தன்னலம் துறப்போரே இயேசுவின் சீடர்!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 7ஆம் வாரம் –செவ்வாய்
சீராக். 2: 1-11
மாற்கு 9: 30-37
தன்னலம் துறப்போரே இயேசுவின் சீடர்!
முதல் வாசகம்.
சீராக் நூலில் எடுக்கப்பட்ட இன்றைய வாசகம், இன்றும் பல அறிவுரைகளை முன்வைக்கின்றது. குறிப்பாக இளைஞர்களிடம் இக்கட்டான காலங்களில் கடவுளை நம்புவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகின்றது.
ஆண்டவருக்குப் பணிபுரிய முற்படுபவர்கள்:
• உள்ளத்தில் உண்மையுள்ளவராக,
• துன்ப வேளையில் பதற்றமுடன் செயலாற்றாமல்,
• ஆண்டவரைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு,
• அவரை விட்டு விலகிச் செல்லாமல் இருந்ததால், வாழ்க்கையின் முடிவில் வளமை அடைவார்கள் என்றுரைக்கிறது.
தங்கம் மற்றும் வெள்ளி நெருப்பில் சோதிக்கப்படும் (சுத்திகரிக்கப்படும்) ஒப்புமை முன்வைக்கப்படுகிறது. இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் உருகும் போது, அவை எடையின் காரணமாக அடியில் தங்குவதால், அவற்றில் கலந்திருந்த, அல்லது ஒட்டிக்கொண்டிருந்த குப்பைகளை மேலே மிதக்கும். அவை எளிதாக நீக்கப்படும்.
அவ்வாறே, நமது வாழ்வும் என்றுரைக்கிறார் நூலின் ஆசிரியர். என்ன நேர்ந்தாலும் ஏற்றுக்கொள்; இழிவு வரும்போது பொறுமையாய் இரு என்று அறிவுறுத்துவதோடு, என்றும் வழி தவறக்கூடாது என்றும் அப்படி வழிதவறுவோர் வீழ்ச்சி அடைவர் என்றும் அறிவுறுத்துகிறார் ஆசிரியர். நிறைவாக, ஆண்டவருக்கு அஞ்சுவோருக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது என்றும் தேற்றுகிறார்.
நற்செய்தி.
இதற்கு முன்னதாக மாற்கு நற்செய்தியின் ஒன்பதாம் அதிகாரத்தில், இயேசு தனது தெய்வீக தன்மையை மலைமீது தோற்றமாற்றத்தில் வெளிப்படுத்தினார். யாக்கோபு, யோவான் மற்றும் பேதுரு ஆகியோருக்கு மலைமேல், எதிர்கால மாட்சியை காண அனுமதித்த பிறகு, இயேசு அவரது மாட்சிக்கான வழியைப் பற்றி பேசுகிறார் - சேவை, அன்பு, நிராகரிக்கப்படுதல், துன்பம் மற்றும் இறுதியில் மற்றவர்களின் கைகளில் மரணத்தை அனுபவிப்பதன் மூலம் அவர் மாட்சியுறுவார் என்று குறிப்பிடுகிறார். ஆனால். சீடர்கள் இயேசுவின் அவரது பாடுகள், மரணம் பற்றிய வெளிப்பட்டை புரிந்துகொள்ளவில்லை. அவர்களோ, அவர்களில் யார் பெரியவர் என்று வாதிடத் தொடங்கினர்.
இயேசு அவர்களின் மனப்பான்மையைக் கண்டித்து, அவர்கள் முதலாவதாக இருக்க விரும்பினால், மற்றவர்களுக்குச் சேவை செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று சவால் விடுகிறார்.
சிந்தனைக்கு.
இன்றைய நற்செய்தியில் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்று வாதிடத்தை ஆண்டவர் அறிந்திருந்தார். பொது நிகழ்வுகளில் நம்மை முக்கியப்படுத்திக் கொண்டால், நமக்கு அவர் கூறும் அறிவுரை, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்பதாகும்.
