வாழும் மெசியாவில் வாழ்வோம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

20 பிப்ரவரி 2025                                                                                                                  
பொதுக்காலம் 6ஆம் வாரம் –வியாழன்
தொ.நூ.  9: 1-13
மாற்கு 8: 27-33


வாழும் மெசியாவில் வாழ்வோம்!
 

முதல் வாசகம்.

நோவா வெள்ளக் பெருக்குப் பற்றிய செய்தியின்  முடிவுக்கு வந்துவிட்டோம்.  இந்த வள்ளப்பெருக்கின் நிமித்தம் , கடவுளுக்கும் மனுக்குலத்திற்குமிடையே ஒரு புதிய உடன்படிக்கை உறவு ஏற்படுத்தப்படுகிறது. இப்பகுதியை குருக்கள் மரபினர் தொகுத்துள்ளனர். 
இங்கு வெள்ளம் ஒரு புதிய தொடக்கமாகச் சித்தரக்கப்படுகிறது.  மனுதகுலத்திற்கும் பூமியிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு புதுப் பிறப்பு" என கூறலாம்.  ஆகவே, திருமுழுக்கிற்கு முன் அடையாளமாகவும் இந்த வெள்ளப்பெருக்கு இருந்துள்ளதை அறிகிறோம். 
கடவுள் நோவாவிற்கும் அவர் புதல்வருக்கும் ஆசி வழங்கிக் கூறியது: “பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்’ என்கிறார். கடவுள் மீண்டும் மனிதர்களுடன் ஓர் உடன்படிக்கையைச்  செய்கிறார்.  ஆபிரகமுட் செய்த உடன்படிக்கையின் தொடர்ச்சியாகவும் இது அமைகிறது.   நோவாவுக்கும்  ஆதாமைப் போலவே, மற்ற படைப்புகளின் மேல் அக்க்றை காட்டும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.  
வெள்ளத்திற்கு முன் வழக்கமாக இருந்த சைவ உணவிலிருந்து , வெள்ளத்திற்குப் பிறகு மாமிச உணவு முறைக்கு மாறுவதையும் இப்பகுதி உணர்த்துகிறது.   (காண்க தொ.நூ. 9:3) உடன்படிக்கையின் அடையாளமாகத் தோன்றிய  வானவில், கடவுள்  உலகம் முழுவதையும் வெள்ளத்தால் அழிக்கப்போவதில்லை என்ற   வாக்குறுதியை மனிதர்களுக்கு  நினைவுபடுத்துகிறது. 

நற்செய்தி.

இன்றைய நற்செய்தி இரண்டு தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது.  முதலில் இயேசு தம் சீடர்களிடம் மக்கள் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று கேட்கிறார்.  மற்றவர்கள் அவரைப் பற்றிக் கேட்டதையே அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள், அதாவது, அவர் ஓர்  இறைவாக்கனர், அல்லது எலியா அல்லது திருமுழுக்கு யோவான் என பதில்களை முன்வைக்கிறார்கள்.
இயேசு தொடர்ந்து இரண்டாவது கேள்வியாக,   "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?"  என்றார். பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா” என்று உறுதிபட உரைத்தார்.   
      இன்றைய நற்செய்தி வாசிப்பின் இரண்டாவது பகுதி, இயேசு  மேசியாவாக இருப்பதன் பொருளை விளக்குகிறார்: “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்” என்று இயேசு முன்னுரைக்கிறார். இதைக் கேட்ட பேதுருவால் இயேசு இவ்வாறு துன்புற்று உறப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதைவிட  எளிதான வழியை எடுக்கும்படி இயேசுவை பேதுரு தூண்டியதில் இயேசு பேதுருவைக் கணிந்துகொண்டு, “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்றார். 

சிந்தனைக்கு.

தாம் அழைத்துக்கொண்ட  12 திருத்தூதர்களுக்கு இயேசு அவர் யார் என்பதைப் படிப்படியாக வெளிப்படுத்துகிறார். இந்த நற்செய்தி எனக்கு எப்போதுமே பிடிக்கும்.        இயேசுவே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மேசியா (அருள்பொழிவு செய்யப்பட்டவர்) ) என்பதை தமது கேள்வியின் வழி உணர வைக்கிறார்.  மத்தேயு 16:15ல், ‘நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று பேதுரு உரைத்தார். அக்காலத்தில் சவுல், தாவீது, சாலமோன் போன்ற அரசர்களும் அருள்பொழிவு செய்யப்பட்டவர்கள்தான்.  ஆனால் இயேசுவோ  ‘ மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று இங்கே வேறுபடுத்தப்பட்டுக் காட்டப்படுகிறார். 
மெசியாவாக இருப்பதன் ஒரு பகுதி துன்பப்பட்டு இறக்க வேண்டும் என்று இயேசு விளக்கத் தொடங்கும் போது, மெசியாவைப் பற்றிய பேதுருவின் சிந்தனைக்கு  இயேசுவின் விளக்கம் ஏற்கப்படவில்லை. இயேசுவுக்குப் பாடுகளும் துன்பமும் வேண்டாம் என்கிறார். 
சில சமயங்களில் நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை நமக்குக் கற்றுத் தரும் இயேசுவை ஒரு சாதாரண மனிதனாகவே நாம் பார்த்துப் பழகிவிட்டோம்.   இயேசுவே   நம்முடைய பாவங்களுக்காகக் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி என்பதை மறந்துவிடுகிறோம். இன்று நம்மைப் பார்த்து இயேசு  "நான் யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்? என்று கேட்டால், நமது பதில் என்னவாக இருக்கும்?
இயேசு யார்  என்று உலகிற்கு அடையாளம் காட்ட வேண்டியது நமது கடமை. அதற்கு, இயேசுவில் நாம் நாளுக்கு நாள் முதிர்ச்சி அடைய வேண்டும். இன்றைய நற்செய்தி நமக்கு விடுக்கும் சவால் என்னவென்றால், நாம் இயேசுவை மெசியாவாக ஏற்றுக் கொள்ளத் தயாரா?  என்பதுதான். அவரை மெசியா என்று எற்றுக்கொண்ட பேதுருவும் இதர திருத்தூதர்களும் அவருக்காக பாடுகள் பட்டு உயிர்விட்டனர். அவ்வாறு துன்பற்று இறக்க நம்மில் எத்தனை பேர் என்பதே கேள்வி. 
நமது மெசியாவாகிய (மீட்பராகிய) இயேசு, எதிரிகளோடு போரிட்டு விடுவிக்கும் வீரர் அல்ல. ஆறாக, பாவத்திலிருந்து மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தரும் மெசியா.  அவரை அண்டுவோருக்கு விடுதலை உண்டு. நமக்கு நிகழும் துன்பங்களும் துயரங்களும் நம்மை புதுப்படைப்பாக மாற்றும் வெள்ளப்பெருக்காக ஏற்றுக்கொள்ள வேண்டும். வெள்ளப்பெருக்கு நிரந்தமானது அல்ல. நாம் மீட்கப்படுவோம் என்ற நம்பிக்கையே நம்மில் நிரந்தரம்.

இறைவேண்டல்.

அன்பு இயேசுவே!  நீர் இந்த உலகிற்கு கொண்டுவந்த அக விடுதலையை என் வாழ்வில் அனுபவிக்க அருளைத் தாரும்.  ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452