நமது நோன்பு சிலுவையை நோக்கி நம்மை நகர்த்தட்டும்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

7 மார்ச் 2025
திருநீற்றுப் புதனுக்குப் பின் வரும் வெள்ளி
எசாயா 58: 1-9a
மத்தேயு 9: 14-15
நமது நோன்பு சிலுவையை நோக்கி நம்மை நகர்த்தட்டும்!
முதல் வாசகம்.
ஏசாயாவின் வாசகத்தில், மக்கள் கடவுளிடம் புகார் கூறுகிறார்கள்: "நாங்கள் ஏன் நோன்பு இருக்க வேண்டும்? கடவுளாகிய நீர் எங்கள் நோன்பைக் கண்டுகொள்ளவில்லை. நாங்கள் எங்களை வருந்திக் கொள்கிறோம், நீர் அதைக் கவனிக்கவில்லை" என்றார்கள். அதற்குக் கடவுள் அவர் விரும்பும் நோன்பு ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும், பசித்தவர்களுக்கு உணவளிப்பதற்கும், வீடற்றவர்களுக்கு தங்குமிடம் வழங்குவதற்கும், உடையற்றவர்களுக்கு உடை அணிவிப்பதற்கும் - அதாவது இரக்கம், அன்பு மற்றும் பிறர் அன்புப் பணிக்குத் துணைபோக வேண்டும் என்கிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், இயேசு மீண்டும் நோன்பு பற்றியும் பேசுகிறார். மணமகன் இருக்கும்போது, திருமண விருந்தினர்கள் நோன்பு இருப்பதில்லை என்பதை திருமுழுக்கு யோவானின் சீடர்களுக்கு விவரிக்கிறார். மணமகன் பிரிந்து போனால் நோன்பு இருப்பது பொருத்தமானது. அவ்வாறே, இயேசு தம்முடைய சீடர்களுடன் இருக்கும்போது, சீடர்கள் நோன்பு இருத்தலில் பொருளிளல்லை என்பதை எடுத்துரைக்க இந்த ஒப்புமையைக் பயன்படுத்தினார்.
சிந்தனைக்கு.
நோன்பு என்பது நம் வாழ்வில் நமக்கு அத்தியாவசியம் என்று நாம் நினைப்பதைக் கூட நீக்கி, உண்மையான தேவையில் உள்ளவர்கள் மீது கவனம் செலுத்த நம்மை ஈட்டுபடுத்த வேண்டும்: ஒடுக்கப்பட்டவர்கள், பசித்தவர்கள், வீடற்றவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள், மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை அணுகி உதவுவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆண்டவர். ஆம், நோன்பு நம்மை நாமே வெறுமைப்படுத்திக்கொள்ள உதவ வேண்டும்.
ஆகவே இந்தத் தவக்காலத்தில் நோன்பு மற்றும் இறைவேண்டல் என்பதை வெறுமனே கடமைக்காக ஏற்காம் அதன் நோக்கம் அறிந்து, உணர்ந்து கடைப்பிடிக்க ஆண்டவர் அழைக்கிறார். அப்போதுதான் எசாயா இறைவாக்கினர் சொல்வது போல “உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்’ என்பது நம்மில் நிறைவேறும். கடமைக்காக நோன்பு என்பது முற்றிலும் பயனற்றது. அது 'விழலுக்கு இறைத்த நீர்' போன்றது.
"பாவத்தையும் அதற்கு வழிவகுக்கும் அனைத்தையும் தவிர்ப்பதற்கு நோன்பு ஒரு சிறந்த உதவி என்று புனித நூல்களும் நமது கிறிஸ்தவ பாரம்பரியமும் கற்பிக்கின்றன. மறைந்த திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் அவர்கள் கூறியது போல், உண்மையான நோன்பு என்பது விண்ணகத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதாகும்.
எனவே, இயேசுவின் மனமாற்றம் மற்றும் மனந்திரும்புதலுக்கான அழைப்பு, அவருக்கு முன்பிருந்த இறைவக்கனர்களைப்போல் வெளிப்புற செயல்களான "சாக்கு உடை மற்றும் சாம்பல் பூசுதலை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக இதயத்தின் மனமாற்றத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம்.
இறைவேண்டல்.
நோன்பினால் அலகையின் ஆளுமையை வெல்ல முடியும் என்றுரைத்த ஆண்டவரே, நோன்பு ஏற்க வேண்டும் என்ற ஆசையை என்னுள் விதைப்பீராக. நான் நோன்பு ஏற்கும்போது, என் தன்னல இயல்பை விட்டொழிக்கும் மன வலிமையை எனக்கு அளிப்பீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