நாம் செய்ய வேண்டியதெல்லாம், கடவுளின் அன்பில் கவனம் செலுத்துவதும், அந்த அன்பை நாம் அனுபவித்து, பிறருக்குச் சேவை செய்வதன் மூலம் பலனை அடைவதாகும். பிறர் அன்பு சேவையின்றி கடவுளை நாமாக அன்பு செய்ய முற்படுவது மடமை. சீடர்களாகிய நாம் கடவுளுடனான நமது உறவைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்கு தனிப்பட்ட முறையில் நேரடியாகவும் தெளிவாகவும் போதித்த மூன்று தருணங்களை நமக்கு முன்வைக்கிறது: முதலில், அவர்கள் பயணம் செய்யும் போது; இரண்டாவது, அவர்கள் கப்பர்நகூமுக்கு வந்து ஒரு வீட்டிற்குள் நுழைந்தபோது; மூன்றாவது, இயேசு ஒரு குழந்தையை அழைத்தபோது.
இயேசு சீடர்களுக்குக் கற்பிப்பதில் இயேசு தனியாக நேரத்தைச் செலவிட்டார் என்ற எளிய உண்மையைப் பற்றி முதலில் சிந்திப்பதும் உதவியாக இருக்கும். பல வழிகளில், நம்முடைய ஆண்டவர் நமக்கும் அவ்வாறே செய்கிறார். இயேசு நம்மைத் தம்முடன் பல்வேறு வகையான தனிமைகளுக்குத் தொடர்ந்து அழைக்கிறார், இதனால் அவர் நமக்குக் கற்பிக்க விரும்பும் அனைத்தையும் நாம் கேட்க முடியும்.
எனவேதான், அவர் சீடர்களிடம் “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். (மாற்கு 6:31) ஆண்டவரோடு நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வது இன்றியமையாதது.
நாம்தான் அவரது அழைப்பைத் தட்டிக்கழிக்கிறோம். பல இடையூறுகள், தடைகள், இன்னல்கள், அலுவல்கள் நமக்குத தடையாக உள்ளன. சில வேளைகளில் நம்மில் கிடக்கும் ‘செருக்கு’ நமக்குத் தடையாக உள்ளது. நம்மில் சிலர் பங்ககில் எந்த பயிற்சி நடத்தப்பட்டாலும் கலந்துகொள்ளமாட்டோம். ஏனெனில் பிறரோடு சம்மாக அமர மனம் இடம் கொடுப்பதில்லை. ‘என்குத்தான் எல்லாம் தெரியுமே’ என்ற தற்பெறுமைக்கு ஆளாகிறோம். நிறை குடம் தளும்பாது.
ஆண்டவருக்கு அஞ்சுவோருக்குக் கைம்மாறு கிடைக்காமற் போகாது என்று சீராக் நூலின் ஆசிரியர் கூறியதைக் கேட்டோம். ‘நான், எனது குடும்பம், எனது சொத்து, எனது நேரம்' என்ற மனப்போக்கில் காலத்தைக் கழிக்கிறோம். ஆண்டவரின் அழைப்பை ஏற்று, பிறருக்காகவும் நம்முடைய வாழ்வினை அர்ப்பணிக்க வேண்டும். அதுவே உண்மையான சீடத்துவம் என்பதை இயேசு இன்று வலியுறுத்துகிறார். நமது சேவையால் மக்கள் மனதில் முதலிடம் பிடிக்க முற்படுவதே சிறந்த சீடத்துமாகும். ஊர் பார்த்த உண்மைகள்தான் நமக்காக வாழும்.
இக்கருத்தினையொட்டி மேலும் சிந்திக்கையில் திருவளுளவரின் இக்குறள் நினைவுக்கு வருகிறது.
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. (குறள் 231)
இக்குறளுக்குப் பொருள் கூறும் சாலமன் பாப்பையா அவர்கள், ‘ஏழைகளுக்குக் கொடுப்பது; அதனால் புகழ் பெருக வாழ்வது; இப்புகழ் அன்றி மனிதர்க்குப் பயன் வேறு ஒன்றும் இல்லை’ என்கிறார்.
இறைவேண்டல்.
ஆண்டவராகிய இயேசுவே, நீர் எனக்குக் கற்றுத்தர இன்னும் நிறைய இருக்கிறது என்பதை நான்அறிவேன். நான் உம்மைப் பின்தொடரவும், என் முழு வாழ்க்கையையும் உமக்கு அர்ப்பணிக்கவும் அருள்புரவீராக. ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
