புதைகுழியில் தள்ளும் பொறாமையை விட்டொழிப்போம்! | ஆர்.கே. சாமி | VeritasTamil

பொதுக்காலம் 6ஆம் வாரம் – திங்கள்
தொ.நூ.  4: 1-15, 25
மாற்கு   8: 11-13


புதைகுழியில் தள்ளும் பொறாமையை விட்டொழிப்போம்!

  
முதல் வாசகம்.

இன்றைய முதல் வாசகத்தில்,   நமது   முன்னோர்களின் கதை தொடர்கிறது. கீழ்ப்படியாமையின் பாவத்திலிருந்து, மனிதனின் பாவம் பெரிதாகி சகோதரனைக் கொலை செய்வது  வரை மோசமடைகிறது.  ஒரு சமூகம் மற்றொரு சமூகத்தை எதிர்க்கிறது.  இளைய சகோதரன்  ஆபேல் மந்தையின் சிறந்ததைக் காணிக்கையாக செலுத்தியதை ஏற்றதுபோல், தன் தானியப் பலியைக் கடவுள் விரும்பி ஏற்காததால்  காயின் பொறாமைக்கு ஆளானான்.        
 அவனது மனப்பான்மையை/பலியை சரிசெய்வதற்குப் பதிலாக, காயினும் அவனுடைய பொறாமை,  அவனை கோபத்திற்கும் இறுதியில் கொலைக்கும் தூண்டியது.    நிலத்தின் விளைச்சலைப் பயிரிடுவதையும் அறுவடை செய்வதையும் கடினமாக்கியதன் மூலம் காயின் தன் சகோதரனைக் கொன்றதற்காக கடவுள் தண்டிக்கிறார்.  கடவுள் காயினைத் தண்டித்திருந்தாலும், அவர்  இரக்கத்தைக் காட்டுகிறார். துன்புறுத்தலில் இருந்து காயினைப் பாதுகாக்க உறுதி கொள்கிறார்.  காயினுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு அல்லது கொலை செய்பவர்களுக்கு மோசமான தண்டனையை உறுதியளிக்கிறார்.  
 ஆண்டவர் காயினிடம், “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆளவேண்டும்” என்றார்.

நற்செய்தி.

நற்செய்தியில், பரிசேயர்கள் இயேசுவிடம் வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். இயேசு அவருடைய வல்லமையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள் . அவர்கள் அவரை நம்புவதற்காக அல்ல, மாறாக அவர்கள் அவரைச் சோதித்து, அவரை ஒருவித வலையில் சிக்க வைக்க விரும்பினர்.  இயேசு அவர்களின் வேண்டுதலுக்கு இனங்கவில்லை. மாறாக, இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.   

சிந்தனைக்கு.

இன்றைய வாசகங்களில் காணப்படும் சில கதாபாத்திரங்களிலும் அவர்களின் இயலபுகளிலும் நாம் நம்மைப் பார்க்க வேண்டும்.  சில நேரங்களில் நாம் காயினைப் போல இருக்கிறோம்.   ஒப்புக்காக, கடமைக்காக சில சடங்குகளை நிறைவேற்றுகிறோம்.   கடவுளின் முன்னலையிலும் வேடம் போடுகிறோம்.  பலனை எதிர்ப்பார்த்துக் கடவுளுக்குப் பணி செய்கிறோம். கடவுள் நமக்காக என்ன செய்வார் என்பது நமது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.  
படைத்தான்  படைப்பை   மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க. 
எனும் கூற்றுக்கு ஏற்ப கடவுளோடான நமது உறவிலும் செயல்பாட்டிலும் உண்மையும் நேர்மையும் இருத்தல் இன்றியமையாதது. கடவளை ஏமாற்ற நினைப்பது மடமை.
முதல் வாசகத்தைக் கூர்ந்து வாசித்தால், சூதும் வாதும் வேதனை செய்யும் என்ற பழமொழி உண்மை என்பது புலப்படும். கடவுள் காயினிடம்,"உன் தம்பி எங்கே?", என்று வினவியபோது, "என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?" என பதில் தந்தான் காயின். இங்கே உடன் பிறந்த உறவையும் அறியாதவனாக மாறுகிறான் அண்ணன். மேலும். "என் தம்பிக்கு நான் காவலாளியா என்ன?" என்று தன் கடமையையும் பொறுப்பையும் தட்டிக் கழிக்கிறான். உறவிலிருந்து பிரிவது பெரும் பாவம். ‘இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க பிரிக்க முடியாதடா’ என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் ஆழ்ந்த உண்மை உண்டு. 
“நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக்கொண்டிருக்கிறது’ என்று கடவுள் காயினக் கேட்டார். இரத்தத்நிற்கு உயிர் உள்ளது. அதன் குரல் கடவுளை எட்டும். ஆகவே. அடுத்திருப்பவபவரை கொலை செய்துவிட்டு கடவுளின் பார்வையிலிருந்துத் தப்பிக்க இயலாது.  
விரோத மனப்பான்மை நமக்கே தீங்கு விளைவிக்கும். எனவேதான், ‘சகோதரனிடம் ஏதாவது கசப்பு இருக்குமானால் பலிபீடத்திற்கு முன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் சகோதரனோடு ஒப்புரவான பின் காணிக்கையைச் செலுத்த வேண்டுமென்று’ மத்தேயு 5 : 23, 24ல் பார்க்கிறோம். காயினின் காணிக்கையைக் கடவுள்  அங்கீகரக்கவில்லை. எனவே காயின், கடவுள் மேல்தான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் ஆபேலின் மேல் எரிச்சல் பட்டான். நாமும் இப்படிதான் ‘கோபக்காரனுக்குப் புத்தி மட்டு’ என்பதற்கொப்ப எடுத்த எடுப்பில் நல்லவர் மேலும் கோபத்தை வெளிப்படுத்தி பழிவாங்க முற்படுகிறோம்.
நற்செய்தயில், பரிசேயரின் விருப்பத்தை இயேசு பொருட்படுத்தவில்லை. பரிசேயரின் தீய எண்ணத்திற்கு இயேசு உடன்படவில்லை. ஏனெனில்,  இறைவாக்கினர்களும் திருமுழுக்கு யோவானும் முன்னறிவித்த அடையாளமான இயேசு அவர்கள் முன்நிற்க, பரிசேயேர்  வேறு அடையாளத்தைக் கேட்கின்றனர். உண்மையில் இயேசுவே வானில் இருந்து இறங்கிய  மிகப்பெரிய அடையாளம். ஆனால், பரிசேயர்கள் அவரை அடையாளமாக அங்கீகரிப்பதற்குப் பதிலாக, விண்ணகத்திலிருந்து மற்றொரு அடையாளத்தைக் கோருகிறார்கள். உண்மையான நம்பிக்கைக்கு வெளிப்புற அடையாளங்கள் தேவையில்லை -  நாமே கிறிஸ்துவின் உண்மை அடையாளம். இது நமது பெயரால் அல்ல, மாறாக வாழ்வால்.

இறைவேண்டல்.

ஆண்டவராகிய இயேசுவே, உமது தூய ஆவியாரின்  வழிகாட்டுதலின் மூலம், நான் வாழும் இடத்தில் உமது  அடையாளமாக நான் விளங்க என்னை ஆசீர்வதிப்பீராக. ஆமென்.

ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452