நன்மையைப் பாராட்டாவிடினும் புறம் பேசாதே! | ஆர்.கே. சாமி | VeritasTamil
![](/sites/default/files/styles/max_width_770px/public/2025-02/11.02.2025.jpg?itok=b3YpbrnD)
11 பிப்ரவரி 2025
பொதுக்காலம் 5ஆம் வாரம் –செவ்வாய்
தொ.நூ. 1: 20- 2: 4a
மாற்கு 7: 1-13
நன்மையைப் பாராட்டாவிடினும் புறம் பேசாதே!
முதல் வாசகம்.
இன்றைய முதல் வாசகம் நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக உள்ளது. கடவுள் அடுத்து வரும் ஐந்தாம், ஆறாம் நாள்களில் படைத்தவற்றையும் நிறைவாக ஏழாம் நாள் அவர் என்ன செய்தார் என்பதையும் இன்று வாசிக்கிறோம்.
ஐந்தாம் நாளில் கடவுள் பறவைகளையும் கடல்வாழ் உயிரினங்களையும் படைத்தார். தொடர்ந்து, படைப்பின் உச்சக்கட்டமாக கடவுள் ஆறாவது நாளை நில விலங்குகளின் படைப்போடு தொடங்குகிறார். கடவுளின் படைப்பு ஆற்றலின் உயர்ந்த நிலை இந்த ஆறாம் நாளில் நிகழ்கிறது. கடவுளின் சாயலிலும் உருவிலும் மனிதரைப் படைக்கிறார். முந்தைய ஐந்து நாள்களில், கடவுள் படைத்தவற்றைப் பார்த்து, ‘இவை மிகவும் நன்றாய் இருந்தன’ என்று கூறி அன்றைய வேலையை முடிக்கிறார். ஆறாவது நாளில், ஆணும் பெண்ணும் படைக்கப்பட்ட பிறகு, கடவுள் படைப்பை "மிகவும் சிறப்பாக" காண்கிறார். அதனை புனிதப்படுத்தி, ஓய்ந்திருக்கலானார் என்று இந்த குருக்கள் மரபினர் விவரிக்கின்றனர்.
நற்செய்தி.
நற்செய்தியில், பரிசேயர் மற்றும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர்களோடு இயேசுவின் விவாதத்தைப் பற்றி வாசிக்கிறோம். அன்று இயேசுவின் சீடர்கள் தங்கள் கைகளைச் சுத்தம் செய்யாமல் உண்டதை இந்த பரிசேயரும் மறைநூல் அறிஞரும் கண்டார்கள். இது இயேசுவைச் சீண்டிப் பார்க்க ஏதுவாக இருந்தது. ஏனெனில் மூதாதையர் மரபுபடி கைகளை முறைப்படி கழுவாமல் உண்ணக்கூடாது. இயேசுவில் குற்றம் பார்க்கக் வாய்ப்புத் தேடியவர்கள், உடனே, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
அவர்கள் மறைநூல் அறிஞர்கள் என்பதால், முதலில், வெளிவேடக்காரரே என்ற முன்னுரையோடு, அவர்களின் போக்கை, ‘‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று மறைநூலில் எசாயா இறைவாக்கினரின் வாக்கைக் கொண்டு, பரிசேயரின், மறைநூல் அறிஞரின் போக்கை அவர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்.
இவர்கள் மோசே கட்டளைப்படி தாய் தந்தையரைப் பேணிக் காக்காமல், புறக்கணிப்பதைச் சுட்டிக்காட்டி, ‘நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களின் வாயடைத்தார். இவ்வாறு, சீடரில் குற்றம் பார்த்த அவர்களை நாணச் செய்தார்.
சிந்தனைக்கு.
இன்றைய இரு வாசகங்களையொட்டி சிந்திக்கையில், கடவுள் எல்லாவற்றையும் படைத்தார். கடவுள் விருப்பமில்லாமல் எதையும் படைக்கப்டவில்லை என்பது தெளிவாகிறது. அவரே படைப்பின் நாயகன். இந்த படைப்பில், கடவுளுக்கு அடுத்த நிலை மனிதர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆண்களும் பெண்களும் படைப்பினை பராமரிப்பவர்களாக நியமனம் பெறுகிறார்கள். ஆனால், காலப்போக்கில், இவர்கள் சுயமாகவே சில சட்டத்திட்டங்களைக் கடவுளின் பெயரால் ஏற்படுத்தினார்கள். இதில் யூத பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் வல்லவர்கள். பின்னர் இவ்வாறு மரபு வழி வந்த சட்டத்திட்டங்களாக இவை கடைப்பிடிக்கப்பட்டன.
இந்த மரபு வழி வந்த விதிமுறைகளால் ஏழை ஏளியோர் வதைக்கப்பட்டனர். இதுவே, இன்றைய நற்செய்தியின் மையமாக உள்ளது. இன்றும் நம் மத்தியில் இது போன்ற பழமை விரும்பிகள் இருக்கிறார்கள். புனித பவுல் இதுபற்றி எடுத்துரைக்கையில், ‘திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும்’ (கலா 2:16) என்றார். மனிதனுக்கு புறத் தூய்மையைவிட அகத்தூய்மையே இன்றியமையாதது. நமது சிந்தனை, சொல். செயலில் தூய்மை வேண்டும்.
அன்று, எருசலேம் ஆலயத்தில் மேற்கொள்ளப்பட்ட நெறிகெட்ட வாழ்வைப் பார்த்து குமுறிய ஆண்டவர், இன்று நமது உள்ளம் எனும் ஆலயத்தையும் உற்று நோக்குகிறார். மனிதநேயத்தை அன்பு செய்வோம். வெளிவேடம் கொள்வதால் நமக்கு வாழ்வு வந்துவிடாது. வெளிவேடம் கொள்வோரின் உள்ளம் கள்வரின் குகையாக மாறிவிடும்.
‘நம் உருவிலும், நம் சாயலிலும் மானிடரை உண்டாக்குவோம்’ என்று கடவுள் நம்மைப் படத்தார். இவ்வுலகில் பிறந்து இருக்கும் மனிதர் ஒவ்வொருவரும் கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள். எனவே கடவுளின் எண்ணங்கள் நமது எண்ணங்களாக இருத்தல் அவசியமாகிறது. கடவுளின் இரக்கம் நமது இரக்கமாகிறது வாழ்ந்து காட்டுவோம்.
இறைவேண்டல்.
இரக்கத்தின் ஆண்டவரே, உமது தூய ஆவியாரின் வல்லமை மற்றும் வழிகாட்டுதலின் வழியாக, உமது படைப்பாக நான் மேலும் சிறந்து விளங்க என்னை காத்தருள்வீராக. ஆமென்
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
![Livesteam thumbnail](/sites/default/files/inline-images/live-stream-thumb.jpg)