அன்பை விதைக்க வேண்டிய உள்ளத்தில் அன்பை விதைப்போம்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 7ஆம் வாரம் –வியாழன்
சீராக். 5: 1-8
மாற்கு 9: 41-50


 அன்பை விதைக்க வேண்டிய உள்ளத்தில் அன்பை விதைப்போம்!
 
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகம்  நம்மை அழிக்கக்கூடிய சில தீமைகளுக்கு எதிராக எச்சரிக்கிறது. அன்றாட வாழ்வில் நாம்  தவிர்க்கப்பட வேண்டிய தீமைகளை முன்வைக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.  எல்லா நிலையிலும் செல்வத்தைத் தேடுவது, பெருமையாக வாழ்வது, பிறரின்  தேவையை மறுக்கும் அளவுக்குத் தன்னிறைவு பெற்றதாகக் கருதுவது போன்றவை அவர் குறிப்பிடும் சில தீய எண்ணங்களும் செயல்களுமாகும். 
நிறைவாக,
கடவுள் நீதியுடன்  தீர்ப்பளிக்கும் போது நமது தீய நாட்டங்களும்  செயல்களும் கடவுளுக்குச் சினத்தை உண்டாக்கும் என்கிறார். எனவே, தீயனவற்றில் நாட்டம கொள்வதும், தீயனவற்றைத் துணிந்து செய்வதும் நமது  சொந்த அழிவுக்கு வழிவகுக்கும் என்று அறிவுறுத்துகிறார். 

நற்செய்தி.

ஆண்டவராகிய இயேசு, அவரோடு  இணைந்திருப்போருக்கும் அவரது  பணி செய்பவர்களுக்கும்  நியாயமான வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்து இன்றைய நற்செய்தியைத் வாசகத்தை தொடங்குகிறார்.  ‘கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாகக் கூறுகிறார் 
மேலும்,  அவர், சிறியவர்களுக்கு இடறலாக இருப்போரைக் குறித்து கருத்துரைக்கையில், அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய   தண்டனை குறித்தும்  அறிவுறுத்துகையில், “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது” என்கிறார்.   
 
சிந்தனைக்கு.

இக்காலத்தில், நாளிதழ்களில் நாம் தவறாமல் வாசிக்கும் சமூக வன்முறை குறித்த செய்திகளில் சிறுவர் மீதான வன்முறைகளும் பாலியல் கொடுமைகளும் எண்ணிலடங்கா. இவற்றோடு, சிறுவர் தொழிலாளர் கொடுமையும் சில நாடுகளில்  இன்றும் இருக்கத்தான் செய்கிறது.  
நான் இன்றைய வாசகங்களைக்  குறிப்பாக நற்செய்தியை வாசிக்கையில், இயேசுவின் படிப்பினைகளை நான் இன்னும் எவ்வளவு அறிய வேண்டும் என்பதை உணர்கிறேன். சமூகத்தில் நிலவும் அத்தனை சீர்கேடுகளையும் இயேசு தொட்டுப் பேசியுள்ளார். இன்று குழந்தைகள், சிறுவர்கள் பற்றிய அவரது  படிப்பினை காலத்துக்கும் பொருந்தும். கிறிஸ்தவ நாடுகளிலும் குடும்பங்களிலும் சிறுவர்களுக்கெதிரான கொடுமைகள் நிகழத்தான் செய்கிறது. 
உண்மையில், நம்பிக்கையில் பலவீனமான சிறுவர்களுக்கு  நாம் நல்வழிக் காட்ட  தவறும்போது அவர்களைப் பாவம் செய்ய வழிவகுக்கிறோம்.  ஆழ்மனதில், பாவ வாழ்வு அல்லது நம்பிக்கையின் பலவீனம் ஆகியவற்றுடன் போராடும் பெரும்பாலான சிறுவர்கள் நல்வழி அறியாது தத்தளிக்கின்றனர்.  அவர்கள் கடவுளை நம்புகிறார்கள். ஆனால் அவர்களின் நம்பிக்கை பெரும்பாலும் எளிதில் ஆட்டம் காண்கிறது.  மேலும் அவர்களுக்குத் தேவையான பொறுமை, இரக்கம் மற்றும் படிப்பினை போன்ற நல்லொழுக்கங்களை கற்றுத்தர தவறினால், அவர்கள் கடவுளிடமிருந்து எளிதாக தூர தள்ளப்படுவார்கள்.
இத்தகையோரே சிறுவர்கள். அவர்களின் கடவுள் நம்பிக்கை முதிர்ச்சி அடையா நிலையில் இருப்பதால், பெரியோரின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் இன்றியமையாதது. ஆனால், வேலியே பயிரை மேய்ந்தாற்போல், பெரியோரே சிறுவர்களைத் துன்புறுத்தினால் அது முற்றிலும் தூய ஆவியாருக்கு எதிராகச் செய்த பாவமாகும் (மத் 12:32) ஏனெனில். தூய ஆவியார் அருளிய ஞானம் நமக்கு ஒளியாக இருக்கும் போது, நமது செயலில் நீதியும் இரக்கமும்  வெளிப்பட வேண்டும்.
முழு மனித வளர்ச்சியில் நாம் சிறுவர்களுக்குத் தடைக்கல்லாக இருத்தல் கூடாது. ஏனெனில், அவர்களை ஆதரித்தால், அவர்களுக்கு நல்வழிகாட்டியாக இருந்தால்,  அந்தச் சிறியவர்களில் பலர் ஒரு நாள் நம் அன்பான கடவுளிடம் நமக்காகப் பரிந்து பேசுவார்கள். அதுவே நமக்கான கைமாறாக மாறும்.  
முதல் வாசகத்தில், ‘ஆண்டவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன; அவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே, சிறுவர்கள் மட்டில் நாம் இரக்கமும் அன்பும் வெளிப்படுத்த வேண்டும். இல்லையேல் கடவுளின் சினம் நம்மேல் விழும் என்பதை மறுப்பதற்கில்லை. 

இறைவேண்டல். 

ஆண்டவராகிய இயேசுவே, நான் என்னைச் சுற்றிய சிறுவர்களுக்கு ஒருபோதும் முட்டுக்கட்டையாக இராமல், உமக்கும் உமது அருளுக்கும் பாலமாக எப்போதும் வாழ அருள்புரிய உம்மை மன்றாடுகிறேன். ஆமென்.

  
ஆர். கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452