இரக்கமே சீடத்துவத்தின் அடித்தளம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் இரண்டாம் வாரம் – செவ்வாய்
எபிரேயர் 6: 10-20                                                                                  
மாற்கு 2: 23-28

இரக்கமே சீடத்துவத்தின் அடித்தளம்!

 
முதல் வாசகம்.


இன்றைய வாசகங்களைக் கூர்ந்து கவனித்தால், உறவு, நம்பிக்கை மற்றும் செயலில் கவனம் ஆகிய மூன்று விடயங்களை நமக்கு வெளிப்படுத்துகின்றன. முதல் வாசகமானது,  யூத கிறிஸ்தவர்களைக் கடவுளோடு கொண்ட உடன்படிக்கை உறவு மற்றும் அந்த உடன்படிக்கை உறவு வாழ்க்கைக்கு உண்மையாக இருக்குமாறு வலியுறுத்துகிறது.

மனமாறி இயேசுவை ஏற்றுக்கொண்ட  யூதர்கள் அவர்களுடைய நம்பிக்கைக்குரிய செயல்களைக் கடவுள் மறக்கமாட்டார் என்றும்,   கடவுள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அக்கால ஆபிரகாம் போன்ற குல தந்தையர்கள் எவ்வாறு நீண்ட காலம் பொறுமையோடு காத்திருக்க வேண்டியிருந்தது என்பதையும் ஆசிரியர் தொட்டு விவரிக்கிறார். 

அழைக்கப்பட்ட முன்னோர்களைப் போலவே, கிறிஸ்தவர்களும்  நம்பிக்கையோடும், கடவுள் அளித்த வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையோடுத் தொடர்ந்து வாழ அழைக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும், நம்பிக்கையைக் கைவிடாமல் எதிர்நீச்சல் போட வேண்டும் என்று வலியுறுத்தி எழுதுகிறார்.

இயேசு ஆண்டவர் வருவார். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும், உண்மையுடன் செயல்படவேண்டும், செயல் வீரர்களாக இருக்க வேண்டும் என்பதாகும். கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டு எழுதுகிறார். ஏனென்றால் கடவுள் அவர்களுடன் உடன்படிக்கை உறவைக் காப்பாற்றுவார் என்பதை யூதக் கிறிஸ்தவர்களுக்கும் இன்று நமக்கும் உறுதிப்படுத்துகிறார்.

நற்செய்தி.

இயேசுவும் அவருடைய சீடர்களும் ஓய்வுநாளில் ஒரு வழியாக  வெளியில்  பயணம் செய்த நிகழ்வை நற்செய்தி விவரிக்கிறது. பயணத்தின் போது அவர்களுக்குப் பசி. எனவே,  இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து உண்டதைப் பார்த்துவிட்டுப் பரிசேயர் அதை மிகப்பெரிய குற்றமாக இயேசுவிடம் கூறுவதைக் குறித்து மாற்கு விவரிக்கிறார். கடுமையான யூத சட்டத்தின்படி, ஓய்வுநாளில்,  வேலை செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.  இதைப் பார்க்கும் மதத் தலைவர்கள் யூத சட்டத்தை சீடர்கள் அப்பட்டமான அலட்சியமாக கருதுவதைக் கண்டு திகிலடைகிறார்கள்.

இயேசு அவர்களுக்கு தாவீது மன்னரின் வாழ்வில் நடந்த நிகழ்வைக் (1 சாமு 21: 1-6) கூறி, அவர்களின் வாயை அடைக்கின்றார். தாவீதும் அவருடைய படைவீரர்களும் குருக்களுக்கென ஒதுக்கப்பட்ட "புனித அப்பத்தை" சாப்பிட்ட நிகழ்வைச் சுட்டிக்காட்டி இயேசு தம் சீடர்களின் செயல்களைத் தற்காத்து வாதிடுகிறார். (1 சாமு 21: 2-7).  ஓய்வுநாள் மனிதர்களுக்காக உண்டாக்கப்பட்டது, ஓய்வுநாளுக்காக மனிதர்கள் அல்ல என்று இயேசு சொல்லி முடிக்கிறார்.  ஓய்வுநாளின் தலையாய   நோக்கம் மக்களை கடவுளிடம் அழைத்துச் செல்வதே தவிர அவர்களை கடவுளிடமிருந்து பிரிப்பதல்ல என்பதை அவர்கள் சிந்தனையில் பதிய வைக்கிறார்.

