ஏழைகளின் கூக்குரலைக் கேட்போர் ஏற்றம் பெறுவர் | ஆர்.கே. சாமி | VeritasTamil

18 மார்ச் 2025
தவக்காலம் இரண்டாம் வாரம்–செவ்வாய்
எசாயா 1: 10, 16-20
மத்தேயு 23: 1-12
ஏழைகளின் கூக்குரலைக் கேட்போர் ஏற்றம் பெறுவர்.
முதல் வாசகம்.
முதல் வாசகம் யூதர்கள் பாபிலோனிய நாடுகடத்தலுக்கு முன்பு நடைபெற்றதை விவரிக்கிறது. இதில், ஏசாயா மக்களை, தவறுகளிலிருந்தும் பாவத்திலிருந்தும் விலகிச் செல்வது மட்டும் போதாது, அவர்கள் நன்மையையும் செய்ய வேண்டும், நீதியைத் தேட வேண்டும், தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும், ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர்களுக்கு உதவ வேண்டும், உதவியற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகிறார்.
மேலும், நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள் என்றெல்லாம் வலியுறுத்தி போதிக்கின்றார் எசாயா.
நிறைவாக, மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள் என்று கடவுளும் எச்சரிக்கிறார்.
நற்செய்தி.
ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களோடு உடன்படிக்கை செய்தார் (விப 19-20). அவர்களோ அந்த உடன்படிக்கையை மீறி, சோதோம் கொமோரோவைப் போன்று ஆனானர்கள். இந்நிலையில்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, “தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்” என்கின்றார்.
அத்துடன், நற்செய்தியில் இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயரையும் சாடுகின்றபொழுது, அவர்கள் பளுவான சுமைகளை மக்கள் மீது இறக்கி வைக்கப்பதாகச் சாடுகின்றார். உண்மையில், இஸ்ரயேலில் இருந்த பலர் ஆண்டவரிடம் நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள்; ஆனால், மறைமுகமாக அவர்கள் ஏழைகளை ஒடுக்கியும் நசுக்கியும் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய போலியான வாழ்க்கையைப் பார்த்துவிட்டுதான் இறைவாக்கினர் எசாயா அவர்களைச் சோதோம் மற்றும் கொமோரா நகர்களுக்கு ஒப்பிட்டார் என்று இயேச் கூறுகிறார்.
சிந்தனைக்கு.
நமது வார்த்தைகளும் அன்றாட நடைமுறை வாழ்வும் ஒன்றித்திருக்கின்றனவா? இன்றைய நற்செய்தியில், இயேசு மறைநூல் அறிஞர்களையும் பரிசேயரையும் அவர்களின் ஆடம்பரமான பழக்கவழக்கங்களுக்காகக் கண்டிக்கிறார். அவர்களோ, யூத மதத்தின் அனைத்து சடங்கு விதிகளையும் விதிமுறைகளையும் தவறாது, பொது மக்கள் காணுமாறு கடைப்பிடிக்கிறார்கள். இயேசு அவர்களின் போக்கை வெளிவேடம் என்கிறார்.
இன்று நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி, எவ்வகையில் நாம் மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்களையும் விட சிறந்தவர்களாக உள்ளோம்? என்பதாகும்.
அதனால்தான் நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அவரைப் போலவே தெய்வீக மனத்தாழ்மையும், வாழ்வில் எளிமையும் நாம் கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவர் நமக்காக, கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார் ( பிலி 2:5-7) என்று பவுல் அடிகள் நமக்கு அறிவுறுத்துகிறார்.
ஏழ்மையும் எளிமையும் நமக்கு இரு கண்கள் போன்றவை. இவற்றை உதறித்தள்ளுவோருக்கு நிலைவாழ்வு என்பது எட்டாக் கனிக்குக் கொட்டாவி விட்ட கதையாகும்.
இயேசு நமக்குப் தந்தையிடம் செல்லும் வழியைக் காட்டுகிறார் - அமைதி, மகிழ்ச்சி, நீதி மற்றும் உண்மை இவற்றை ஏற்று வாழவ்வோர் எளிமையைக் கொண்டிருப்பர். பிறரோடு பகிர்ந்து வாழும்போதுதான் அமைதியம் மகிழ்ச்சியும் நம்மில் வெளிப்படும். எளிமையின்றி அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழியே இல்லை.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நீர் எனக்குக் கொடுத்த திறமைகளையும், ஞானத்தையும் பிறரோடு பகிர்ந்து வாழும் வரமருள்வீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
