விண்ணகமே சொந்த வீடு, மண்ணகம் அல்ல!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 7ஆம் வாரம் –சனி
சீராக். 17: 1-15
மாற்கு 10: 13-16


விண்ணகமே சொந்த  வீடு, மண்ணகம் அல்ல!

முதல் வாசகம்.

முதல் வாசகத்தில், மனிதர்களின் படைப்பு பற்றிய தொடக்க நூலின் விவரிப்பை வாசிக்கிறோம்.  "கடவுள் மண்ணில் இருந்து மனிதனைப் படைத்தார், அவருடைய சொந்த உருவில்  மனிதனை உருவாக்கினார்" (சிராக் 17:1) என்று, சீராக்கின்  ஆசிரியர்  நமது மரணத்தைப் பற்றி சிந்திக்கிறார். நமது பூமிக்குரிய வாழ்க்கை குறுகியது.  நாம் இங்கு சிறிது காலம் மட்டுமே இருக்க உள்ளோம். மண்ணகம் நமது வாடகை வீடு என்பதை இவ்வாசகம் எடுத்துரைக்கிறது.  
மனிதர்கள் பூமியின் மிருகங்களைப் போல் இல்லை, ஏனென்றால் கடவுள் நமக்கு அறிவுரை,  இதயம், அறிவு மற்றும் புரிதலோடு ஞானத்தையும் ஆன்மாவையும்  கொடுத்துள்ளார்.  நன்மை தீமைகளைப் பகுத்தறியும் திறனையும் அவர் நமக்கு அளித்துள்ளார் என்கிறார் சீராக்கின் ஆசிரியர்
 இறுதியில்,  கடவுள் நம்மையும் நம் செயல்களையும் நியாயந்தீர்ப்பார் என்று நமக்கு நினைவூட்டப்படுகிறது.  "நமது செயல்கள் அனைத்தும் சூரியனைப் போல அவருக்குத் தெளிவாக  உள்ளன, அவருடைய கண்கள் எப்போதும் நமது வழிகளை நோக்குகின்றன" (சிராக் 17:15) என்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

நற்செய்தி.

 நாம் கொண்டிருக்கும் நான்கு நற்செய்திகளிலும், இயேசு கோபமடைந்தவர் என்று விவரிக்கப்பட்ட ஒரே பகுதி இன்றைய நற்செய்திதான்.  இயேசு தம் சீடர்களிடம் கோபமாக இருந்தார் என்று நற்செய்தி வாசகம் கூறுகிறது. அவர்களுக்கு அறிவுறுத்துவதில் அவர் கண்ணும் கருத்துமாக இருந்தார். ஆனால் அவர்கள் இயேசுவின் எண்ணத்தையும் செயல்களையும் உள்வாங்கியதாக தெரியவில்லை. 
மாற்கு நற்செய்தியின் முந்தைய அதிகாரத்தில் இயேசு   சீடர்களிடம் அவரது  பெயரில் ஒரு குழந்தையை வரவேற்பவர் அவரை வரவேற்கிறார் என்று அறிவித்தார். ஆனால் இப்போது மக்கள் இயேசுவிடம் குழந்தைகளைக் கொண்டுவந்தபோது சீடர்கள் அவர்களைத் தடுக்கறார்கள். இயேசு   சீடர்களைத் திருத்துகிறார், ‘குழந்தைகள் என்னிடம் வரட்டும்; அவர்களைத் தடுக்காதீர்கள், மக்கள் தம்மிடம் குழந்தைகளைக் கொண்டு வரட்டும் என்கிறார்.   

சிந்தனைக்கு.

நற்செய்தியில், இயேசு  இறையாட்சி இத்தகையோருக்கு உரியது என்று குழந்தையைக் காட்டி  இயேசு சொன்னதன் பொருள் என்ன? சிந்திக்க அழைக்கப்படுகிறோம். குழந்தைகள் தன்னளவில் தாழ்ச்சி உள்ளவர்களாக, பெரியோருக்குக் கீழ்படிந்து நடப்பவர்களாக, பெரியோரை எப்போதும் நம்பக் கூடியவர்களாக, பழயதை   நினைத்துக்கொண்டிருக்காமல் அதனை ஆகவே, சிறுவர்களை மதிக்க வேண்டும் என்ற படிப்பினையையும் ஆண்டவர் வலியுறுத்துகிறார். 
அவர்களது உள்ளத்தில் சூது வாது இருக்காது. ஆகவே, நாம் ஒருநாள் நமது நிலையான வான் வீட்டில் மகிழ்ந்திருக்க இம்மையில் பொய், பொறாமை, கள்ளம் கபடம், சூது வாது அறியாத குழந்தைகளின் உள்ளதோராய் வாழ்தல் அவசியம் என்பதை இயேசு வலியுறுத்துகிறார்.
கடவுளின் பிள்ளைகளாக, கடவுளுடனான நமது உறவை எப்போதும் சோதித்து அறிய வேண்டும்.   கடவுள் நம்மை அவரது சாயலில்  படைத்தது மட்டுமல்லாமல், அவரது உயிருள்ள வார்த்தைகள் வழியாக நல்ல மனிதராகவும் அன்பு செய்து வாழ வழிவகுத்துள்ளார்.   
இன்றைய முதல் வாசகத்தில், சீராக்கின்  ஆசிரியர்  நமது கண்ணியத்தின் மேன்மையை எடுத்துரைத்தார். அதே வேளையில் மனுக்குலம்  மற்ற படைப்புகளிலிருந்து, குறிப்பாக விலங்குகளிடமிருந்து மாறுபட்ட தன்மைகள் கொண்டது என்பதைத் தெளிவுப்படுத்தினார். ஆகவே, ‘மனிதர் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை நான்’  என்று வாழ்தல் வாழ்வாகாது. பொறுப்பற்ற பேச்சும் பொறுப்பற்ற வாழ்வும் நமதாகாது. 
பேதுரு கூறுவதைப்போல்,  “மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்; அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது; புல் உலர்ந்ததுபோம்; பூ வதங்கி விழும்’ (1 பேதுரு 1:24) என்பதால், சிறுவர்களைப் போல் வெள்ளை மனம் கொண்டோராக வாழ நம்மில் உருமாற்றம் தேவை.
பெற்றோரிடம் அன்பை வெளிப்படுத்தும் விதத்தில் எல்லையே இல்லாத ஒரு சிறு குழந்தையைப் போல, நாமும்  கடவுளுடன் நமக்குள்ள உறவை எப்போதும் தூய உறவாகவும், பெருமைக்குரியதாகவும்   முழுமையாகவும் வெளிப்படுத்தத்  தயாராக இருக்க வேண்டும்.


இறைவேண்டல்.

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள் என்ற ஆண்டவரே, குழந்தை உள்ளம் கொண்ட உமது சீடராக, நான் கள்ளம் கபடற்று வாழ என்னை காத்தருள்வீராக. ஆமென்.

  
  
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452