இயேசுவே தமது விண்ணக வாழ்வுக்கு வாயில்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

12 மே 2025
பாஸ்கா4-ம் வாரம் – திங்கள்
தி.பணிகள் 11: 1-18
யோவான் 10: 1-10
இயேசுவே தமது விண்ணக வாழ்வுக்கு வாயில்!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம், புனித பேதுரு புறவினத்தார் வீட்டிற்குள் நுழைந்து அவர்களுடன் உணவருந்தியதை விவரிக்கிறது. இவ்வாசகத்தில் பிற இனத்தார்மீதும் தூய ஆவியார் பொழியப்பட்டதைக் குறித்து வாசிக்கின்றோம். ஒரு காலத்தில் யூதருக்கு மட்டுமே மீட்பு உண்டு என்று நினைத்திருந்த பேதுரு, பிற இனத்தார் மீது தூய ஆவியார் பொழியப்பட்டதைக் கண்டு, அவர்களுக்கும் மீட்பு என நம்பத் தொடங்குகின்றார். கடவுள் யூதர்மீது மட்டுமல்லாமல், பிற இனத்தார் மீதும் தூய ஆவியாரைப் பொழிந்ததன் மூலம் எல்லாரும் அவரது மக்கள்; அவர்கள் மீட்புப் பெற இயேசுவின் வழியாக வர வேண்டும் என்ற உண்மையை உணர்த்துகின்றார்.
இது வரை, அனைத்து கிறிஸ்தவர்களும் யூதர்களாகவோ அல்லது யூத மதத்திற்கு மாறியவர்களாகவோ இருந்தனர். பேதுரு தனக்குக் கிடைத்த இறைவெளிப்பாட்டையும், ஒரு புறவினத்தாருக்குக் கிடைத்த மற்றொரு வெளிப்பாட்டையும் விவரிப்பதன் மூலம் தனது செயலை நியாயப்படுத்துகிறார். இது மூன்றாவது "பெந்தெகொஸ்தே" ஆகும், ஏனெனில்ம்இது தூய ஆவி புறவினத்தாருக்கு வழங்கப்படுகிறது. முதல் பெந்தெகொஸ்தே எருசலேமில் உள்ள யூதர்களுக்கும்; இரண்டாவது யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவில் உள்ள யூதர்களுக்கும் சமாரியர்களுக்கும் அருளப்பட்டதை நாம் அறிவோம்.
நற்செய்தி.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “ஆடுகளுக்கு வாயில்நானே” என்கின்றார். தம்மை ஓர் ஆயனாக உருவகப்படுத்திக் கொள்கிறார். அதிலும் இயேசு ஒரு நல்ல ஆயனாக தம்மை வெளிப்படுத்துகிறார். இதன்மூலம் அவரே விண்ணகத்திற்குள் செல்வதற்கான நுழைவாயில் என்றும் தன் வழியாக அன்றி எவரும் விண்ணகத்திற்குள்ளோ அல்லது தந்தையிடமோ செல்ல முடியாது (யோவா 14: 6) என்று மிக உறுதியாகச் சொல்கின்றார்.
இயேசு தன்னை வாயில் என்று சொல்வதன்மூலம், வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதித்து, மந்தையிலிருந்து ஆட்டைத் திருடிய போலியான ஆயர்களைக் குறித்தும் எப்போதும் கவனமாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
அக்கால இஸ்ரயேலர் மத்தியில் இடையர்கள் ஆடுகளை மேய்ப்பது ஒரு தொழிலாகக் கருதப்பட்டது. அவர்க்ள வழக்கமாகக் கூலிக்கு ஆடுகளை மேய்ப்பவர்களாக இருப்பர். ஆடுகளுக்கு நல்ல மேய்ச்சல் கிடைத்ததா இல்லையா என்பது பற்றி அவர்களுக்குக் கவலை கிடையாது. மேலும், ஆடுகளைத் தாக்கும் கொடிய விலங்குகள் வந்தாலும், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் எடுப்பர். அடுத்து, மந்தையில் இருக்கும் கொழுத்தவற்றை கொன்று தின்று, காட்டு விலங்குகள் கொன்றுவிட்டதாகப் பொய் கணக்குக் காண்பிப்பர். ஆம், அவர்கள் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதில் ஆடுகளை மேய்ந்தார்கள் என்று எசேக்கியேல் கூறக் கேட்கிறோம். (எசே 33: 3,8).
எனவேத்தான், இயேசு தம்மை ஒரு நல்லாயனாக வெளிப்படுத்துகிறார். நல்லாயன் தம் கண்காணிப்பில் உள்ள ஆடுகளுக்காக தம் உயிரையும் கொடுக்கவல்லவர். தம் ஆடுகளைப் பசும்புல் தரைகளுக்கும் நீர்நிலைகளுக்கும் ஓட்டிச் செல்வார். தீய மேய்ப்பர்கள் சுயநலவாதிகள். வேலியே பயிரை மேய்ந்தாற்போல் அவர்களது கையில் ஆடுகளுக்குப் பாதுகாப்பு கிடையாது.
இயேசு தன்னை வாயில் என்று சொல்வதன்மூலம், வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதித்து, மந்தையிலிருந்து ஆட்டைத் திருடிய போலியான ஆயர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினையும் விடுக்கிறார். நம் ஒவ்வொருவருக்கும் நல்லாயனாக இருப்பவர் ஆண்டவர் ஒருவரே.
இன்றைய வாசகங்களைப் பற்றி சிந்திக்கும்போது, திருஅவையில் தலைமைத்துவத்திற்கும் அதிகாரப் பதவிகளுக்கும் அழைக்கப்படுபவர்களில் சிலர் தலைமைத்துவம் என்றால் என்ன என்பது பற்றி அறியாமலேயே பொறுப்பு வகிக்கிறார்கள். திருஅவையில் வழிநடத்தப்படும் மந்தைகளான இறைமக்கள் பாதுகாப்பாக தங்கள் இலக்கை அடையவும், தலைவர்களால் அவர்களுக்குத் தேவையானதை வழங்குவதும் அவர்களின் நல்வாழ்வுக்காக தேவையான அனைத்தையும் செய்வதுமாகும். கடவுளின் திட்டத்திற்கு ஏற்றவாறு, வழிநடத்தப்படுபவர்களுக்காக எதையும் செய்யத் தலைவர்கள், பொறுப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும்.
இயேசு நம்முடன் இருக்கிறார், அவர் நம்மைப் பாதுகாக்கிறார் என்பதை ஒவ்வொரு வினாடியும் நாம் உறுதி செய்வது இன்றியமையாதது. ஆண்டவர் எனது நல்லாயன் ஆகவே எனக்கொரு குறையுமிராது என்பது வெறும் பாட்டு அல்ல. அது நமது நம்பிக்கை வாழ்வின் அச்சாரமகும்.
நல்லாயனாகிய இயேசுவின் மந்தையாக இருக்க நாம் அவருடைய குரல் கேட்டு வாழ்வோம் (யோவா 10:3).
இறைவேண்டல்.
நல்லாயனாகிய ஆண்டவரே, வாழ்க்கையிலும் பணியிலும் உமது குரல்கேட்டு உம்மோடு இணைந்த வாழ்க்கை வாழ என்னை பாதுகாப்பீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
அலைப்பேசி +6 0122285452
Daily Program
