கடவுளின் தயவை நாடுவோர் வாழ்வு பெறுவர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

தவக்காலம் இரண்டாம் வாரம்–சனி

மீக்கா7: 14-15, 18-20                                                                                                

லூக்கா 15: 1-3, 11-32

 
கடவுளின் தயவை நாடுவோர் வாழ்வு பெறுவர்!

முதல் வாசகம்.

இன்றைய நமது வாசகங்களில் கடவுளின் இரக்கமுள்ள மற்றும் மன்னிக்கும் தன்மை மையமாக உள்ளது. இறைவாக்கினர் மீக்காவின் இறைவேண்டலானது பாவம் செய்பவர்கள் மீது கடவுளின் அன்பான தயவை நாடுகிறது.
ஆம், இறைவாக்கினர் மீக்கா இஸ்ரயேலின் கடவுளிடம் மன்றாடுகையில், யூதர்கள் பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட பிறகு, யூதேயாவில் எஞ்சியிருப்பவர்கள்  அல்லது விடுபட்டவர்களுக்கு இந்த இறைவேண்டலை கடவுளிடம் சமர்பிக்கிறார்.
கடவுள் மன்னிக்கத் தயாராக இருப்பது மட்டுமல்லாமல், மன்னித்தவுடன், கடவுள் பாவங்களை கடலின் ஆழத்தில் எறிந்துவிடுவார் என்கிறார் மீக்கா.

நற்செய்தி

இன்றைய நற்செய்தியில், இயேசு பாவிகளுடன் சாப்பிடுவதைப் பற்றி முணுமுணுக்கும் பரிசேயர்களுக்கும் மறைநூல் அறிஞர்களுக்கும்  பதிலளிக்கும் விதமாக,   காணாமற் போன மகனின் உவமையை விவரிக்கிறார்.  லூக்கா நற்செய்தியின் பதினைந்தாம் அதிகாரத்தில் உள்ள மூன்று உவமைகளில் இந்த உவமை மூன்றாவது ஆகும், இவை அனைத்தும் ஒரு பாவி பாவத்திலிருந்து விலகி கடவுளிடம் திரும்பும்போது இயேசுவும் அவரது தந்தையும் எவ்வாறு மகிழ்ச்சியடைகிறார்கள் என்பதைக் காட்டுகிறது
மற்றும் கடவுள் எவ்வாறு தொலைந்து போனவர்களைத் தேடி  திரும்ப வரவேற்கத் தயாராக இருக்கிறார் என்பதைக் விவரிக்கிறது. மனம் தரும்புவோருக்கு வாழ்வு உண்டு என்பதை நற்செய்தி எடுத்துரைக்கிறது.

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்ளை பற்றி நாம் சிந்திக்கும்போது, கடவுள் பாவிகளுக்குக் கொண்டிருக்கும் நிபந்தனையற்ற, அன்பான மன்னிப்பை அறிந்துணர மீண்டும் ஒரு வாய்ப்பைப் பெறுகிறோம்.  வழி தவறிய ஒவ்வொருவரும் (பாவியும்)  அன்பானவரும் மன்னிக்கும் தன்மையுள்ளவருமான கடவுளிடம் திரும்புவதற்காகக் கடவுள் ஆவலுடன் காத்திருப்பதை ஆண்டவர் இயேசு எண்பிக்கிறார். 

உண்மையில்  ஒரு பாவி கடவுளிடம் திரும்பத் தொடங்கியவுடன்,  கடவுள் இரு கரம் விரித்தவராக பாவியை அரவணைக்க விரைகிறார்.  பாவங்களை மன்னிக்கிறார், அவர் காலந்தாழத்துபவர் அல்ல என்பதை நற்செய்தி மெய்ப்பிக்கிறது.

இந்த உவமையை நாம் ஆழ்ந்து சிந்திக்கும்போது, இளைய மகனை மட்டும் கெட்டவனாக நம்மில் சிலர் காணக்கூடும்.  மனமாறி திரும்பி வந்த இளையவனை ஏற்றுக்கொள்ள மறுத்த மூத்த சகோதரனும் பாவிதான். நம் அன்பான உறவைப் புண்படுத்தும் வகையில் பிரிந்துபோனாலும்,  நாம் விரும்பும் விதத்தில் மனம் போனபோக்கில் வாழ்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் நம் சொந்த பாவங்களைப் பற்றி சிந்திக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் இளைய மகனைப் போன்றவர்களா அல்லது மூத்த மகனைப் போன்றவர்களா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ளலாம். மேலும், கடவுள் நல்லிணக்கத்தின் மூலம் நமக்கு மன்னிப்பு வழங்குகிறார் என்பதை நினைவில் கொள்வோம்.  கடவுள் நமக்கு வழங்கும் அருளையும் மன்னிப்பையும், தயவையும் ஏற்றுக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. கண் கெட்டபின் சூரிய வணக்கம் என்பது பலன் தராது. மன்னிப்பதும் மன்னிப்பு கேட்பதும் நமது வாழ்வாக வேண்டும். 

முதல் வாசகத்தில் மீக்கா கூறுவதைப்போல், கடவுள் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திர்ப்பவர் அல்ல.  அவர் பேரன்புகூர்வதில் விருப்பமுடையவர் என்பதில் நம்பிக்கை வைத்து கடவுளை அண்டி வருவோம்.

இறைவேண்டல்.

ஆண்டவரே, மற்றவர்கள் எனக்கு ஏற்படுத்திய காயங்களை மறந்து, உமது முன்னிலையில் மற்றவர்களுடன் மீண்டும் இணைய எனக்கு அன்பான இதயத்தைத் தாரும். ஆமென்.


ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452