இறையன்பும் பிறர் அன்பும் இரு கண்களெனக் கொள்வோம்! | ஆர்கே. சாமி | Veritas

22 ஆகஸ்டு 2025
பொதுக்காலம் 20ஆம் வாரம் – வெள்ளி
ரூத்து 1: 1, 3-6, 14b-16, 22
மத்தேயு 22: 34-40
இறையன்பும் பிறர் அன்பும் இரு கண்களெனக் கொள்வோம்!
முதல் வாசகம்.
முதல் வாசகம், தாவீது அரசரின் மூதாதையர்களில் ஒருவரான ரூத் என்ற யூதரல்லாதவர் கொண்ட அன்பு பிணைப்பை அறிகிறோம்.
நீதித்தலைவர்கள காலத்தில் இஸ்ரயேலில் ஒரு பஞ்சம் ஏற்ப்ட்டது. அப்போது, எலிமெலேக்கு என்பவர் தம் மனைவி நகோமி மற்றும் தம் இரண்டு மகன்களோடு யோர்தான் நதியைக் கடந்து மோவாப் என்று அழைக்கப்படும் பகுதிக்குச் சென்றனர்.
அங்கு மகன்கள் மோவாபியப் பெண்களை மணந்தார்கள். அவர்கள் ஒருவர் ஓர்பா; மற்றவர் ரூத்து என்பதாகும். மோவாபில் வசிக்கும் போது, நான்கு முக்கிய நிகழ்வுகள் நடக்கின்றன: எலிமெலேக்கு இறந்துவிடுகிறார், அவரது இரண்டு மகன்கள் இறக்கின்றனர், பஞ்சம் யூதேயாவில் முடிகிறது, நகோமி தனது சொந்த நாடான யூதேயாவுக்குத் திரும்பத் தயாராகிறாள்.
அச்சூழலலில், ரூத் தம் மாமியாருடன் யூதேயாவுக்குத் திரும்ப விழைகிறார். மாமியார் நவோமி தடுத்தும் கேளாமல் மோவாபைவிட்டு உடன்வருகிறார். அவள் ‘ நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்” என்று அடம்பிடித்து உடன் செல்கிறார்.
ஒர்பா மாமியாரின் வேண்டுகோளுக்கு ஏற்ப மோவாப்பில் தங்கிவிடுகிறார்.
நற்செய்தி.
நற்செய்தியில், திருச்சட்ட அறிஞர் ஒருவர், கடவுளின் மிக முக்கியமான கட்டளை என்ன என்பதை இயேசுவிடம் விளக்கச் சொல்லி அவரை சிக்க வைக்க முயற்சிக்கிறார். அறிஞர், அவரது இதர சட்டத் தலைவர்களுடன் சேர்ந்து, திருச்சட்டத்திற்கு எதிரான ஒன்றை இயேசு சொல்வார் என்று எதிர்பார்த்தார்..
இயேசுவோ, “ ‘உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.’ இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக’ என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன” என்று கூறினார். கேள்வி கேட்டவர் வாயடைத்துப் போனார்,
சிந்தனைக்கு.
முதல் வாசகத்தில், ரூத் எனும் மருமகள், மாமியாரிடம், ‘ நீர் செல்லும் இடத்திற்கே நானும் வருவேன்; உமது இல்லமே எனது இல்லம்; உம்முடைய இனமே எனது இனம்; உம்முடைய தெய்வமே எனக்கும் தெய்வம்” என்று கூறியது ஆச்சரியத்துற்குரியதாக உள்ளது. கணவன் இறந்தப் பிறகு, மறுமணம் செய்துகொண்டு தம் பெற்றோர் வாழும் இடத்திலேயே வாழ்வது எளிது. ஆனால் ரூத் ஒரு கைம்பெண்ணான மாமியாரை நம்பி அன்னிய நாடான யூதேயாவுக்கு வலுக்கட்டாயமாகப் புறப்பட்டுப் போகிறாள். நகோமியின் மீது ரூத் கொண்டிருந்த அன்புதான் அவளை யூதாவுக்குச் செல்லத் தூண்டியது. இங்கே அன்பின் பிணைப்பை, உண்மை அன்பின் தன்மையை நம்மால் உணர முடிகிறது.
அன்பு என்பது இயேசுவின் சீடரின் இன்றியமையாத பண்பாகும். யோவான் 13:35-ல், இயேசு தம்முடைய சீடர்களில் ஒருவராக இருப்பதன் அடையாளத்தை, தம்முடைய சீடர்கள் ஒருவரையொருவர் அன்பு செய்யும் விதத்தில் விவரிக்கிறார். அன்பு என்பது ஒருவரின் உணர்வுகளின் உணர்ச்சி வெளிப்பாட்டை விட மேலானது. ஒருவர் தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு முன்பு, முதல் வாசகத்தில் கண்ட ரூத் போன்று, இன்னொருவரைப் பற்றி சிந்திக்க தூண்டுவதே அன்பு.
திருச்சட்ட அறிஞருக்கு இயேசு பதிலளித்த விதத்தில், பத்துக் கட்டளையின் உள்ளடக்கத்தைப் புதியதாகவும் சுருக்கமாகவும் அவர் வழங்கினார். பத்துக் கட்டளைகளில் முதல் மூன்று கட்டளைகள் கடவுள் மீதான அன்போடு தொடர்புடையவை, கடைசி ஏழு கட்டளைகள் அண்டை வீட்டாரின் மீதான அன்போடு தொடர்புடையவை. "உன்னைப் போலவே உன் அண்டை வீட்டாரையும் அன்பு செய்" என்று இயேசு கொடுக்கும் இரண்டாவது கட்டளை முதல் கட்டளையின் விளைவாகும். ஒன்றுவிட்டு மற்றொண்டை ஏற்க இயலாது. இரண்டும் இரு கண்கள் போன்றதாகும்.
முதல் வாசகத்தில் வரும் நோவாமி மற்றும் ரூத் ஆகிய இரு பெண்களுமே தங்கள் வாழ்வின் வறுமையிலும், வளமையிலும் அன்பு செய்தது இறைவனை மட்டுமல்ல…தங்களுடைய அயலாரையும் தான். இப்படியும் ஒரு மருமகளா? என வியக்கும் முறையில் வாழ்ந்து காட்டிய மருமகள் ரூத்துக்கு தாவீது அரசரின் தாத்தாவைப் பெற்றெடுக்கும் பெருமையை வழங்கினார் இறைவன்! என்பதை மத்தேயு நற்செய்தியின் முதல் அதிகாரத்தில் அறிகிறோம்,
ஆகவே, இறையன்போடு நின்றுவிடாமல் நமக்கு அடுத்திருப்பரையும் அன்பு செய்தால்தான் நாம் இயேசுவின் உண்மை சீடராக முடியும் என்பதை மனதில் கொள்வோம்.
இறைவேண்டல்,
ஆண்டவரே, உம்மை அன்பு செய்வதில் ஆர்வம் காட்டும் நான், எனக்கு அடுத்திருப்பவர்களை அன்பு செய்ய தவறியதற்காக வருந்துகிறேன். ஆமென்.
ஆர்கே. சாமி (மலேசியா)
ஜெனிசிஸ் வியவிலியக் கல்வி மையம்
+6 0122285452
Daily Program
