அவரது திருவுளப்படி வாழ முற்படுவோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

25 மார்ச்  2025                                                                                                                  
தவக்காலம் மூன்றாம் வாரம் – செவ்வாய்
கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு-பெருவிழா
எசாயா 7: 10-14; 8: 10b
எபிரேயர் 10: 4-10                                                                   லூக்கா  1: 26-38

அவரது திருவுளப்படி வாழ முற்படுவோம்!
 
முதல் வாசகம்.

இன்று நாம் கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பைக் கொண்டாடுகிறோம். இந்தப் பெருவிழா பொதுவாக இயேசு பிறப்பு (கிறிஸ்மஸ்) பெருவிழாவுக்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பு மார்ச் 25 அன்று அனுசரிக்கப்படுகிறது.  
இன்றைய முதல் வாசகத்தில் ஆகாசிடம், ஓர் இளம்பெண் கருவுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பார் என்று இறைவாக்கினர் எசாயா கூறுவதை வாசிக்கிறோம்.. அக்குழந்தைக்கு இம்மானுவேல்(கடவுல் நம்மோடு) என்று பெயரிட வேண்டும்  என்ற ஓர் அடையாளம் வழங்கப்படுகிறது. அந்த அடையாளமானது மரியன்னை வழியாக நிறைவேறும் என்று இறைவாக்கினர் எசாயாவின் வாக்கை கேட்கிறோம்.

இரண்டாம் வாசகம்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் “உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்” என்று வாசிக்கக் கேட்கிறோம். இயேசு இறைவனின் திட்டம் நிறைவேற தன்னையே கையளிப்பதைப் குறித்து வாசிக்கின்றோம்.  

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி, கபிரியேல் என்று பெயர்கொண்ட வானதூதுர், மரியாவுக்குத்  தோன்றி, “அருள் நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்” என்று வாழ்த்தியதோடு, மீட்பரின் தாயாக இருக்க சம்மதிப்பாரா என்று கேட்ட விபரத்தைத் தருகிறது.  மரியா  "திருமணம் ஆகாத கன்னிப் பெண் என்பதால்  குழந்தையைப் பெற்றெடுப்பது  எப்படி சாத்தியமாகும் என்பது அவருக்குப் புரியவில்லை. ஆனாலும், கடவுளின் வேண்டுகோளை அவர் சந்தேகிக்கவில்லை; அது எப்படி சாத்தியமாகும் என்று அவர் சிந்திக்கிறார்.  வானதூதர் அவரிடம், “தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது என்று விவரிக்கிறார்.
பின்னர் மரியா, "அப்படியே ஆகட்டும்" என்று கூறுவதோடு, கடவுளின் விருப்பத்திற்கு அவர் முழுமையாகக் கீழ்ப்படிகிறார்.

சிந்தனைக்கு.

ஆம், கருத்தரித்தல் மற்றும் மனுவுரு இல்லாமல் இயேசுவின்  துன்பம், மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் இருக்க முடியாது என்பது உண்மைதான். இயேசு மனுவுருவானதற்கான காரணம், சிலுவையில் மரித்து நமது மீட்புக்காக தம் உயிரைக் கொடுத்ததும், தம் உயிர்த்தெழுதல் மூலம் நமக்கு மீண்டும் வாழ்வைத் தருவதும்தான் என்பதை திருஅவை நமக்கு நினைவூட்டுகிறது. அதே வேளையில் அன்னை மரியாவின் மனவுறுதி குறித்தும் சிந்திக்க அழைக்கப்படுகிறோம்.

எனது சிந்தனைக்கு எட்டிய   மற்றொரு விடயம், கடவுளின் விருப்பத்திற்கு அல்லது திருவுளத்தற்கு அடிபணிதலாகும். மரியா கடவுளின் திருவுளத்தை நிறைவேற்ற “நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்றார்.  

இன்று நாம கேட்கும் வானதூதர் அறிவிப்பானது,  நேரடியாக கடவுளிடமிருந்து கிடைத்த அறிவிப்பு . இயேசு ஒருவரின் பிறப்பே உலக வரலாற்றில்.  முன்னறிவிக்கப்பட்டது. முன்ன்றிவிக்கப்பட்டதுபோல் நிகழ்ந்தது. இயேசுவின் குழந்தை பருவ நிகழ்ச்சியிலும், பிறப்பு நிகழ்விலும் மையமாக இருப்பவர் மரியா என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் அருள் நிறைந்தவர் மட்டுமல்ல ஆண்டவர் அவரோடு இருந்தார் என்பதை லூக்கா நமக்குத் தெளிவுப்படுத்துகிறார். 

அன்னை மரியா தன்னை கடவுளுக்கு அடிமையாக்கிக் கொண்டவர். அவர் உலக ஆசைகளுக்கும் செல்வங்களுக்கும் அல்ல கடவுளுக்கும் அவரது திருவுளத்திற்கும் தன்னை அடிமையாக்கிக் கொண்டவர். எனவே, ஆண்டவரின் தாயாகும் அருளைப் பெற்றார். ஆகவே, நாம் அவரது சுரூபத்திற்கு வணக்கம் செலுத்தும் போதும், அவரிடம் பரிந்துரைக்க மன்றாடும் போது, அவரது மனநிலை, கடவுளோடு அவர் கொண்டிருந்த அடிமைத்தனம், மனத் தாழ்ச்சி, பக்தி, நம்பிக்கை நம்மில் குடிகொள்ள முயற்சிக்க வேண்டும். இவற்றை நாம் கடைப்பிடிக்காமல், அவரது சுரூபத்தை அலங்கரிப்பதும்,  தங்கநகைகள் போட்டு மகிழ்வதும், பூ மாலை போட்டு பெருமிதம் கொள்வதும் பொருளற்றதாகிவிடும். 

தொடர்ந்து, இன்றைய நற்செய்தியில் வானதூதர், ‘கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்கிறார். அக்கூற்றை மரியா  முழுமையாக நம்பினார். நம்மை ஒரு பணிக்கு அழைக்கும் கடவுள் நம்மீது நம்பிக்கை வைத்துதான் அழைக்கிறார். நாம் பல காரணங்களை முன்வைத்து ‘இயலாது’ என்று கலக்கத்துடன் ஒதுங்கிவிடுகிறோம். இயேசுவோ, “நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள்’ (யோவான் 14:1) என்கின்றார். நாம் தயங்குவதாலும், கலங்குவதாலும் கடவுளின் திருவுளத்தை, விருப்பத்தை நிறைவேற்ற முடியதாது. அன்னை மரியா ஓர் இளம் பெண். அவருக்கு இருந்த துணிவும் இறை நம்பிக்கையும் நம்மிலும் இருக்க வேண்டும். 

இறை ஞானம் அற்றவர்கள் அவரைத் தூற்றலாம், இல்லாதது பொல்லாதது கூறலாம். கடவுள் அவரை விண்ணக அரசியாக முடிசூட்டி மாட்சிபடுத்தியுள்ளார் என்பதையும்  அவர் திருஅவையின் தாய் என்பதையும்  நினவில் கொள்வோம். அவர் கடவுளின் வார்த்தை நிறைவேறும் என்று உறுதியாக நம்பின இயேசுவின் உன்னத முதல் சீடர். 

இறைவேண்டல்.

அன்னை மரியில் மனுவுருவான ஆண்டவரே, நானும் சிறியவற்றில் உமக்கு நம்பிக்கைக்குரியவராக  வாழவும், அதன் வழியாக உமது மீட்புப்பணிக்கு   ஒத்துழைப்பு நல்கவும் அருள்புரிவீராக.     ஆமென். 
 


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452