பிறர் அன்பு பணியே சீடத்துதவத்தின் செழிப்பு! | ஆர்.கே. சாமி | VeritasTamil
9 சனவரி 2025
திருக்காட்சி விழாவுக்குப் பின் வியாழன்
1 யோவான் 4: 19- 5: 4
லூக்கா 4: 14-22
பிறர் அன்பு பணியே சீடத்துதவத்தின் செழிப்பு!
முதல் வாசகம்
புனித யோவானின் முதல் கடிதம் நாம் கடவுளின் மகன்கள் மற்றும் மகள்கள் என்பதை நினைவூட்டுவதாக உள்ளது. இவ்வாசகத்தை வாசித்துத் தியானிக்கும்போது, ‘ஒவ்வொரு மனிதனும் என் நண்பன், ஒவ்வொரு மனிதனும் என் சகோதரன்’ என்று பாடல் நினைவுக்கு வருகிறது.
யோவான், ஓர், ஆழ்ந்த கருத்துடைய வரிகளைப் பகிர்ந்து கொள்கிறார். ‘கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர். தம் கண் முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ என்று உறுதியாகவும் தெளிவாகவும் வலயுறுத்துகிறார்.
தொடர்ந்து, நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள் மீதும் அன்பு கொள்கிறோம் என்ற மேன்மையான படிப்பினையை கிறிஸ்தவச் சமூகத்தற்கு அளிப்பதோடு, கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும் என்கிறார்.
நற்செய்தி.
இன்றைய யற்செய்தியின் தொடக்கத்தில், இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப்போனார் என்று லூக்கா குறிப்பிடுகிறார். இயேசுவின் சொந்த ஊரானது அவர் தனது குடும்பத்தோடு வளர்ந்து ஆளான நாசரேத்து ஆகும். அவர் அங்கே சென்றதும், தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார் என்றும், எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர் எனறும் லூக்கா மேலும் கூறுகிறார்.
அன்று, தொழுகைக்கூடத்தில் ஏசாயா இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டதாகவும், அவர் அதைப் பிரித்து “ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வை பெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்” என்று சுருளேட்டில் வாசித்தார் என்றும் லூக்கா குறிப்பிடுகிறார்.
இயேசு வாசித்தப் பகுதியானது மெசியாவைப் பற்றியது என்றும், அவரே அந்த மெசியா என்றும் இயேசு தன்னை வெளிப்படுத்துகின்றார். வாசகப் பகுதியில் என்ன வாசித்தாரோ, அவை அவரது பணி என்றும் இயேசு சுட்டிக்காட்டுகிறார்.
சிநுதனைக்கு.
இன்று முதல் வாசகத்தில், திருமுழுக்கு யோவான், இயேசுவின் திருமுழுக்கை முன்வைத்து, அவரை கடவுளின் மகன் என்றும், அதன் வழியாக நாமும் கடவுளின் மக்கள் என்றும், கடவுளுடனான உறவை உணர்த்துகிறார். கடவுளின் மக்கள் அல்லது இறைமக்கள் என்ற முறையில் நாம் நம் தந்தை கடவுளை, இறைமகன் இயேசுவைமயும் மட்டுமல்ல, இவர்கள் இருவரோடும் நெருங்கிய உறவுகொண்டுள்ள அனைவரையும் அன்பு செய்ய வேண்டும் என்று நினைவூட்டப்படுகிறோம்.
‘அடுத்திருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்கிறேன்’ என்று நாளும் பொழுதும் முழங்குபவர் ஒரு பொய்யர் என்று யோவான் குறிப்பட்டுள்ளதை மனதில் கொள்ள வேண்டும். நற்செய்தியில், எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்’ என்று வாசிக்கிறோம். இவ்வாறு இயேசுவைப் பெருமைப்படுத்தி பேசிய கூட்டம்தான், காலப்போக்கில் அவரது நற்செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவரை சொந்த ஊரில் இருந்து விரட்டியடித்ததது. ஆம், நற்செய்தி எல்லாருக்கும் நற்செய்தியாக இருப்பதில்லை. மிருகம் பாதி கடவுள் பாதி என இருவகை உள்ளம் கொண்ட மனிதர்களால் நற்செய்தியை ஏற்று அதன்படி வாழ்வது கடினம்.
ஆகவே, கடவுளை அன்பு செய்வதாகச் சொல்வோர், பணி இடத்திலும், இல்லதிலும், வசிக்கும் இடத்திலும், சமூகத்திலும் தன்னோடு வாழக்கூடிய சகோதர, சகோதரிகளை அன்புசெய்ய வேண்டும். ‘அன்பு செலுத்துபவரே என் சீடர்: நீங்கள் ஒருவர் மற்றவருக்கு செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்’ (யோவான் 13:35) என்பது இயேசு நமக்கு விட்டுச் சென்ற நற்செய்தி. நாம் மிருகம் பாதி, மனிதர் பாதி என்ற கூற்றுக்கு உட்பட்டவர்கள் அல்ல. மாறாக என்றும் எப்போதும் அன்பாக உள்ள கடவுளின் மக்கள். ‘தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடத்திலுமில்லை என்று, தன் உயிரையே கொடுத்த’ (யோவான் 15:13) இயேசுவின் சீடர்கள்.
புரட்சிக்கவி பாரதிதாசன் “தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டேன்போன் சின்னதொரு கடுகு உள்ளம் கொண்டோன்.” என்கிறார். ஆதலால், அன்பு பணி செய்ய உள்ளத்தில் உறுதி ஏற்றால் போதாது அதனை செயல் வடிவமாக்கிட முயல்வோம். இயேசுவின் சீடத்துவம் செழிப்புறும்.
இறைவேண்டல்.
உமது தூய ஆவியினால் நீர் என்னை அருள்பொழிவு செய்துள்ளீர் என்றுணரும் நான், உமது அன்பைப் பகிரும் தூதுவராக இருக்க ஞானம், அறிவு மற்றும் திடம் பெற அருள்புரிவீராக. ஆமென்.
ஆர்.கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452