சிந்தனைக்கு.


கடவுளின் நீதி எப்பொழுதும் எளியவர், வறியவர் சார்பாக இருக்கும் என்பதை நாம் உணர வேண்டும். பசியோடும் பட்டினியோடும் துன்புறும் மக்களைப் பார்த்து நாம் விலகிச் செல்லக்கூடும். கடவுள் அவ்வாறில்லை. அவர்  என்றும் இரக்கதின் வற்றாத ஊற்று. எனவேதான் இயேசு தன் தந்தையின் இரக்கத்தை  முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டி, ‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக்கா 6:36) என்றார்.

ஆழ்ந்து கவனித்தால், 'பசி'    இன்றைய நற்செய்தியில் நாம் காணும் பிரச்சனைக்கு அடிப்படை காரணமாக உள்ளது.  பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். பசியால் வாடுவோர் உடல் பலத்தையும் மனோபலத்தையும் இழப்பார்கள். 

பசியைப் போக்க நாம் ஒரு வாரத்திற்கு வேண்டிய உணவை ஒரே நாளில் சாப்பிட்டு வயிற்றில் சேமித்துக்கொள்ள முடியாது. அது அன்றாட பணி. இது குறித்து, ஔவையார், 

ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய்-ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது.  

என்று பாடினார். ஆம். இந்த வயிற்றோடு வாழ்வது ஒரு போராட்டம்.

 ‘சீடர்கள் பசியோடு இருக்கின்றார்கள்; அதனால்தான் அவர்கள் கதிர்களைக் கொய்து உண்கின்றார்கள்’ என்று பரிசேயர் பெருந்தன்மையோடும் இரக்கத்தோடும் இருந்திருக்காலம், ஆனால், அவர்கள் சீடர்கள் செய்ததைப் பெரிய குற்றமாக இயேசுவிடம் முறையிட்டு நீதி கேட்டனர். இவர்களது காலத்தில் இச்சட்டத்தால் பயணிகளும், நோயுற்றவர்களும், முதியோரும் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்.   

இயேசுவுக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே,  பசி என்று வந்தவுடன்   தாவீது அரசர் சட்டத்தை மீறி பொது மக்களுக்குத்   தடை செய்யப்பட்ட அர்ப்பண உணவை உண்ண செய்தார் என்பதை நினைவூட்டி,  'மனிதர்களுக்காகச் சட்டமே அன்றி, சட்டத்திற்காக மனிதர்கள் அல்லர்' என்று  சட்டத்தின் உள்ளார்ந்த நோக்கத்தை எடுத்துரைத்தார் இயேசு. இயேசுவைப் பொறுத்தமட்டில் மனிதநேயத்திற்கு அடுத்ததே திருச்சட்டம்.

பவுல் அடிகளின் படிப்பினைபடி, கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நாம் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறோம் (கலா 3:26).  
ஆகவே, சீடர்கள் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்பதை  உணர்த்துகிறார்.  எனவேதான்  ‘எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு; தூய    ஆவியால் விளைவது வாழ்வு’ என்று பவுல் அடிகள் கூறினார் (2 கொரி 3:6). நாம் தூய ஆவியால் இயக்கப்படும் மக்கள் என்பதால், சட்டத்தைவிட இரக்கமே நமக்கு மேலானது. 

ஆகவே, முதல் வாசகத்தில் உள்ளபடி, எக்காரணத்தைக் கொண்டும், இரக்கத்தையும் நம்பிக்கையைக் கைவிடாமல் எதிர்நீச்சல் போட வேண்டும். இரக்கமில்லாத நம்பிக்கையால் நமக்கு ஒருபோதும்  வாழ்வு வந்துவிடாது. மன இறுக்கம் பரிசேயர் குணம், மன இரக்கமோ கிறிஸ்தவர் குணம். 
 


இறைவேண்டல்.


அண்டவராகிய இயேசுவே,  நான் பரிசேயரைப் போன்று இல்லாமல், உமது சீடராக  மற்றவர்மீது இரக்கம் காட்டும் சீடராக வாழ என்னை பயிற்றுவிப்பீராக. ஆமென்.


ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452