மண்ணகத்தில் சிறந்த சீடரே, விண்ணகத்தில் வாழும் சீடர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 8 ஆம் வாரம் –செவ்வாய்
சீராக். 17: 20-29
மாற்கு 10: 17-27
மண்ணகத்தில் சிறந்த சீடரே, விண்ணகத்தில் வாழும் சீடர்!
முதல் வாசகம்.
முதல் வாசகத்தில், சீராக்கின் ஆசிரியர் பென் சீரா, நீதியோடும் அறத்தோடும் செயல்படுவோரின் வாழ்க்கையைப் போற்றுகிறார். மிருக பலிகளைக் காட்டிலும் பிறரைக் கவனிப்பது, ஏழைகளுக்குக் கொடுப்பது, மக்களைச் சரியாக நடத்துவது ஆகியவை கடவுளுக்குப் விருப்பமானது என்கிறார். மற்றவர்களை அன்பு செய்வது போன்ற தொடர்ச்சியான செயல்களையே கடவுள் விரும்புகிறார்.
மேலும், நீதிமான்களின் பலி ஏற்றுக் கொள்ளத்தக்கது; அதன் நினைவு என்றும் நீங்காது. ஆண்டவரைத் தாராளமாய் மாட்சிமைப்படுத்து; உன் உழைப்பின் முதற்கனிகளைக் கொடுப்பதில் கணக்குப் பார்க்காதே என்றும் இன்று நமக்கு அறிவுறுத்தப்படுகிறது.
நிறைவாக, கடவுள் நமக்குக் கொடுத்திருப்பதற்கு ஏற்ப அவருக்குக் கொடுக்க அழைக்கிறார். உன்னால் முடிந்த அளவுக்குத் தாராளமாய்க் கொடு என்கிறார். அதற்கான கைமாறு நிச்சயம் கிடைக்கும் என்றும், ஆண்டவர் ஆள் பார்த்து அல்ல, செயலைப் பார்த்தே நீதி வழங்குகிறார் என்றும் மேலும் அறிவுறுத்துகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், பேதுரு இயேசுவிடம், அவரும் மற்ற சீடர்களும் அவரைப் பின்பற்றுவதற்காக குடும்பம் மற்றும் வேலைகளைத் துறப்பதன் மூலம் எவ்வாறு பயனடைவார்கள் என்று கேட்டார். அதற்கு, இயேசு அவர்களை ஆசீர்வதிப்பதாகவும், இந்த வாழ்க்கையில் அவர்களுக்கு அதிகமாகக் கொடுப்பதன் மூலம் அவர்கள் விட்டுவிட்டதைப் பெருக்குவதாகவும் உறுதியளிக்கிறார். அவருடைய சீடர்களாக இருப்பதற்காக மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில், நேற்றைய பணக்கார இளைஞனுக்கு மாறாக ஒரு படிப்பினையப் காண்கிறோம். எல்லாவற்றையும் விற்று ஏழைக்குக் கொடு என்று இயேசு நிலைவாழ்வுக்கு அறிவுரையாகக் கூறினார். ஆனால் அந்த செல்வந்தன் தனது செல்வங்களை விட முடியாது என்று வெளியேறினான். இன்றைய நற்செய்தியில், பேதுருவும் மற்றும் மற்ற சீடர்களும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். பேதுரு "பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே" என்று அதற்குக் கைமாறு என்னவாக இருக்கும் என்று எதிர்ப்பார்த்தார். இதுபற்றி சிந்திக்கையில்:
முதலாவதாக, இயேசுவின் சீடர்களுக்கும் நேற்றைய பணக்கார இளைஞனுக்குமிடையே உள்ள வேறுபாட்டை அறிகிறோம். உலகப் பற்று அற்ற வாழ்வுக்கு உரியவர்கள் இயேசுவின் சீடர்கள் என்பது தெளிவாகிறது. மத்தேயு நற்செய்தி 6:24-ல்,“எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது’ என்று இயேசு சீடர்களுக்கு அறிவுறுத்தியை நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்து, அவர் பொருட்டு மண்ணக வாழ்வில் செல்வங்களையும் உலகப் பற்றையும் துறப்பவர்களுக்கு மறுமையில் நிலைவாழ்வு கைமாறாகக் கிட்டும் என்ற உறுதிமொழியை ஆண்டவர் உறுதி செய்கிறார். இது இயேசுவின் உறுதிமொழி.
ஒருவகையில், பேதுருவின் கேள்வி நமக்கும் பெரும் நன்மையாக உள்ளது. நாம் இயேசுவின் சீடர்களாக உல்கில் வாழ்ந்தால், என்ன நடக்கும் என்பதை இயேசு தெளிவாக அறிவிக்க வைக்கிறது. உண்மை சீடத்துவத்திற்கு வெகுமதி ஏராளமாகவும் இரட்டிப்பாகவும் இருக்கும் உறுதியாகத் தெரிகிறது.
நாம் செய்யும் நற்செயல்களுக்குக் கடவுள் கைமாறு அளிப்பார் என்ற உண்மையை இன்று அறிகிறோம். ஆனாலும், கடவுள் தரும் கைமாறுக்காக அல்ல, எல்லா நேரங்களிலும் நம் செயல்களின் முக்கிய நோக்கம் கடவுளை மாட்சிபடுத்துவதாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வோம். இவ்வுலக செல்வங்களுக்கு முந்துவோர் விண்ணக செல்வத்தைக் கோட்டைவிடுவர். இது குறித்தே ஆண்டவரும் இன்று, முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.
இறைவேண்டல்.
நிலைவாழ்வை உமது சீடர்களுக்கு உறுதியளித்த ஆண்டவரே, உம்முடனும் உமது மண்ணக சகோதர சகோதரிகளுடனும் எனது உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த எனக்கு உதவுவீராக. ஆமென்.
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
