சட்டம் தராததை அன்பு தரும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

26 மார்ச்  2025                                                                                                                  
தவக்காலம் மூன்றாம் வாரம் – புதன்
இணைச்சட்டம் 4: 1, 5-9
மத்தேயு 5: 17-19

சட்டம் தராததை அன்பு தரும்!
 
 முதல் வாசகம்.

‘இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “இஸ்ரயேலரே! கேளுங்கள்!” என்ற வார்த்தைகளோடு தொடங்குகின்றது. ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களிடம், “கேளுங்கள்” என்று செவிமடுக்க அழைக்கிறார்.
“நான் உங்களுக்குக் கற்பிக்கும் நியமங்கள் மற்றும் கட்டளைகளின் படி நடந்தால், ஆண்டவர் வாக்களித்த நாட்டினை உரிமைப் பேறாகப் பெறுவீர்கள்” என்கின்றார் மோசே.  தன்னுடைய கட்டளைகளின்படி நடப்போர் வாழ்வுபெறுவர் (லேவி 18:5) என்று சொன்ன இறைவன், இங்கு மோசே வழியாக  யாராரெல்லாம் தன்னுடைய குரலுக்குச் செவிமடுத்து, அதன்படி வாழ்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டினை உரிமைப் பேறாகப் பெறுவார்கள் என்கின்றார்.

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு,  இறைவார்த்தையை வாசிப்பவர்களாக மட்டுமல்லாது, அதைப் பின்பற்றி  வாழ்பவர்களாக இருக்க வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறார். அவர் தொடர்ந்து,   “இக்கட்டளைகளில் ஒன்றையேனும் மீறி, அவ்வாறே மக்களுக்குக் கற்பிக்கின்றவர் விண்ணரசில் மிகச்சிறியவர் எனக் கருதப்படுவார் என்றும், அவையனைத்தையும் கடைபிடித்துக் கற்பிக்கின்றவரோ விண்ணரசில் மிகப்பெரியவர் எனக் கருதப்படுவார் என்றும் விவரிக்கிறார். 

சிந்தனைக்கு.

யூதர்களைப் பொறுத்தவரை, மோசே வழி கிடைக்கப்பெற்ற திருச்சட்டத்தைப் பின்பற்றுவது என்பது  உயிருக்கும் மேலானதொன்றாகக்  கருதப்பட்டது. அவர்கள் கேட்ட இறைவார்த்தையை அவர்களது பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கற்பிக்க வேண்டும் என்பது அவர்களுக்கான நிபந்தனையாகவும் இருந்தது.  காலப்போக்கில், யூதச் சமூகத்தில் மேல்நிலையில் இருந்தவர்களான பரிசேயர்களும் சதுசேயர்களும், சட்ட வல்லுனர்களும்  திருச்சட்டத்தை  அவர்களது கையில் எடுத்துகொண்டு அடிமட்ட  பாமர மக்களை இச்சட்டங்களால் வாட்டி வதைத்தனர்.  

இயேசு திருசட்டங்களுக்குக் கொடுத்த உண்மை பொருளை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, இயேசுவையும் எதிர்த்தனர். எனவேதான் அவர்களுக்குப் பதிலடியாக “திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன்” என்று விளக்கம் தருகிறார்.

பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் சட்டத்தைப் பிடித்துக்கொண்டார்கள் மனிதநேயத்தைக் காற்றில் பறக்கவிட்டார்கள். சட்டத்தால் வாழ்வு வந்துவிடாது என்பதுதான் புனித பவுல் அடிகளின் வாதமுமாக இருந்தது.  கடவுளின் சட்டங்களை உள்ளபடி பின்பற்றுவோரும் கடைப்பிடித்துக் கற்பிப்போரும்  விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவர். ஆகவே, கடவுளின் அல்லது திருஅவையின் சட்டங்களை நமக்குச் சாதகமாகத் திரித்துக்கூற முற்படுவது பெரும் குற்றம்.

கடவுள் ஓர் இதயமற்ற சர்வாதிகாரி அல்ல. அவர் நம்மை அன்பு செய்யும், நமக்கு மிகச் சிறந்ததை அருள விரும்பும் தந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சட்டங்களால் நம்மை வதைக்கும் அரக்கர் அல்ல. அவர் இரக்கத்தின் ஆண்டவர். இரக்கத்தின் ஆண்டவர்  நம் மீதும் மற்றவர் மீதும் கொண்டிருக்கும் அன்பை, நாம் எவ்வாறு இன்னும் ஆற்றல்மிகு வகையில்  நமது அன்றாட வாழ்வில் வெளிப்படுத்த முடியும், என்பது பற்றி ஆழ சிந்திக்க வேண்டும். ஆண்டவரின் அளவற்ற அன்பை  செயல்கள் வழி வெளிப்படுத்த வேண்டிய கருவிகள் நாம். 

கடவுளுடனான நமது உறவை நாம் எவ்வளவு அதிகமாக ஆழப்படுத்துகிறோமோ  அவ்வளவு அதிகமாக கடவுள் நமக்கும் மற்றவர்களுக்கும் உள்ள நெருங்கிய உறவை   வெளிப்படுத்துவார்.  கட்டளைகளைவிட மனிதநேயமும் உறவும் மேன்மையானவை. நாம் கட்டளைகள் மற்றும் விதிமுறைகளைத் தாண்டி, மற்றவர்களுடனான நமது உறவை மேம்படுத்த முயல வேண்டும். 

முதல் வாசகத்தில், மோசே “நான் உங்களுக்குக் கற்பிக்கும் நியமங்கள் மற்றும் கட்டளைகளின் படி நடந்தால், ஆண்டவர் வாக்களித்த நாடான கானானை  உரிமைப் பேறாகப் பெறுவீர்கள்” என்றுரைத்ததைக் கேட்டோம். கடவுளுக்கு உகந்த மக்களாக நாம் வாழ முற்பட்டால் நமக்கு உரிமைப் பேறான நாடு விண்ணகம் என்பதை நினைவில் கொள்வோம். விண்ணக வாழ்வே நமது மண்ணகப் போராட்டத்தின் இலக்கு. 


இறைவேண்டல்.

இரக்கத்தின் ஆண்டவரே, உமது அன்பின் இரக்கத்தை எம் உள்ளத்தில் இருத்தி, உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைந்து, அன்பிய சமுதாயமாக நான் வாழ்வதற்கு  அருள்புரிய உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.


 ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452