாஸ்கா4-ம் வாரம் – செவ்வாய்
தி.பணிகள் 11: 19-26
யோவான் 10: 22-30
நல்லாயன் இயேசு நம்மோடு இருந்தால் அதுவே நமக்கு ‘விண்ணகம்’.
முதல் வாசகம்.
நமது முதல் வாசகத்தில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதைப் பற்றி நாம் அறிகிறோம். ஸ்தேவான் கல்லெறிந்து கொல்லப்பட்டதை கண்டு, பல நம்பிக்கையாளர்கள் (கிறிஸ்தவர்கள்) எருசலேமைவிட்டு அக்கம் பக்கம் உள்ள பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா போன்ற ஊர்களுக்குச் சிதறிப்போயினர் என்று லூக்கா குறிப்பிடுகிறார்.
இதுவும் கடவுளின் ஏற்பாடாக இருந்தது எனலாம். ஏனெனில், அப்பகுதியில் உள்ள புறவினத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்க வாய்ப்பாக அமைந்தது. தீமையிலும் ஒரு நன்மை என்பதுபோல, பல புறவிஇனத்தார் இயேசுவில் நம்பிக்கைகொள்ளத் தொடங்கினர். மேலும் பர்னபாவைப் போன்ற திருஅவையின் ஆரம்பகாலத் தலைவர்கள், யூதரல்லாதவர்களின் வாழ்க்கையில் கடவுள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை உணரத் தொடங்கினர். பர்னபா, பின்பு மனமாற்றம் கொண்ட சவுலைத் தேடி அவரது ஊராகிய தர்சுக்குச் சென்று, அவரை அந்தியோக்கியாவுக்கு அழைத்து வந்தார் என்றும், அந்தியோக்கியாவில்தான் முதல் முறையாகச் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்னும் அழைக்கப்பட்டார்கள் என்றும் லூக்கா பதிவு செய்துள்ளார்.
நற்செய்தி.
யோவான் நற்செய்தியின் பத்தாவது அதிகாரத்தில் நேற்று இடம்பெற்ற கருப்பொருளான நல்ல ஆயன் என்ற தலைப்பை இயேசு இன்றும் மறையுரையைத் தொடர்கிறார். எருசலேம் ஆலயத்தில் உள்ள சாலமோன் மண்டபத்தில் அவர் இருந்தபோது, இயேசுதான் எதிர்பார்க்கப்பட்ட மெசியா என்பதில் மர்மம் வேண்டாம் என்றும், அதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றும் மக்களில் சிலர் அவரை வற்புறுத்தவே, என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன என்று பதில் கூறினார்.
மேலும், என் ஆடுகளான சீடர்கள் அவரது குரலுக்குச் செவிசாய்ப்பதாகவும், செவிசாய்க்கும் அவர்களுக்கு நிலைவாழ்வை அளிப்பதாகும், அவை என்றுமே அழிவுறா என்றும் உறுதியளிக்கிறார்.
சிந்தனைக்கு.
‘நல்லாயன்’ என்பது விவிலியத்தில் காணப்படும் மிகச் சிறந்த ஒருவகம் என்றால் மிகையாகாது. அக்காலத்தில் ஓர் ஆட்டு மந்தைக்கு ஒரு மேய்ப்பன் நியமிக்கப்படுவது வழக்கம். இரவெல்லாம் காவல் காத்தப்பின், ஒவ்வொரு காலையிலும் மேய்ப்பன் தனது மந்தையை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல மீண்டும் அழைப்பான். தங்கள் மேய்ப்பனின் பழக்கமான குரலைக் கேட்டவுடன், மந்தை அவனை மட்டுமே பின்தொடரும். பழக்கமில்லாத குரலைப் பின்தொடரமாட்டா.... அதனால்தான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மக்களை, அவர் தேடி வந்த தன் மந்தையாக, "என் ஆடுகள் என் குரலைக் கேட்கின்றன; நான் அவற்றை அறிவேன், அவை என்னைப் பின்தொடர்கின்றன" என்று விவரிக்கிறார்.
அவருடைய அழைப்பு உலக மக்கள் மத்தியில் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது. கடந்த ஞாயிறன்று ‘நல்லாயன் ஞாயிறை’ நினைவுகூர்ந்தோம். இயேசுவின் வடிவில் பல ஆயிரக்கணக்கான ஆயர்கள் திருஅவையில் உள்ளனர். இவர்கள் வாயிலாக அவரது அழைப்புக்குரல் ஒலித்துக்கொண்டுதான் உள்ளது. அவரது இரண்டாம் வருகைவரை அது ஓயாது.
ஆனால், இன்றைய நவீன காலத்தில் அவருடைய ஆடுகளாகிய நாம் அவருடைய குரலைக் கேட்டு அவரைப் பின்பற்றுகிறோம் என்பதை எப்படி அறிந்து கொள்வது? குறிப்பாக இன்று நம்மை திசைத்திருப்பும் பல குரல்களால் கவரப்படுகிறோம். இன்றைய விவேக கைத்தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி பெட்டிகள். சினிமாக்கள் போன்ற பலவித குரல்களுக்கு நாம் அடிமைப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறோம். பாவம் என்ற கல்லறைக்குப்பல வழி, என்றும் தர்ம தேவன் கொவிலுக்கு ஒரு வழி என்பது நாம் அறிந்த ஒன்று. அதுவே, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே’ (யோவான் 14:6) என்ற நமது நல்லாயனின் குரல்.
நாம் நல்லாயரின் மந்தையின் ஒற்றுமைக்காக உழைக்க வேண்டும். நாம் ஒருவரையொருவர் மேம்படுத்தவும், ஆறுதல்படுத்தவும், கட்டியெழுப்பவும் வேண்டும், கடவுளின் அன்பையும் நமது அக்கறையையும் பாதுகப்பையும் ஒருவருக்கொருவர் உறுதிப்படுத்த வேண்டும். ஆடுகள் சிதறக்கூடாது. இதற்காகத் தான் இயேசு ‘எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக’ என்று தந்தையை வேண்டுகிறார் (யோவான் 17:21). நாம் அவரின் ஒரே மந்தையாக, தூய ஆவியாரால் வழிநடதப்படும் திருஅவையைச் சார்ந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவரது குரல் நம் வழியாக உலகில் எதிரொலிக்க வேண்டும்.
ஆயனாகிய இயேசு நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் அறிந்து வைத்திருப்பதோடு நம்மை பெயர் சொல்லி அழைக்கின்றார், நாம் தொலைந்து போகையில் நம்மை தேடுகின்றார். நம்மை தூக்கி அவரது தோளில் சுமக்க ஆவல் கொண்டவர்.
ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்... நாம் எங்கிருந்தாலும் நல்லாயன் இயேசு நம்மோடு இருந்தால் அதுவே நமக்கு ‘விண்ணகம்’.
இறைவேண்டல்.
நல்லாயனாகிய ஆண்டவரே, தூய ஆவியாரின் வல்லமையால், எனது மன இருள் நீக்கப்படவும், கண்கள் திறக்கப்படவும், பாவிகளை அல்ல பாவத்தை வெறுக்கும் உம் மந்தையில் ஓர் ஆடாக நான் வாழ என்னை ஆசீர்வதியும். அமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
