மணியும் பவளமும் ஞானத்திற்கு இணையில்லை!| ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 7ஆம் வாரம் –திங்கள் 
சீராக்.  1: 1-10
மாற்கு  9: 14-29


மணியும் பவளமும் ஞானத்திற்கு இணையில்லை!
 
 முதல் வாசகம்.

இன்று தொடங்கி  முதல் வாசகமாக சீராக்கின் ஞானநூலில் இருந்து சில பகுதிகளை  வாசிக்கின்றோம். சீராக்கின் ஞான நூல், கிரேக்கர்கள்  யூதேயாவை ஆண்ட காலத்தில் கிரேக்க மொழி, பண்பாடு, வழிபாட்டுமுறை முதலியன யூதர்கள்மீது திணித்தனர். அப்போது, ஏசு என்ற யூதர் ஏசு அல்லது ‘பென் சீரா’என்பவர் , யூதர்களை யூத மறையில் நிலைத்திருக்கச் செய்ய இந்நூலை (கிரேக்க மொழியில்) எழுதினார். உண்மையான ஞானம் இஸ்ரயேலில்தான் உள்ளது என்று வலியுறுத்தினார். இந்நூல் பிரிந்த சகோதரர்கள் விவிலியத்தில் இணைக்கப்படவில்லை. 
இன்றைய வாசகம், "கடவுளின்  வார்த்தை ஞானத்தின் ஊற்று" என்று  கூறுகிறது.  கடவுளைத் தவிர வேறு யாரும் ஞானத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.  ஞானம் எப்போதும் கடவுளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.   மனித அறிவைக்கொண்டு ஞானத்தை அளவிடவோ முழுமையாக அறிந்துணரவோ இயலாது.
ஆண்டவர் ஒருவரே ஞானியாவார்; தம் அரியணையில் வீற்றிருக்கும் அவர் பெரிதும் அச்சத்திற்கு உரியவர் என்றும், நிறைவாக, அவர் மீது  அன்புகூர்வோருக்கு ஞானத்தை அவர் வாரி வழங்கியுள்ளார் என்றும் அறிவுறுத்துகிறார் சீராக்கின் ஞானநூல் ஆசிரியர் ‘பென் சீரா’. 

நற்செய்தி.

நற்செய்தி வாசகத்தில் இயேசு தீய ஆவி பிடித்தவரிடமிருந்து அதை ஓட்டுகிறார். மலையில் தோற்றமாற்ற நிகழ்வைத் தொடந்து  இயேசு பேதுரு,  யாக்கோபு, மற்றும் யோவான் ஆகிய மூவருடன் கீழே இறங்கி வருகிறார்.  இதற்கிடையில் கீழே காத்திருந்த இதர  திருத்தூதர்களிடம் தந்தை ஒருவர் பேய் பிடித்த தன் மகனை  கொண்டு வருகிறார். திருத்தூதர்களால் பேயை ஓட்ட இயலவில்லை. அப்போது, திரும்பி வந்த   இயேசுவிடம் அந்த தந்தை தன் மகனைக் குணப்படுத்துமாறு   வேண்டுகிறார். 
அவர் மிகவும் பணிந்து, கடைசியாக வேறு கதியற்றவராக  'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்கிறார் தந்தை. இயேசுவோ, ‘நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்கிறார். 'நான் நம்புகிறேன்’ என்று பதிலளித்தத் தந்தையின் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து தீய ஆவியை விரட்டினார்.
நிறைவாக, 'எங்களால் பேயை ஓட்ட ஏன் இயலவில்லை?' என்னும் திருத்தூதர்களின் கேள்விக்கு, 'இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது' என்றார்.  

சிந்தனைக்கு.

நற்செய்தியில், அந்த தந்தை, 'உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவுகொண்டு எங்களுக்கு உதவி செய்யும்' என்கிறார் இயேசுவிடம். ஏனெனில், பல தரப்பினர்  அவரது  மகனைக் குணப்படுத்த முயன்றும் தோற்றுப் போயினர். இயேசுவின் திருத்தூதர்களாலும் இயலவில்லை. எனவே, நம்பிக்கை இழந்த நிலையில் தந்தை இயேசுவை நாடுகிறார். சில வாரங்களுக்கு முன்னர், நாய்க்கு ஈடாக விவரிக்கப்பட்ட ஒரு கானானியத் தாய் தன் மகளுக்காக இயேசுவிடம் மன்றாடி வெற்றிப்பெற்றதைப் பார்த்தோம்.   இங்கே ஒரு தந்தை தன் மகனுக்காக மன்றாடுகிறார். 
ஆனாலும், இயேசு பேயை ஓட்டியதும் அந்த மகன் இறந்தவன் போலானான். கூட்டத்தார் அவன் இறந்துவிட்டான் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். பேய் பிடித்த மகன் பேய்பிடித்தவனாகவே இருந்திருக்கலாமே, இறந்துவிட்டானே என்று  தந்தையும் நினைத்திருக்கலாம்.  நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்' என்று, சிறுவனை தூக்கிவிடுகிறார் இயேசு.
இயேசு பரிவிரக்கம் உள்ளவர் என்பதை முழுமையாக ஏற்று அவரோடு ஒன்றித்திருக்க ஞானம் இன்றியமையாதது.  தூய ஆவியாரின் ஏழு கொடைகளில் (வரங்களில்)  ஞானமும் ஒன்று.  தூய ஆவியார் நம்மில் செயலாற்றும்போது நாம் ஞானத்தில் வளர்ச்சி அடைகிறோம். 
நாம் தாம் எப்போதும் இந்த தீமைகளில் மீண்டும் மீண்டும் விழுந்துவிடாதபடி   எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இதற்கு ஞானம் வேண்டும்.  ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது (நீதி 3:15) எனப்படுகிறது.
யோபு 28:28-ல்  “ஆண்டவருக்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம். தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு”. மேலும் நீதிமொழிகள் 5:31-ல் “கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும் என்படுகிறது”.  நம் அனைவருக்கும் அறிவு இருக்கின்றது. ஆனால் அந்த அறிவை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லித் தரும் ஞானம்தான் மிகக் குறைவு. அந்த ஞானத்தை நாளுக்கு நாள் பெருக்கிக்கொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.  
பொதுவாக, அறிவு இருந்தால் பணம், பட்டம், புகழ், பதவி ஆகியவை வரும். ஆனால் கிடைத்த பணத்தையும், புகழையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால் ஞானம் வேண்டும். அது கடவுளின் கொடை, மேலிருந்து அருளப்படுவது.   
சீடர்கள் பேய்களை ஓட்டியதாக இதற்கு முன்பு (மாற் 6: 7,13) இல் வாசித்தோம். ஆனால், இன்றைய நற்செய்தியில் அவர்களின் தோல்வி வெளிப்படுகிறது.  இதற்கு முக்கியமான காரணம், அவர்கள் இறைவனுடைய வல்லமையில் நம்பிக்கை வைக்காமல், தங்களுடைய வல்லமையில் நம்பிக்கை வைத்ததுதான். நமது நம்பிக்கை, வல்லமை, ஞானம் இவற்றின் மையம் கடவுளாக இருந்தால்  மட்டுமே வெற்றி நமதாகும். 


இறைவேண்டல்.

ஞானத்தின் ஊற்றாகிய ஆண்டவரே, உமது அருட்கொடையாக நான் பெற்ற ஞானத்தால், உமது சீடர்களுள் நானும் ஒரு சிறந்த சீடராக விளங்கிட துணைபுரிவீராக. ஆமென்.
  
 
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452