துணிவு, உண்மை நற்செய்திப்பணியின் இரு கண்கள்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

3 மே 2025
பாஸ்கா 2ஆம் வாரம் – சனி
புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள்-விழா
1 கொரி 15: 1-8
யோவான் 14: 6-14
துணிவு, உண்மை நற்செய்திப்பணியின் இரு கண்கள்!
முன்னுரை.
இன்று நாம் திருத்தூதர்களான புனித பிலிப்பு மற்றும் புனித யாக்கோபு (சிறியவர்) ஆகியோரின் விழாவைக் கொண்டாடுகிறோம். இந்த இரு திருத்தூதர்களைப் பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. யாக்கோபை விட பிலிப்பு நற்செய்திகளில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். புனித யாக்கோபு புனித யோவானின் சகோதரரான யாக்கோபு அல்ல. இவர் மற்றொருவர். இவர் சிறிய யாக்கோப்பு என்றே அழைக்கப்படுகிறார்.
முதல் வாசகம்.
கொரிந்தியருக்கு எழுதிய புனித பவுலின் முதல் திருமுகத்தில், இயேசுவின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளை அவர் குறிப்பிடுகிறார்: கிறிஸ்து நமது பாவங்களுக்காக பாடுபட்டார், மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்றும் அவர் கேபாவுக்கும் (பேதுருவுக்கும்) அதன்பின் பன்னிருவருக்கும் தோன்றியதோடு, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர் சகோதரிகளுக்கு ஒரே நேரத்தில் தோன்றினார் என்றும், இறுதியில் தனக்கும் தோன்றினார் என்றும் பவுல் கூறுவதைக் கேட்கிறோம்,
நற்செய்தி.
நற்செய்தியில், இராவுணவின்போது பிலிப்பு இயேசுவிடம் கேட்ட கேள்வியை நற்செய்தி விவரிக்கிறது. இயேசு, தோமாவை நோக்கி: “வழியும் உண்மையும் வாழ்வும் நானே, என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை என்றும், நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டும் இருக்கிறீர்கள்” என்றும் இயேசு கூறியதை யோவான் எடுத்துரைக்கிறார்.
அப்போது, பிலிப்பு அவரிடம், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்றதும், இயேசு அவரிடம் கூறியது: “பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, ‘தந்தையை எங்களுக்குக் காட்டும்’ என்று நீ எப்படிக் கேட்கலாம்? என்று மறுகேள்வி கேட்டதோடு, இவ்வளவு காலம் நான் உங்களுடனே இருந்தும், நீ என்னை அறியவில்லையா, பிலிப்பு? என்றும் பிலிப்புவை வினவினார்.
சிந்தனைக்கு.
இன்று திருஅவையானது மறைச்சாட்சிகளும் திருத்தூதர்களுமான புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபின் விழாவைக் கொண்டாடுகின்றது. திருத்தந்தை மூன்றாம் ஜான், இவர்கள் நினைவாக ஒரு கோயிலைக் கட்டியதன் அடிப்படையில், இருவருடைய விழாவும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகின்றது என அறிகிறோம்.
1. திருத்தூதர் பிலிப்பு.
இவருடைய சொந்த ஊர் பெத்சாய்தா. ஆண்டவர் இயேசு கலிலேயா கடற்கரைப் பக்கம் செல்லுகையில், இவரிடம் என் பின்னே வா என்று அழைத்தார். உடனே, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்ந்தவர்களில் பிலிப்புவும் ஒருவர். இதற்கு முன் இவர் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்தான் நத்தனியேல் என்பவரை (பார்த்தலோமேயு) இயேசுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார் என்பது வரலாறு (யோவான் 1: 43-51).
தொடர்ந்து, யோவான் நற்செய்தியின்படி, இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும், ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே என்று இயேசு கிறிஸ்து ஐயாயிரம் பேருக்கு உணவளிப்பதற்கு முன்பாக கூறியவரும் இவர்தான் (யோவா 6: 1-14).
2. யாக்கோப்பு
மேலே குறிப்பிட்டதைப்போல், பெரிய யாக்கோபுவை செபதேயுவின் மகன் என்றும், சின்ன யாக்கோபுவை அல்பேயுவின் மகன் என்றும் நாம் அடையாளம் காட்டப்படுகிறோம். இன்றைய விழாவானது சின்ன யாக்கோப்புக்கானது.
உயிர்த்த இயேசுவை நேரில் கண்டுணர்ந்த சாட்சிகளின் அடிப்படையில்தான் திருஅவை எழுப்பப்பட்டது. திருத்தூதர்கள் இந்த திருஅவை எனும் கட்டடத்தின் அடித்தளம். நாம் அனைவரும் இந்த அடித்தள பாறையின் மீது கட்டப்பட்டுள்ளோம். இயேசு பேரும் புகழும் பெற்ற, குறையற்ற நபர்களைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அதை அவர் எள்ளளவும் விரும்பவில்லை. அவர் நம்மைப் போன்ற குறயுள்ளவர்களை, பலவீனமானவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
பவுல் அடிகளைத் தவிர்த்து மற்ற திருத்தூதர்கள் இயேசுவோடு வாழ்ந்தவர்கள், அவரால் நற்செய்திப்பணிக்கு நேரடியாக அனுப்பப்பட்டவர்கள். ஆகவே, இன்று நாம் விழாக்காணும் நாயகர்கள் நம்மை இயேசுவின் அருகாமைக்கு இட்டுச் செல்பவர்கள் எனபதில் ஐயமில்லை.
இறைவேண்டல்.
குறையுள்ளவர்களை நிறைவுள்ளவர்களாக மாற்றிய ஆண்டவரே, புனித யாக்கோப்பு மற்றும் பிலப்பு இவர்களின் முன்மாதிரியால் நான் மேலும் நம்பிக்கை வாழ்வில் உறுதிப்படுத்தப்படுவேனாக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
